Primary tabs
-
ஒயிலாட்டம்
கிராமத்து இளைஞர்களால் பாடலுடன் நேர்வரிசையில் ஆடப்படும்
ஆட்டம் ஒயிலாட்டம் ஆகும். ஒயில்கும்மி, இராமாயணக்கும்மி என்ற
பெயர்களில் இது அழைக்கப்படுகின்றது. பெண்கள் ஆடும்
வட்டக் கும்மியிலிருந்து ஒயில்கும்மி வேறுபட்டதாகும். ஒயில் என்ற
சொல்லுக்கு ஒய்யாரம், அழகு, நளினம், சாயல், அலங்காரம் என்று
அகராதிகள் பொருள் தருகின்றன. ஒய்யாரம் என்பதற்குக் கம்பீரம்,
எடுப்பு (Majestic) என்ற பொருளைத் தற்காலத் தமிழ் அகராதி
கூறுகிறது. ஒயிலாட்டம் ஆண்கள் ஆடும் ஆட்டமாக இருப்பதால்
கம்பீரமும் எடுப்பும் மிக்க ஆட்டமாக விளங்குகிறது.
ஒயிலாட்டத்திற்கென்று தனித்த ஒப்பனை முறைகள் கிடையாது.
ஆனால் கையில் வண்ணக் கைக்குட்டை பிடித்திருப்பதும் காலில்
கெச்சம் (சலங்கை மணிகள்) அணிவதும் அவசியமாகும். வண்ணக்
கைக்குட்டையை வீசிச் சுழற்றி ஆடும்போது பார்ப்பதற்கு அழகாக
இருக்கும்.
இத்தனை பேர்தான் ஒயிலாட்டம் ஆடவேண்டும் என்ற கட்டுப்பாடு
இல்லை. ஆடத்தெரிந்த, ஆடும் விருப்பமுள்ள எவரும் கலந்து
கொண்டு ஆடலாம். இராமாயணக் கதையைப் பாடிக்கொண்டு ஒரே
வரிசையாகவோ, இரண்டு வரிசையில் நின்றோ ஆடுகின்றனர்.
ஒயிலாட்டி (ஒயிலாட்ட ஆசிரியர்) பாடலைப்பாட ஆட்டக்காரர்கள்
பின்பாட்டுப் பாடிக்கொண்டே முன்னும் பின்னும் சென்று பலவகையான
ஆட்டங்களை ஆடுவர். ஆடிக்காட்டுகின்றனர்.
மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல்,
கோயம்புத்தூர் மாவட்டச் சிறுதெய்வக் கோயில் விழக்களில்
ஒயிலாட்டம் ஆடப்பட்டு வருகின்றது.