Primary tabs
-
வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யும் இயல்பு கொண்டவள் பெண். அந்த வேலைகளைச் செய்வதால் தனது உடலுக்கு ஏற்படும் சோர்வைச் சிறிதும் வெளிக்காட்ட மாட்டாள். எல்லாரிடமும் இன்முகத்துடன் நடந்து கொள்வாள். அத்தகைய குடும்பத் தலைவி செய்த வேலைகளைப் பாவேந்தர் பாரதிதாசன் வரிசைப்படுத்திப் பாடியுள்ளார்.
வீட்டின் உள்பகுதியில் ஒட்டடை படிந்திருப்பதைக் கண்டாள் தலைவி. ஒட்டடைக் கோலை எடுத்தாள். வீட்டின் கூரையிலும் சுவர்களிலும் கட்டியிருந்த சிலந்திக் கூடுகளை எல்லாம் அகற்றினாள்; கரையான் புற்றுகளை அழித்தாள்; வீட்டைத் தூய்மை செய்தாள். வீட்டைத் துப்புரவு செய்தபின் ஆடைகள் தைப்பதற்காக அந்தத் தலைவி தையல் எந்திரத்தின் முன் அமர்ந்தாள். அந்தக் காட்சியை அப்படியே சொல்லோவியமாகப் படைத்துள்ளார் பாரதிதாசன்.
ஆடிக் கொண்டிருந்த தையல்
பொறியினை அசைக்கும் ஓர்கை;
ஓடிக் கொண்டிருக்கும் தைத்த
உடையினை வாங்கும் ஓர்கை;
பாடிக் கொண்டே இருக்கும்
பாவையின் தாமரை வாய்;
நாடிக் கொண்டே இருக்கும்
குடித்தன நலத்தை நெஞ்சம்(குடும்ப விளக்கு I, ‘தையல் வேலை’)
என்னும் வரிகளில் அந்தத் தலைவியின் நெஞ்சத்தில் ஆழ்ந்து இருந்த குடும்ப ஆர்வத்தையும் பாரதிதாசன் அழகாகக் காட்டியுள்ளார்.
குடும்ப வேலைகளைச் செய்து கொண்டிருந்த வேளையில் அந்தத் தலைவிக்குப் பிள்ளைகளின் நினைவு தோன்றியது. பள்ளிக் கூடத்திற்குச் சென்ற பிள்ளைகளில் சிறிய பையன், துள்ளி ஓடும் இயல்பைக் கொண்டவன். ‘அவன் மான் போல் துள்ளி ஓடும்போது எங்கேனும் விழுந்து அடிபட்டு விடுமோ?’ என்று அஞ்சினாள். ‘பெரிய பையனும் அதே பள்ளிக் கூடத்தில்தான் படிக்கிறான்; அவன் கவனித்துக் கொள்வான்’ என்று நினைத்து ஆறுதல்பட்டுக் கொண்டாள்.
குடும்ப வேலைகளுக்கு இடையே ஒரு தாய்க்குத் தனது பிள்ளைகள் பற்றிய எண்ணம் வருவது இயல்பு. அந்த இயல்பான தன்மை கெடாமல் தலைவிக்கு எழுந்த பிள்ளைகளின் நினைவை வெளிப்படுத்தியுள்ளதைப் பாரதிதாசன் கவிதையில் காணமுடிகிறது.