Primary tabs
ஒரு வீட்டில் உள்ள அனைத்திற்கும் பெண்ணே பொறுப்பானவள். அந்தப் பெண்ணைக் குடும்பத்தை ஆள்பவளாக நம் முன்னோர்கள் கருதினார்கள். எனவே, குடும்பத் தலைவியை ‘இல்லாள்’ என்று குறிப்பிட்டார்கள்.
குடும்பத் தலைவிக்கு என்று, வீட்டில் பல கடமைகள் உள்ளன. அந்தக் கடமைகளை அவள் சரியாகச் செய்வதற்கு நல்ல பண்புகள் அவளிடம் இருத்தல் வேண்டும். தலைவியின் கடமைகளையும் நல்ல பண்புகளையும் பாரதிதாசன் குடும்ப விளக்கில் தெளிவாக விளக்கியுள்ளார்.
குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான பண்புகள் அனைத்தையும் கொண்ட பெண்ணுக்கு அதிகாலையில் துயில் எழுதல் முதன்மையான கடமை ஆகும்.
பாவேந்தர் பாரதிதாசன் தமது குடும்ப விளக்கில் கதிரவன் தோன்றும் முன்பே, துயில் எழுந்த தலைவியைக் காட்டுகிறார்.
இந்த உலகத்தை இருளானது போர்வையாகப் போர்த்தியிருக்கிறது. அந்த இருள் போர்வை இன்னும் விலகவில்லை. அதற்கு முன்பாகவே அந்தக் குடும்பத் தலைவி எழுந்து விட்டாள் என்று குறிப்பிட்டு உள்ளார் பாரதிதாசன்.
இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை
இரவுபோர்த்த இருள் நீங்கவில்லை
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல
நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டிருந்ததுதொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது
புலர்ந்திடப் போகும்பொழுது கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்(குடும்ப விளக்கு I, ‘காலை மலர்ந்தது’)
இந்தப் பாடலில் கேள்வியறிவு வளரும்போது மடமை நீங்குவதுபோல் நள்ளிரவு மெதுவாய்க் கழிந்து கொண்டிருந்தது என்று பாரதிதாசன் பாடியுள்ளார். மேலும், அதிகாலையில் கதிரவன் ஒளிபடும்போது இருள் விலகுவதை அழகிய உவமையால் பாரதிதாசன் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொட்டியில் உள்ள நீலச்சாயத் தண்ணீரில் சுண்ணாம்புத் தண்ணீரை ஊற்றும்போது நீலம் மாறி வெண்மை பளிச்சிடுவதைப் போல் காலை மலர்ந்தது என்று அவர் பாடியுள்ளார்.
இப்படிப்பட்ட அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பலரிடம் காணப்படும் சோம்பல் அந்தப் பெண்ணிடம் இல்லை. எழுந்த உடனே சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கினாள் என்பதைப் பாரதிதாசன்,
தூக்கத்தோடு தூங்கியிருந்த
ஊக்கமும் சுறுசுறுப்பு உள்ளமும் மங்கை
எழுந்ததும் எழுந்தன இரு கைவீசி(குடும்ப விளக்கு I, ‘காலை மலர்ந்தது’)
என்று பாடியுள்ளார்.
அந்தத் தலைவியின் தூக்கத்துடன் ஊக்கமும் சுறுசுறுப்பும் தூங்கியிருந்தனவாம். அந்தத் தூக்கம் கலைந்து, விழிப்பு ஏற்பட்டவுடன், அவளுடன் ஊக்கமும் உற்சாகமும் கைவீசி எழுந்தனவாம்.
இருள் இன்னும் முழுவதும் விலகவில்லை. எனவே அந்தத் தலைவி, விளக்கின் ஒளியைச் சற்றுப் பெரிது ஆக்கினாள். அந்த விளக்கின் ஒளி,
சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னால் செய்த பொடிமுத்தைப் போல்(குடும்ப விளக்கு I, ‘கோலமிட்டாள்’)
இருந்தது என்று உவமை நயம் தோன்றுமாறு பாரதிதாசன் பாடியுள்ளார்.
இவ்வாறு அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்புடன் செயல்படும் தலைவியைப் பாரதிதாசன் படைத்துக் காட்டியுள்ளார்.
அதிகாலையில் எழுந்த அந்தத் தலைவி, வீட்டின் பின்பகுதிக்குப் போனாள்; தண்ணீர் இறைத்து முகம், கை, கால்களைக் கழுவினாள். பின்னர், வீட்டின் முன்பகுதிக்கு வந்து முற்றத்தைப் பெருக்கினாள்; தண்ணீர் தெளித்தாள்; முற்றத்தில் மாக்கோலம் போட்டாள். அதிகாலையில் எழுந்து கோலம் போடும் அந்தத் தலைவிக்குப் பரிசு வழங்குவதற்கு எழுந்தது போல் கதிரவன் கிழக்கில் தோன்றினான்; அவளுக்குத் தனது பொன் ஒளியைப் பரிசாக வழங்கினான் என்பதை,
அரிசி மாக்கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி(குடும்ப விளக்கு I, ‘கோலமிட்டாள்’)
என்னும் வரிகளில் பாரதிதாசன் பாடியுள்ளார்.
கதிரவன் யாருக்கும் பரிசாகத் தன் ஒளியை வழங்குவதில்லை. இயற்கையாகத்தான் எல்லாருக்கும் ஒளி வழங்குகிறான். பாரதிதாசன் தனது குடும்ப விளக்கில் தலைவியின் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவே கதிரவன் பரிசு வழங்கியதாகக் கற்பனை பொங்கப் பாடியுள்ளார்.
கோலம் போட்டு முடித்த அந்தத் தலைவி வீட்டினுள் வந்தாள்; யாழின் உறையை நீக்கினாள்; யாழிசை மீட்டி இனிய தமிழிசை பாடினாள். அந்தத் தமிழிசை வீட்டில் உள்ளோர் அனைவரின் காதுகளிலும் தேனாகப் பாய்ந்தது. எல்லோரும் தமிழிசை கேட்டபடியே எழுந்தார்கள். தலைவி இசை பாடிய அழகைப் பாரதிதாசன்,
வாழிய வையம் வாழிய என்று
பாவலர் தமிழில் பழச்சுவை சேர்த்தாள்(குடும்ப விளக்கு I, ‘காலைப்பாட்டு’)
என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு, இனிய இசைபாடி எல்லோரையும் எழுப்பிய அவள் யாழினை உறையில் இட்டாள். வீட்டு வேலைகள் செய்ய எழுந்தாள்.
வீட்டைச் சுத்தம் செய்தாள். பாத்திரங்களைத் துலக்கினாள். மாட்டுத் தொழுவத்திற்குச் சென்று பால் கறந்து கொண்டு வந்து காய்ச்சினாள். அடுப்பைப் பற்ற வைத்து அப்பம் சுட்டாள். குடிப்பதற்குக் கொத்துமல்லி நீர் காய்ச்சி, அதில் காய்ச்சிய பாலையும் சர்க்கரையையும் கலந்தாள்.
அதிகாலையில் இனிய இசைபாடி ஒரு நாளைத் தலைவி தொடங்குவதாகப் பாரதிதாசன் காட்டியுள்ளார். அந்த வேளையிலும் தமிழ் மொழியை மறக்காமல், தலைவி பாடிய பாடல் தமிழ்ப் பாடல் என்பதையும் தெரிவித்துள்ளார்.
தன் கணவனை ‘அத்தான்’ என்று அழைத்தாள் அந்தத் தலைவி. அவன் அருகே வந்ததும், குளிப்பதற்குக் குளிர்ந்த நீரைக் காட்டிக் குளிக்கச் செய்தாள். குளித்த அவனது உடலை வெளுத்த ஆடையால் துடைத்து விட்டாள்.
கணவன் குளித்ததும், கிளி போன்ற தனது பிள்ளைகளை அழைத்தாள். அவர்களின் பொன்னுடல் நோகாமல் சீயக்காய் தேய்த்துக் குளிப்பாட்டினாள். அங்கே பறந்த சிட்டுக் குருவியைக் காட்டியும் சின்னஞ்சிறு கதைகளைச் சொல்லியும் அவர்களை மகிழ்ச்சியுடன் குளிக்கச் செய்தாள் என்பதை,
சிட்டுக் காட்டியும் சிறுகதை சொல்லியும்
தொட்டுத் தேய்த்துத் துளிருடல் நலுங்காது
நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகட்கு
நன்னீராட்டி நலஞ்செய்த ..............(குடும்ப விளக்கு I, ‘குழந்தைகட்குத் தொண்டு’)
என்னும் வரிகளின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில் குளித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் ஒளி பொருந்திய உடலை ‘நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகள்’ என்று குறிப்பிட்டுள்ள அருமை கற்போரை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்யும்.
கணவனும் குழந்தைகளும் குளித்து முடித்து ஆடை மாற்றி வருவதற்குள் அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளை எடுத்து வைத்தாள். காலைச் சிற்றுண்டியை அனைவருக்கும் பரிமாறினாள்.
உணவு உண்டு முடித்த குழந்தைகளை ஒழுங்காக உட்கார வைத்து, பாடம் சொல்லிக் கொடுத்தாள் அந்தத் தலைவி. அன்னையே ஆசிரியையாகிப் பாடம் சொல்லிக் கொடுத்ததால் வீடே அங்குப் பள்ளிக்கூடம் ஆனது. இதை,
அறைவீடு கழகம்;
தவழ்ந்தது சங்கத் தமிழ்ச் சுவை; அள்ளி
விழுங்கினர் பிள்ளைகள்(குடும்ப விளக்கு I, ‘தாய்தான் வாத்திச்சி’)
என்று பாடியுள்ளார் பாரதிதாசன்.
பள்ளிக்குச் செல்லும் நேரம் வந்ததும் குழந்தைகளின் புத்தகப் பையை எடுத்துக் கொடுத்து, அவர்களின் கையில் சிறிய குடையையும் கொடுத்து, பள்ளிக்கு அனுப்பினாள். தெருமுனை வரை சென்ற தலைவி, குழந்தைகள் சென்ற பின் வீட்டுக்கு வந்து கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தாள்.
குழந்தைகளின் தேவைகளை நன்கு கவனித்துச் செய்த தலைவி, அவர்கள் சென்ற பிறகு கணவனைக் கவனிக்க வந்தாள். இந்தக் கருத்தைத் தெரிவிக்க விரும்பிய பாரதிதாசன்,
கிளைமாறும் பசுங்கிளிபோல் ஓடி
அளவளாவினாள் ஆளனிடத்தில்(குடும்ப விளக்கு I ‘பள்ளிக்குப் பிள்ளைகள்’)
என்று பாடியுள்ளார்.
பச்சைக் கிளியானது ஒரு கிளையை விட்டுத் தாவி, வேறு ஒரு கிளையில் அமர்வதைப் போல் பிள்ளைகளைக் கவனித்து அனுப்பிய அந்தத் தலைவி, தனது கணவனைக் கவனிக்கத் தொடங்கினாள் என்று தெரிவித்துள்ளார்.
கடைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான் அவளுடைய கணவன். அவனது சட்டை கிழிந்திருப்பதைத் தலைவி கண்டாள். உடனே அந்தச் சட்டையைக் கையில் வாங்கி, அந்தக் கிழிசலைத் தையல் எந்திரத்தில் வைத்துத் தைத்துக் கொடுத்தாள். கணவன் அந்த ஆடையை அணிந்து கொண்டு கடைக்குப் புறப்பட்டுச் சென்றான்.