தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

C012256.htm-செயல்திறம்

  • 5.6 செயல்திறம்

    யாரும் செயல் அற்று இருப்பதில்லை. எல்லோரும் செயலாற்றுகிறார்கள். ஆனால் எல்லோருடைய செயலும் பலனைத் தருவதில்லை. சிலர் செய்கின்ற செயல் பயன் உடையதாகவும் வேறு சிலர் செய்கின்ற செயல் பயன் அற்றதாகவும் இருப்பதற்குக் காரணம் எது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? இதைச் செயல் செய்யும் வகையாக நீதிநெறிவிளக்கம் தெரிவித்துள்ளது.

    காலம் அறிந்துஆங்கு இடம்அறிந்து செய்வினையின்
    மூலம் அறிந்து விளைவுஅறிந்து - மேலும்தாம்
    சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
    ஆள்வினை ஆளப் படும்
    (51)

    (செய்வினை = செய்யும் செயல், மூலம் = செயலைத் தொடங்கும் காரணம், விளைவு = பயன், சூழ்வன = ஆராய வேண்டியன, துணைமை = உதவி செய்வோர்,  வலி = வலிமை, ஆள்வினை = செயல், ஆளப்படும் = செய்யப்படும்)

    ஒரு செயலைச் சிறப்பாகச் செய்ய விரும்புபவன் அச்செயலைச் செய்வதற்கு உரிய காலத்தையும் இடத்தையும் முதலில் நன்கு அறிந்து கொள்ளவேண்டும்; அதன்பிறகு அச்செயலை எதிலிருந்து தொடங்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்; அச்செயலைச் செய்வதன் மூலம் ஏற்படும் விளைவையும் நன்கு ஆராய்ந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு அச்செயலைச் செய்வதற்கு யாரெல்லாம் நமக்கு உதவியாய் இருப்பார் என்பதையும் அவர்களின் வலிமையையும் அறிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் சிறப்பாகச் செய்து முடிக்க இயலும் என்று நீதிநெறிவிளக்கம் வழிகாட்டுகிறது.

    5.6.1 செயல் செய்யும் முறை

    செயலைத் தொடங்குவதற்கான காலம், இடம், மூலம் முதலானவற்றை எல்லாம் ஒருவன் முடிவு செய்தபிறகு அச்செயலை எப்படிச் செய்யவேண்டும் என்று குமரகுருபரர் கூறியுள்ளார்.

     

    மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்
    எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
    அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்
    கருமமே கண்ணாயி னார்
    (52)

    (மெய்வருத்தம் = உடல் துன்பம், பாரார் = பொருட்படுத்தமாட்டார், துஞ்சார் = தூங்கமாட்டார், செவ்வி = காலம்)

    ஒரு செயலைச் சிறப்பாகச் செய்து முடிக்க விரும்புபவர்கள் தமது உடலளவில் ஏற்படும் துன்பத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள்; பசியையும் தூக்கத்தையும் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்; பிறர் செய்யும் தீமைகளுக்காக வருந்தமாட்டார்கள்; காலத்தின் அருமையையும் கருதமாட்டார்கள்; பிறர் தம்மை அவமதிப்பதை எண்ணியும் வருந்த மாட்டார்கள் என்று செயல் செய்யும் முறையை நீதிநெறி விளக்கம் தெரிவித்துள்ளது

    5.6.2 நற்செயல்

    செயலைத் திறமையாகச் செய்கிறவர்கள் அச்செயலானது சமுதாயத்திற்கு நன்மை தருவதுதானா என்பதை எண்ணிப் பார்த்துச் செய்தல்வேண்டும். அவ்வாறு எண்ணிப் பார்க்காமல் தீய செயல்கள் செய்வதற்கு எளிமையானவை என்று கருதி அவற்றைச் செய்யக்கூடாது.

    சிறுமுயற்சி செய்துஆங்கு உறுபயன் கொள்ளப்
    பெறும்எனில், தாழ்வரோ? தாழார் - அறன்அல்ல
    எண்மைய ஆயினும் கைவிட்டு, அரிதுஎனினும்
    ஒண்மையின் தீர்ந்துஒழுக லார்
    (69)

    (உறுபயன் = பெரும்பயன், தாழ்வரோ = இழிந்த செயல் செய்வரோ, தாழார் = இழிசெயல் செய்யமாட்டார், எண்மைய = எளிமையான, ஒண்மை = நல்ல செயல், ஒழுகலார் = செய்யமாட்டார்)

    சிறிதளவு முயற்சியினாலேயே இழிந்த செயலைச் செய்துவிடமுடியும்; மிகுந்த முயற்சி மேற்கொண்டால்தான் அறம் சார்ந்த நற்செயல்களைச் செய்யமுடியும் என்னும் நிலை ஏற்பட்டாலும் நல்லவர்கள் மிகுந்த முயற்சி செய்து நல்ல செயல்களையே செய்வார்கள்; எளிமையாக இருக்கிறது என்று எண்ணி இழிந்த செயல்களைச் செய்யமாட்டார்கள்.

    மேலே நாம் படித்தபடி நல்ல செயல்களைச் செய்கின்றவர்கள் பிறரது பாராட்டுக்காக ஏங்கித் தவிக்கமாட்டார்கள். பயனற்ற செயலைச் செய்கிறவர்கள் ஆரவாரத் தன்மை கொண்டு அந்தப் பயனற்ற செயலைப் பிறர் புகழவில்லையே என்று புலம்பித் திரிவார்கள்.

    அல்லன செய்யினும் ஆகுலம் கூழாக்கொண்டு
    ஒல்லாதார் வாய்விட்டு உலம்புப; வல்லார்
    பிறர்பிறர் செய்பபோல் செய்தக்க செய்துஆங்கு
    அறிமடம் பூண்டு நிற்பார்
    (71)

    (அல்லன செய்யினும் = பயன் இல்லாதவற்றைச் செய்தாலும், ஆகுலம் = ஆரவாரம், கூழாக்கொண்டு = வருவாயாக எதிர்பார்த்து, ஒல்லாதார் = திறமையில்லாதவர், உலம்புப = புலம்புவர், செய்பபோல் = செய்ததுபோல், செய்தக்க = பயனுள்ள செயல்கள், அறிமடம் பூண்டு = அறிந்தும் அறியாதவர் போல்)

    என்னும் பாடலில் நல்ல செயல் செய்கிறவர்களின் அடக்கம் போற்றப்பட்டுள்ளது. இந்தப் பாடல் கருத்துக்கு ஏற்ப ‘குறைகுடம் கூத்தாடும்; நிறைகுடம் நீர் தளும்பல் இல்’ என்னும் பழமொழி கூறப்படுகிறது.

    குறைவாக நீர் இருக்கும் குடத்தை எடுத்துச் சென்றால் அந்தக் குடத்தில் இருக்கும் நீர் தளும்பி வழியும். ஆனால் நீர் நிறைந்த குடத்தை எடுத்துச் சென்றால் அவ்வாறு தளும்பி வழிவதில்லை. அதுபோல, சான்றோர்கள் தாங்கள் செய்து முடித்த அரிய செயல்களைப் பற்றிப் பிறர் புகழவில்லை என்று வருந்தாமல் அடக்கமாக இருப்பார்கள். ஆனால் பயனற்ற செயலைச் செய்தவர்கள் ஆரவாரம் செய்வார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

    5.6.3 சான்றோர் செயல்

    சான்றோர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு நன்மையையே செய்வார்கள். அவர்கள் ‘கற்பகத் தரு’ போன்றவர்கள் என்று குமரகுருபரர் கூறியுள்ளார்.

    கண்நோக்கு அரும்பா, நகைமுகமே நாள்மலரா,
    இன்மொழியின் வாய்மையே தீங்காயா- வண்மை
    பலமா, நலம்கனிந்த பண்புடையார் அன்றே
    சலியாத கற்ப தரு
    (36)

    (நோக்கு = பார்வை, நகை = சிரிப்பு, வண்மை = ஈகைப்பண்பு, பலம் = பழம்)

    கற்பகத் தரு என்பது கற்பக மரத்தைக் குறிக்கும். இதைத் தேவலோக மரம் என்று கூறுவார்கள். இம்மரம் கேட்டவர்க்குக் கேட்ட பொருளைக் கேட்ட உடனே கொடுக்கும் இயல்பு உடையது. எனவே பிறர் கேட்ட பொருளை உடனே வழங்குபவர்களைக் கற்பக மரம் போன்றவர்கள் என்று புலவர்கள் போற்றிக் கூறுவார்கள். இங்கே சான்றோர்களைக் கற்பகத் தருவுக்கு ஒப்பாகக் கூறியுள்ள குமரகுருபரர் அதை எவ்வாறு ஒப்புமைப்படுத்தியுள்ளார் என்று பார்ப்போமா?

    கற்பக மரத்தில் அரும்பு, மலர், காய், பழம் முதலியவை கிடைக்கும். அதைப்போல, நல்ல பண்புடைய சான்றோர்களின் அருள்பார்வை அரும்பைப் போன்றும், சிரித்த முகம் மலரைப் போன்றும், இனிய சொல் இனிய காயைப் போன்றும் அவர்களின் ஈகைப்பண்பு பழத்தைப் போன்றும் இருப்பதால் சான்றோர்கள் கற்பகத் தருவைப் போன்றவர்கள் என்று குமரகுருபரர் கூறியுள்ளார்.

    சான்றோர்கள் பிறருக்குத் தேவைப்படும் உதவிகளைத் தேவைப்படும் நேரத்தில் செய்கின்ற இயல்பு கொண்டவர்கள் என்னும் கருத்தைப் பின்வரும் பாடல் விளக்குகிறது.

    எவர்எவர் எத்திறத்தர் அத்திறத்த ராய்நின்று
    அவர்அவர்க்கு ஆவன கூறி - எவர்எவர்க்கும்
    உப்பாலாய் நிற்ப,மற்று எம்உடையார் தம்உடையான்
    எப்பாலும் நிற்பது என
    (97)

    (எத்திறத்தர் = எத்தன்மை உடையவர், உப்பாலாய் = மேற்பட்டவராய், எம் உடையார் = ஆசிரியர், சான்றோர்; தம்உடையான் = இறைவன், எப்பாலும் = எல்லா இடங்களிலும்)

    இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பான். என்றாலும் எந்த இடத்திலும் சாராமலும் இருப்பான். அதைப்போல, சான்றோரும் யார் எத்தன்மை உடையவரோ அத்தன்மைக்கு ஏற்ப அவரவர்க்கு வேண்டிய நல்லறிவுரைகளை வழங்கி அவர்களுடன் சாராமல் இருப்பர் என்று நீதிநெறி விளக்கம் சான்றோரின் செயலை விளக்கியுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:20:20(இந்திய நேரம்)