Primary tabs
-
6.1 இல்லறம்
கணவனும் மனைவியும் மக்களைப் பெற்று இல்வாழ்க்கைக்குரிய அறங்களைச்செய்தல் - மனையறம் காத்தல் இல்லறம் ஆகும். அகநானூறு திருமணத்தில் தொடங்கி மனையறத்தின் பல்வேறு கூறுகளையும் கூறுகிறது. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தாங்களே சந்தித்தித்துக் காதல் கொண்டு; உடன்போக்கு மேற்கொண்டு திருமணம் செய்துகொள்ளல், காதல்கொண்டோர் பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ளல், பெற்றோரின் ஏற்பாட்டில் திருமணம் செய்துகொள்ளல் என்ற மூன்று வகையான திருமணங்களிலும் இல்லறம் தொடங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல சடங்குகள், நடைமுறைகள் வழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
• பருவப் பெண்ணுக்குப் பாதுகாப்பு
பெண்கள் பருவம் அடைந்ததும் அவர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்புக் கொடுப்பது, இன்று மட்டுமல்ல அன்றும் நிலவிய பழக்கம் ஆகும். இதற்கு இற்செறிப்பு என்று பெயர். கீழ்க் காணும்பகுதி இதற்குச் சான்று ஆகும்.
பெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண்
கண்துணை யாக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே நெஞ்சம், பெயர்த்தும்
அறியா மையின் செறியேன் யானே(315)என்ற பாடற் பகுதி, ஒரு தாயின் புலம்பலாகும். தனது பெண்ணின் பருவ வளர்ச்சியை அவளது பெண்மை உறுப்புகளின் வளர்ச்சியால் தாய் தன் கண்ணால் நோக்கி அறிந்து கொண்டாள். பெண்மை காரணமாகப் பாதுகாப்புக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கவில்லை. அதற்காக வருந்துகிறாள்.
• வீட்டைப் புதுப்பித்தல்
திருமணத்திற்காக வீட்டைப் புதுப்பிக்கும் பழக்கம் இருந்தது. இதனை,
கடலம் தானைக் கைவண் சோழர்
கெடலரு நல்லிசை உறந்தை அன்ன
நிதியுடை நல்நகர் புதுவது புனைந்து
தமர்மணன் அயரவும்- (369)என்ற பாடற் பகுதியால் அறியலாம். இப் பாடற் பகுதி சுற்றத்தாருடன் கூடிப் பெற்றோர் செய்யும் திருமணம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. சோழரின் புகழ் படைத்த உறந்தை நகர் போலச் செல்வம் நிறைந்த நல்ல மனையைப் புதுப்பித்து, சுற்றத்தார் திருமணம் செய்தனர் என்ற செய்தி பாடலில் இடம்பெற்றுள்ளது.
• சிலம்புகழி நோன்பு
திருமணத்திற்கு முன்பாகப் பெண்ணின் வீட்டில் அவளது தாய், தலைவி அணிந்திருக்கும் சிலம்புகளை அகற்றுவாள். இது ஒரு விழாவாக நடைபெறும். இதற்குச் சிலம்பு கழி நோன்பு என்று பெயர். காதலனுடன் சென்றுவிட்ட தன் பெண்ணுக்குச் சிலம்பு கழி நோன்பு செய்ய முடியாத தாயின் புலம்பலில் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.
... என் சிறுமடத் தகுவி
சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓர்ஆ யாத்த ஒருதூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ
மேயினள் கொல்?என நோவல் யானே.(369)என்பது சிலம்பு கழி நோன்பு பற்றிய செய்திகளைத் தரும் பகுதியாகும். இந் நோன்பு பெண் வீட்டில் நடப்பதே முறை என்றும் அழைத்துச் சென்ற ஆடவன் வீட்டில் நடப்பதை இழுக்காகவும் கருதியுள்ளனர் என்பதை மேற்கூறிய பாடற்பகுதிகள் விளக்குகின்றன.
• பரிசம் போடுதல்
திருமணத்திற்கு முதல்நாள் மாலை அல்லது முன்இரவில் பரிசம் என்ற சடங்கு இன்றளவும் கிராமப்புறங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று மணமகன் வீட்டார், வரதட்சணை என்ற பெயரில் பணமும் பொருளும் பெறுவது போல, முன்னர் மணமகள் வீட்டார் முலை விலை, சிறுவளை விலை, பாசிழை விலை என்ற பெயரில் பணமும் பொருளும் பெற்றனர். இதைப் பரிசம் போடுதல், பரியம் போடுதல் என்ற சடங்காகவே நடத்தினர். இப்பாசிழை விலை குறித்த சான்று அகநானூற்றில் உள்ளது.
கருங்கண் கோசர் நியமம் ஆயினும்
உறும்எனக் கொள்குநர் அல்லர்.
நறுநுதல் அரிவை பாசிழை விலையே!(90)கோசர்களின் (ஓர் அரச பரம்பரையினர்) வளப்பம் மிக்க, புது வருவாயை உடைய நியமம் என்ற ஊரையே பாசிழை விலையாகக் கொடுத்தாலும் இவள் வீட்டார் ஏற்பார் அல்லர் என்ற செய்தி பாடலில் இடம்பெற்றுள்ளது.
• திருமண நிகழ்வு
திருமணம் என்ற நிகழ்வு, பல சடங்குகளை உள்ளடக்கியது ஆகும். நல்லாவூர் கிழார் என்ற புலவர் அச் சடங்குகளையெல்லாம் தொகுத்து வழங்கியுள்ளார்.
பாடற் பகுதி (86) சடங்குகளில் பலவற்றைக் குறிப்பிட்டுள்ளது. அவை வருமாறு,
-
தீய கோள்களின் தொடர்பு இல்லாத வளைந்த வெண்சந்திரனை, புகழுடைய உரோகிணி விண்மீன் கூடிய நல்ல நாளைத் திருமணத்திற்குத் தேர்ந்தெடுத்தனர்.
-
இருள் முற்றிலும் நீங்கிய இனிய காலைப் பொழுதில் திருமணம் நடந்தது.
-
வாசலில் வரிசையாகக் கால்கள் நட்டு, பந்தல் போட்டு அதில் மணல் பரப்பப்பட்டது.
-
பந்தலின் ஒரு பகுதியில் மனைவிளக்கு ஏற்றப்பட்டது. மாலைகள் தொங்கவிடப்பட்டன.
-
தலையிலே குடத்தையும் கைகளிலே கலயங்களையும் உடையவரும் குரவை ஒலி எழுப்புபவரும் ஆகிய முது பெண்டிர் வேண்டியவற்றை முறையாக எடுத்துக் கொடுத்தனர்.
-
பிள்ளைகளைப் பெற்றெடுத்த, ஆபரணங்கள் அணிந்த பெண்கள் நால்வர் கூடி, கற்பிலிருந்து வழுவாமல், கணவனோடு அவனை என்றும் விரும்பிப் பேணுபவளாக இனிது வாழ்க என வாழ்த்தி, திருமணத்தை நடத்தினர்.
-
அலரிப் பூ, நெல் ஆகியவை கலந்த நீரைத்தெளித்து வாழ்த்தினர்.
-
திருமணத்தின்போது உழுந்து கலந்து குழைவாகச் சமைத்த சோற்று உருண்டைகளை உணவாக அளித்தனர்.
- இப்படியாக வதுவை என்னும் மணம் நடந்தது.
எனத் திருமணம் நடந்த விதத்தைப் பாடல் விளக்கியுள்ளது. இதற்கு மேலும் பல தகவல்களை விற்றூற்று மூதெயினனார் பாடல் (136) தருகிறது.
-
பறவைச் சகுனம் பார்த்தனர்.
-
கடவுளை வாழ்த்தினர் - வழிபட்டனர்.
-
மணமுழவையும் முரசங்களையும் ஒலிக்கச் செய்தனர்.
-
வெள்ளிய நூலில் வாகை இலையையும் புதிதாக முளைத்து வந்த அருகம் புல்லையும் சேர்த்துக் கட்டி, காப்பாக அணிவித்தனர்.
-
புத்தாடை அணிவித்தனர்.
-
திருமண விருந்தாக நெய்யும் இறைச்சியும் கலந்து சமைத்த சோற்றை வழங்கினர்.
திருமணம் முடிந்த அன்றைய தினமே முதலிரவை நடத்தினர். அன்றைய தினம் பெண்கள், பேசா மடந்தையாக - புத்தாடைக்குள் முகத்தை முற்றிலுமாக மறைத்துக் கொள்ளும் மிகுநாண் கொண்டவர்களாக விளங்கியுள்ளனர்.
தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்
உவர்நீங்கு கற்பின்எம் உயிர்உடம் படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்
பெரும்புழுக் குற்றநின் பிறைநுதல் பொறிவியர்
உறுவளி ஆற்றச் சிறுவரை திறஎன
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறைகழி வாளின் உருவுப்பெயர்ந்து இமைப்ப
மறைதிறன் அறியாள் ஆகி,
ஒய்யென நாணினள்(136)(முருங்கா = கசங்காத; பிறைநுதல் = பிறை போன்ற நெற்றி; கலிங்கம் = புத்தாடை; பொறிவியர் = அரும்பும் வியர்வை)என்ற பாடற் பகுதிகள் மேற்கூறிய செய்திகளுக்குச் சான்றுகளாகும்.
குடும்ப வாழ்க்கை முழுமை பெறுவது பிள்ளைப் பேற்றிலேயே ஆகும். குழந்தை பெற்ற பெண்கள் போற்றப்பட்டனர். குழந்தை, குடும்ப விளக்காகக் கருதப்பட்டது.
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்காகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு
சிறப்பின் நன்ன ராட்டி(184)என்ற பாடற்பகுதி மேற்கூறிய செய்தியைத் தருகிறது.
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமைப் பயனும் மறுவின்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி!(66)பிள்ளைச் செல்வம் இம்மையில் இனிமை பயப்பதற்கு மட்டும் அல்லாமல் மறுமைப்பயன் தரக்கூடியது என்று மக்கள் நம்பினர். வீடுபேறு (மோட்சம்) அடைவதற்குக் குழந்தைப் பேறு இன்றியமையாதது. இறந்த பின் ஈமச்சடங்குகள் நடத்தவும் ஆண்டுக்கு ஒருமுறை தென்புலத்தார் கடன் செய்யவும் பிள்ளை அவசியம் என்பதைப் பழைய இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அதில் அகநானூறும் தன் பங்கைச் செலுத்தியுள்ளது.
இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தம் குடும்பக் கடமையோடு சமுதாயக் கடமையும் இருக்கிறது என்று வாழ்ந்தவர்கள் சங்க காலத் தமிழர்கள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றும் அறநூலும் ஆகிய திருக்குறள்,
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.(41)துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.(42)தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.(43)என்ற குறள்களின் வழி இல்லறத்தார் ஆற்ற வேண்டிய சமுதாயக் கடமைகளைப் பட்டியலிட்டுள்ளது.
இறந்தவர்களுக்காக வேண்டி அவ்வப்போது செய்யப்படும் சடங்குகள் தென்புலத்தார் கடன் என்ற பெயரால் குறிக்கப்படும். இதை ஒரு சமுதாயக் கடமையாகக் கொண்டனர். உதியன் சேரலாதன் என்ற சேரப் பேரரசன் துறக்கம் (மோட்சம் - முத்தி - வீடுபேறு) அடைந்த தன் முன்னோருக்காக வேண்டிச் செய்த தென்புலத்தார் கடன் அகநானூற்றில் பதிவாகியுள்ளது.
மறப்படைக் குதிரை, மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொல்லா நல்லிசை
முதியோர்ப் பேணிய உதியஞ் சேரல்.(233)என்ற பாடற் பகுதி மேற்கூறிய செய்திக்குச் சான்று ஆகும். இறந்தவர்களுக்குக் கடமை ஆற்றியதோடு தங்கள் கடமை முடிந்தது என்று வாழவில்லை. வறியர் முதலானோருக்கு உதவ வேண்டும் என்றும் வாழ்ந்தனர். இதனை வெளிப்படுத்துவதாக,
இரப்போர் ஏந்துகை நிறையப் புரப்போர்
புலம்பில் உள்ளமொடு புதுவ தந்துவக்கும்
அரும்பொருள் வேட்டம்- 389என்னும் பாடலும் 53, 173, 231 ஆகிய பாடல்களும் அமைந்துள்ளன. இவை, வறியவர்களுக்கு வழங்குதல், சுற்றத்தாரைப் பேணுதல், இல்லறம் பிழையாமல் வாழ்தல் ஆகியவற்றைப் பழந் தமிழர்கள் தம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார்கள் என்பதைப் பறைசாற்றுகின்றன. காதல் மனைவியைப் பிரிந்து பொருளீட்டச் செல்வது மனைவியருக்கும் துன்பம், கணவன்மாருக்கும் துன்பம் என்றாலும் அடுத்தவர்களுக்கு உதவுவதற்காக அத்துன்பங்களை ஆடவரும் பெண்டிரும் ஏற்றுக்கொண்டது எண்ணி வியக்கத் தக்க செயலாகும்.
மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை
விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே!(384)என்ற பாடற்பகுதி விருந்து ஓம்பும் சங்கத் தமிழனின் சால்பைப் பறைசாற்றுவதாகும். வெளிநாடு சென்றிருந்த கணவன் வீடு திரும்பியதால் மனைவி பெற்ற அழகு, விருந்து உபசரித்தல் என்று அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் படம்பிடித்துள்ளது.
-