Primary tabs
-
6.4 தொழில்கள்
அக்காலத்து நடைபெற்ற தொழில்கள் பற்றிய பல குறிப்புகள் அகநானூற்றில் காணக் கிடைக்கின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
சங்க காலத்தில் உழவே தலைமையான தொழிலாக விளங்கிற்று. உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்த புலவர்கள் உழவின் நுட்பங்கள் பற்றிப் பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். நெல் பயிரிடுதலில் பல்வேறு நிலைகள் உள்ளன. நிலத்தை உழுதல், நீர் பாய்ச்சுதல், விதை விதைத்தல், நாற்று நடுதல், உரமிடுதல், களையெடுத்தல், பின் உரிய காலத்தில் அறுவடை செய்தல் என்பன அவை.
இவற்றுள் உழவுக்குரிய கலப்பை - நாஞ்சில் பற்றிய குறிப்பு, பாடல் 141இல் இடம்பெற்றுள்ளது. 'இருங்கழிச் செய்யின் உழாஅது செய்த வெண்கல் உப்பின்' - (140) எனவரும் தொடர், உழுது விளைவிப்பது பயிர்; உழாது விளைவிப்பது உப்பு என்ற பொருளைத் தருகிறது. (செய்யில் - வயலில்)
உழவுத் தொழிலுக்கு அடிப்படையான நீர்நிலைகளை இரவும் பகலும் காத்து நீரை ஒழுங்குபடுத்தும் காவலர்கள் இருந்துள்ளனர் என்ற செய்தியைப் பாடல் 252 கூறுகிறது.
வெளிநாட்டு வணிகம், உள்நாட்டு வணிகம் என்ற இரு நிலைகளில், பண்டமாற்றாகவும் பொற்காசுப் பரிமாற்றத்திலும் வணிகம் நிகழ்ந்துள்ளது. இவற்றில் சிலவற்றுக்கான சான்றுகள் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன.
• உள்நாட்டு வணிகம்
உள்நாட்டு வணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையில் நடைபெற்றது. வணிகத்தில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபட்டதற்கான குறிப்புகள் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன.
கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரி விலைமாறு கூறலின்.(140)நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
கொள்ளீ ரோஎனச் சேரிதொறும் நுவலும்
அவ்வாங்கு உந்தி அமைத்தோ ளாய்நின்(390)ஆகிய பாடற்பகுதிகளில் உப்பைக் கொடுத்து, நெல்லை ஈடாகப் பெற - வணிகம் செய்ய- பெண்கள் ஊர் ஊராகச் சென்ற செய்தி இடம்பெற்றுள்ளது.
ஒருத்தி நெல்லை ஏற்காமல் கழற்சிக் காய் அளவிலான முத்துக்களையும் ஆபரணங்களையும் பண்டமாற்றுப் பெறுகிறாள். இதனைப் பாடல் 126ஆல் அறியலாம்.
• வெளிநாட்டு வணிகம்
அயல்நாட்டுப் பொருட்களைக் கொணர்வதும் தம் நாட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதும் ஆகிய அன்னியச் செலாவணியில் அன்றைய தமிழகம் சிறந்திருந்தது.
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி(149)(கலம் = கப்பல்; கறி = மிளகு; பெயரும் = திரும்பும்)என்ற பாடற்பகுதி, யவனர் தம் அழகான வேலைப்பாடு அமைந்த மரக்கலங்களில் பொன்னைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, மிளகை ஏற்றிச் செல்லும் செய்தியைக் குறிப்பிட்டுள்ளது. மேலும், முசிறி என்ற துறைமுகத்தையும் குறிப்பிட்டுள்ளது. கடல் வாணிகத்தின் சிறப்பை விளக்கும் வகையில், அதற்கு ஆதாரமான துறைமுகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கொற்கைத் துறைமுகம் பற்றிப் பாடல்கள் 27, 130, 201, 350 ஆகியவற்றில் பேசப்பட்டுள்ளது. இது, கடல் வணிகத்தின் சிறப்பைக் காட்டுகிறது.