Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1. பெருந்தலைச் சாத்தனாரின் குடும்ப நிலை எத்தகையது?
“சமையலை அறவே மறந்த அடுப்பு; அதன் பக்கங்கள் ஓங்கி மேடாக உள்ளன. அங்குச் சமையல் நடைபெறாததால் காளான் பூத்துக் கிடக்கின்றது. குழந்தை பசியால் வருந்துகின்றது. என் மனைவியின் மார்பு பாலி்ன்மையால் தோலாய்ச் சுருங்கி அதன் துளை தூர்ந்து வறுமைப்பட்டுக் கிடக்கின்றது. அம்மார்பகத்தைச் சுவைக்கும் குழந்தை பால் பெறாமையால் சுவைக்கும் போதெல்லாம் அழுகின்றது. அழும் குழந்தையைக் கண்ட என் மனைவியின் ஈரம் பொருந்திய இமைகளையுடைய குளிர்ந்த கண்கள் நீரால் நிறைகின்றன. இத்தகைய துன்பத்தைக் காணும்போது இதனைத் தீர்க்கக் கூடியவன் நீயென்று நினைத்து உன்னிடம் வந்தேன். பலவகையான பண்களையும் எழுப்பி இசைத்தற்குரிய நரம்பினை உடையதும் தோலால் போர்க்கப்பட்டதும் ஆகிய நல்ல யாழையும், கரிய மண் பூசப்பெற்ற மத்தளத்தையும் கொண்ட கூத்தருடைய வறுமையைப் போக்கும் குடியில் நீ பிறந்தவன். எனவே வறுமையுற்று நிற்கும் நான் உன்னை வளைத்தாவது பரிசில் பெறாமல் போக மாட்டேன்” எனப் புலவர் தன் வறுமையைக் கூறுகிறார்.