தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விகற்பம் உடைய தொடைகள்

  • 6.1 விகற்பம் உடைய தொடைகள்

    விகற்பம் உடைய தொடைகள் ஐந்து. அவை:

    1. மோனைத் தொடை
    2. இயைபுத் தொடை
    3. எதுகைத் தொடை
    4. முரண் தொடை
    5. அளபெடைத் தொடை

    6.1.1 விகற்பம் ஒரு விளக்கம்

    விகற்பம், வேறுபாடு, வகை என்பன திரிபு எனும் ஒரே பொருளைப் பயக்கும் சொற்கள் ஆகும்.

    தொடை விகற்பம் என்பதே அதன் பன்மையை உணர்த்துகிறது. பல வகையாவன: இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று.

    தொடை விகற்பங்களைக் காணப் புலவர்கள் எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட அல்லது நேரப்பெற்ற (நேர்ந்து கொள்ளப்பட்ட) அடி, அளவடி என்பதை முன்னர்ப் பார்த்தோம். இதன் காரணமாகவே அளவடி, நேரடி எனவும் பெற்றது என்பதையும் முன்னம் பார்த்துள்ளோம். சீர்கள் நான்கனைக் கொண்ட அடி, நேரடி அல்லது அளவடி. அளவடி என்பதை மரம் அல்லது செடியாகக் கருதி விளக்கம் காண்போம்.

    செடி அல்லது மரத்தின் உறுப்புகள் வேர், அடி(தண்டு), கிளை, தழை போல்வனவாகும். வேர்ப்பகுதியை முதல் சீராகவும், அடிப்பகுதியை இரண்டாம் சீராகவும், கிளைப்பகுதியை மூன்றாம் சீராகவும், தண்ணிய தழையும் பூக்களையும் கொண்ட தலைப்பகுதியை (தண்டலையை) நான்காம் சீராகவும் பாவித்துக் கொள்ளுங்கள். செடி அல்லது மரத்தின் எவ்வெப்பகுதிகளில் அடர்த்தி - செறிவு - கதுப்புக் காணப்படுகின்றதோ அவ்வப்பகுதிகளைத் தொடையமைந்த சீர்களாகக் கருதிக் கொண்டு கண்டால் விகற்பங்களைப் புரிந்து கொள்ளுதல் உங்களுக்கு எளிமையாகும்.

    மரமோ செடியோ தரையின் மேல் நிற்க வேண்டுமென்றால், ஆணிவேருடன் (Primary Root) பக்கவேர்கள் (Lateral Roots) கிளைவேர்கள், வேர்த்தூவிகள் ஆகியவற்றின் தொகுதி வேண்டும். அதுபோலத் தொடைவிகற்பங்களை அறிய இன்றியமையாது ஓர் அடியின் முதல் சீரில் யாதேனும் ஒரு தொடை அமைந்தே வரல் வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்.

    6.1.2 சீர்த்தொடைகளின் பெயரும் பெயர்க்காரணமும்

    செய்யுள் ஒன்றின் எல்லா அடிகளிலும் அமையும் தொடைகளை ‘அடித்தொடைகள்’ என்றும், ஓர் அடியின் சீர்களுக்குள்ளே அமையும் தொடைகளைச் ‘சீர்த்தொடைகள்’ என்றும் வழங்குகின்றோம். அளவடி அல்லது நேரடி ஒன்றிலுள்ள நான்கு சீர்களில் சிலவற்றில் தொடை அமைந்தும் சிலவற்றில் அமையாதும், நான்கு சீர்களிலும் முற்ற அமைந்தும் வருவதனைக் கண்டு அவ்வகை விகற்பங்களுக்குப் பெயரிட்டுள்ளனர். அப்பெயர்கள் இணைத்தொடை முதலான ஏழு ஆகும். இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் முற்று என்பவற்றிற்கான பெயர்க் காரணத்தை, இனி, வரிசையாகக் காண்போம்.

    • இணை (1, 2 சீர்களில் அமைவது)

    முள்ளங்கிச் செடியின் வேர்ப்பகுதி மட்டுமல்லாமல் தழைப் பகுதியும் செறிந்து காணப்படும். அதாவது வேர்ப்பகுதியாகிய முதல் பகுதியும், வேர்ப்பகுதியோடு இணைந்து காணப்படும் அடிப்பகுதியும் இரண்டாம் பகுதியும் செறிந்து/கதுவிக் காணப்படுவன. இவ்வாறு, ஓரடியின் முதலிரு சீர்களில் மோனை முதலியன அமைந்து மூன்று, நான்கு சீர்களில் அவை, அமையாது போவதை ‘இணை’ என்கின்றனர். இணை-துணை, சோடி, ‘கால்இணை’ ‘இணைமலர்ப் பாதம்’ என்று வருவதனைப் பாருங்கள். 1,2 சீர்களில் அமைவது இணை.

    • பொழிப்பு (1, 3 சீர்களில் அமைவது)

    பொழிப்பு என்பதற்குச் ‘சிறப்பு’ என்பது பொருள். ‘பொழிப்பா டென்பது புகழெனப் படுமே’ என்பது அகராதி நிகண்டில் காணப்படும் நூற்பாவாகும். எவ்வகைப்பாவின் அடியிலும் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை முதலாய தொடைகள் அமையப் பாடுவது சிறப்பு. ‘நாற்சீரடி பொழிப்பு நன்றே’ என்பது இலக்கணச் சூடாமணி. யாப்பு நூல் உரையாசிரியர்கள் எல்லோரும் ‘பொழிப்பு’ச் சிறப்புடையது என்கின்றனர். சிறப்பும் புகழும் உண்டாக்கும் தொடையைப் பொழிப்புத் தொடை என்றனர் எனலாம். குடைமரம் எனப்படுவதன் முதல் பகுதியாகிய வேர்ப்பகுதியும் கிளைப்பகுதியாகிய மூன்றாம் பகுதியும் செறிந்து (கதுவிக்) காணப்படுவன. இரண்டாம் பகுதியாகிய அடிப்பகுதியிலும் நான்காம் பகுதியாகிய தலைப்பகுதியிலும் செறிவு காணப்படுவதில்லை.

    அதுபோல, முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் தொடைநயம் அமையப்பெற்றும் இரண்டாம் நான்காம் சீர்களில் அமையப்பெறாமலும் வருவதைப் பொழிப்புத் தொடை என்கின்றோம்.

    • ஒரூஉ (1, 4 சீர்களில் அமைவது)

    தென்னை மரத்தின் முதல் பகுதியாகிய வேர்ப்பகுதியில் அடர்த்தி - செறிவு - கதுவுதல் - காணப்படும். அவ்வாறே தலைப்பகுதியாகிய நான்காம் பகுதியிலும் செறிவு காணப்படும். ஏனையதாகிய நடுப்பகுதியில் செறிவு ஒருவி (நீங்கி)க் காணப்படும்.

    • “அம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் அகற்றி”

    (1) (2) (3) (4)

    என்னும் இந்த நான்கு சீர்கள் கொண்ட அளவடியையும் பாருங்கள். இவ்வடியின் முதல் சீரில் ‘அ’ முதல் எழுத்தாக அமைந்துள்ளது. நான்காம் சீரிலும் ‘அ’ என்பது முதலெழுததாக வந்துள்ளது. எனவே, முதலெழுத்துச் சீரின்கண் ஒன்றிவருதலாகிய மோனை அமைப்பைக் காண்கின்றோம். இம்மோனை அமைப்பு இரண்டாம் மூன்றாம் சீர்களில் இல்லை. ஒருவி இருப்பதைக் காண்கின்றோம். இவ்வாறு அமைய வருவது ஒரூஉ எனப்பெறும்.

    • கூழை (1,2,3 சீர்களில் அமைவது)

    கூழை என்பது கூந்தலையும் குறைவு அல்லது குறுமையையும் குறிக்கப்பயன்படும் சொல். அறல்மணலின் ஒழுக்குப் போல முதலில் பரந்து இறுதியில் குறைந்து காணப்படுவதால் மகளிர் கூந்தலைக் ‘கூழைக் கூந்தல்’ என்பர்.

    கூழை என்பதன் பொருள் ’இறுதி அல்லது கடைசி’யுயாம்.

    ‘கூழை இரும்பிடிக் கைகரந்த தள்ள - பேழ்இரும்துறுகல்’ (குறுந்.111:4) என்ற இவ்வடியில் இடம்பெறும் ’கூழை என்பதற்குக் குறுமை என்பது பொருள். சீர்கள் நான்கினைக் கொண்ட அளவடியின் இறுதிச் சீரில் தொடையமையாது வருவது, அல்லது தொடையமைவு குறைந்து வருவது கூழைத் தொடையாயிற்று.

    தாழையின் வேர்ப்பகுதியாகிய முதற்பகுதி வேரினால் செறிந்து கிடக்கும். மணற் பாங்கான இடத்தில் தாழை காணப்படுவதால் நிலைத்தன்மைக்காக அடிப்பகுதியில் ஊன்று வேர்களை (shift roots) விடுகின்றது காரணமாம். மூன்றாம் பகுதியாகிய மடல்பகுதியும் செறிந்து காணப்படும். அத்தகைய செறிவு பூ விடுவதற்காகத் தோன்றும் காம்புகளில் காணப்படாது. அஃதாவது, இறுதிப்பகுதி தவிர ஏனைய பகுதிகளில் செறிவு காணப்படுகின்றது. இவ்வாறே ஓர் அளவடியின் இறுதிச்சீர் ஒழித்து ஏனைய மூன்று சீர்களில் தொடை அமைய வருவது கூழைத் தொடையாம்.

    • கன்ற ல்குல் ம்நுண் மருங்குல்’

    இந்த அளவடியில் 1,2,3 ஆகிய மூன்று சீர்களில் மோனை வந்துள்ளது; இறுதிச்சீரில் வரவில்லை. இவ்வாறு இறுதிச் சீர் ஒன்றனில் மட்டும் தொடையமையாமல் வருவது கூழைத் தொடையாம்.

    • மேற்கதுவாய் (1,3,4 சீர்களில் தொடை அமைவது)

    புளிய மரத்தின் முதற்பகுதியாகிய வேர்ப்பகுதி கதுவிக் கொண்டிருக்கும். இரண்டாம் பகுதி அடிப்பகுதி. இதன் அடிப்பகுதியில் செறிவு காணப்படாது. மூன்றாம் பகுதியாகிய கிளைப்பகுதியும் நான்காம் பகுதியாகிய தழைப் பகுதி (தலைப்பகுதி)யும் செறிவாகக் காணப்படுவன. ஆக, மரத்தின் மேற்பாதி அடர்ந்தும் கீழ்ப்பாதியில் அடர்த்தியின்றியும் காணப்படும். இவ்வாறு 1,3,4, பகுதிகளில் மட்டுமே கதுவிக் கிடப்பதைக் காண்கின்றோம். இவ்வமைப்பு மேற்கதுவாய் என்னலாம்.

    • ரும்பிய கொங்கை, வ்வளை மைத்தோள்’

    இந்த அளவடியில் இரண்டாம் சீரில் தொடை அமையவில்லை. ஏனைய 1,3,4 ஆம் சீர்களில் ‘அகரம்’ ஒன்றிவந்து மோனைத்தொடை அமைகின்றது. அடியின் பின்பாதியில் மோனைச் செறிவு; முன்பாதியில் செறிவு இல்லை. ஆதலின், மேற்கதுவாய்த் தொடை.

    • கீழ்க்கதுவாய் (1,2,4 சீர்களில் தொடை அமைவது)

    கற்றாழைச் செடியின் முதல் பகுதியாகிய வேர்ப்பகுதி, வேர்களால் செறிந்து தோன்றும். மேலும் அடிப்பகுதியாகிய இரண்டாம் பகுதியும் மடல்களால் கதுவித் தோன்றும். இதன் மூன்றாம் பகுதியான நீண்டதொரு காம்பில் செறிவு காணப்படுவதில்லை. காம்பின் உச்சி நான்காம் பகுதி. உச்சியில் நான்கு மடல்களும் ஒரு பூவும் தோன்றுவன. இப்பகுதியும் அடர்ந்து காணப்படும்.

    ஆக, முதல், அடி, தலை என்ற மூன்று பகுதிகள் கதுவிக் கொண்டிருக்கும். மூன்றாம் பகுதியாகிய காம்புப் பகுதியில் அடர்த்தி இருக்காது. இவ்வாறு கற்றாழை போலும் செடிகள் சில கீழே கதுவிய நிலையில் தோன்றுகின்றன.

    • விர்மதி னைய திருநுதல் ரிவை’

    என்ற அளவடியைப் பாருங்கள். இதன் 1,2,4 சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரும் மோனையழகைப் பார்க்க முடியும். இம்மோனை மூன்றாம் சீரில் இல்லை. இது. நமது ஒட்டுமொத்தப் பார்வையில் முன்பாதியில் தொடைச்செறிவு உடையதாகப்படுகின்றது. எனவே, இவ்வமைப்புக் கீழ்க் கதுவாய் எனப்படுகின்றது. இங்ஙனம் 1,2,4 சீர்களில் கதுவிவரும் தொடையைக் கீழ்க்கதுவாய்த் தொடை என்பர்.

    • முற்று (1,2,3,4 ஆகிய சீர்கள் எல்லாவற்றிலும் அமைவது).
    • யில்வேல் னுக்கி ம்பழைத்து மர்ந்த’

    என்னும் இந்த நேரடியைக் காணுங்கள். இதன்கண் உள்ள நான்கு சீர்களிலும் உள்ள முதலெழுத்து ‘அ’ என அமைகின்றது. இவ்வாறு முதலெழுத்து ஒன்றி வருவதை மோனை என்போம் அல்லவா? ஒரு சீரிலும் ஒழிதலின்றி எல்லாச் சீர்களிலும் முற்றாக (முழுதாக) மோனை முதலாயின (தொடைகள்) அமைவது முற்று எனப்பெறும்.

    ஆலமரத்தின் முதல்பகுதி வேர்ப்பகுதி. இதனை முதல் சீராகக் கொள்ளுங்கள். இரண்டாம் பகுதி அடிப்பகுதி. இப்பகுதி புளி, மா, பலா போலச் செறிவின்றிக் காணப்படுவதில்லை. விழுதுகளை (Prop Roots) வீழ்த்தியுள்ளதால் அடிப்பகுதியும் செறிவுடன் காணப்படும். மூன்றாம் பகுதியாகிய கிளைப்பகுதியும் நான்காம் பகுதியாகிய தலைப்பகுதியும் (தழைப்பகுதியும்) ஆகிய இவ்விரு பகுதிகளும் செறிந்து காணப்படுவன), ஆக, நான்கு பகுதியும் அல்லது பகுதிகள் முற்றும் கதுவித் தோன்றும். இவ்வமைப்பை. 1,2,3,4 சீர்களில் மோனை முதலாயின ஒன்றி அமையும் முற்றுடன் ஒப்பவைத்துப் பாருங்கள்.

    இனிய மாணாக்கர்களே. சில மரம் செடிகளில் காணப்பெறும் செறிவு போன்று நமது தமிழ்ப் பாடலடிகளில் வரும் தொடைகளும் செறிந்து காணப்படுகின்றன என்பதை இப்போது உணர்வீர்கள். இனித் தொடை விகற்பங்களைக் காண்போம்.

     

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    ‘விகற்பம்’ என்பதன் பொருள் என்ன?
    2.
    விகற்பம் பெறும் தொடைகள் எத்தனை? அவை யாவை?
    3.
    ‘மோனைத்தொடை’ என்றும் ’இணைமோனைத் தொடை’ என்றும் சொல்வதினின்றும் நீவிர் அறிவன யாவை?
    4.
    விகற்பம் இல்லாத தொடைகள் எத்தனை? அவையாவை?
    5.
    இயல்புக்கு வகைமையுண்டா?
    6.
    விகற்பத்துக்கு வகைமை உண்டா? உண்டாயின், தொடை விகற்பங்களின் வகையைக் குறிக்க.
    7.
    ‘பொழிப்பு’-என்பதன் பொருள் என்ன?
    8.
    ஒரூஉ-என்பதன் பொருள் என்ன?
    9.
    கூழை என்பதன் பொருள் யாது?
    10.
    ‘கதுவாய்' என்பதன் பொருள் யாது?
    11.
    கீழ்க்கதுவாய் எனும் அமைப்புக்கு எந்தச் செடியை உதாரணமாக்கலாம்?
புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 18:05:57(இந்திய நேரம்)