தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- ஒலிக்கருவிப் பாகுபாடு

  • 3.4 ஒலிக்கருவிப் பாகுபாடு

        மொழியியலார் மெய் ஒலிகளைப் பாகுபாடு செய்யும்போது, ஒலிக்கும் கருவிகளாகிய (உறுப்புகளாகிய) நா, இதழ், பல், அண்ணம் என்பனவற்றால் பிறத்தலை ஒட்டி, ‘ஈரிதழ், பல் இதழ், பல், அண்பல், வளைநா, முன் அண்ணம், பின் அண்ணம்’ என்னும் ஏழாகப் பகுத்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவை ஏழும் வாயின்கண் மெய் ஒலிகள் பிறத்தற்கு உரிய இடங்கள் (places of articulation) என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்.     இவ்வெழு வகையான இடங்களில் ‘வெடிப்பொலிகள், மூக்கொலிகள், மருங்கொலிகள், வருடொலிகள், உரசொலிகள், அரைஉயிர்கள்’ என்னும் ஆறு வகைப்பட்ட மெய் ஒலிகளும் பிறத்தலைப் பின்வரும் அட்டவணையில் காணலாம். (அட்டவணையில் மெய்ஒலிகளுக்குத் தமிழில் உள்ள வரிவடிவங்களும்,     மொழியியலார் தரும் ரோமன் வடிவங்களும் (Roman Script) கொடுக்கப்பட்டுள்ளன.

        இனி வெடிப்பொலிகள் முதலான ஆறுவகையான மெய்ஒலிகள் ஒவ்வொன்றும், ஏழு வகை இடங்களை ஒட்டி எவ்வாறு பிறக்கின்றன என்பது பற்றி மொழியியலார் கூறும் கருத்துகளைக் காண்போம்.

    • ‘க்’ /k,g/

        தொல்காப்யிர் கூற்றின்படி அடி நாக்கு, (back of a tangue) பின்அண்ணத்தைத் (palatal) தொடுதலால் இவ்வல்லின ஒலிகள் பிறக்கின்றன.

        ககார ஙகாரம் முதல் நா அண்ணம்
             (தொல்.எழுத்து.89)

    (முதல் நா - அடிநாக்கு அதாவது நாவின் பின் பகுதி; அண்ணம் - மேல்வாய்)

    இன்றைய மொழியியலார் இவ்வொலிகளை வெடிப்பொலிகள் என்றும் அவை நாக்கின் அடியும், பின் அண்ணமும் தொடும்போது பிறக்கின்றன என்றும் கூறுகின்றனர். இவற்றில் ‘க்’ /k/ என்பது குரல் இலா ஒலி (Voiceless Sound) ஆகும். அதே இடத்தில் சற்றுக் குரல்வளை மடல் அதிர்ந்து ஏற்படும் ஒலியாகிய ‘க்’ /g/ என்பது குரல் உடை ஒலியாகப் (Voiced Sound) பிறக்கின்றது.

    • ‘ப்’ /p, b/

        ‘ப்’ எனும்     வெடிப்பொலியைப் பற்றிக் கூறவந்த தொல்காப்பியர் இது இதழ் இயைந்து பிறக்கும் என்கின்றார்.

        இதழ் இயைந்து பிறக்கும் பகாரம்.....
             (தொல். எழுத்து.97)

    இன்றைய மொழியியலார் இவ்வொலி ஈரிதழ் (bilabial) உதவியுடன் பிறக்கிறது என்பர். இதே இடத்தில் இரு வேறு வெடிப்பொலிகள் தோன்றுகின்றன. ஒன்று குரல் இலா ஒலி ‘ப்’ /p/; மற்றொன்று குரல் உடை ஒலி ‘ப்’ /b/. இந்தக் குரல் உடை ஒலி பெரும்பாலும் சொல்லில் மூக்கொலிகளுக்கு அடுத்தாற்போல் வந்து அமையும்.

    • ‘த்’ /t,d/

        இங்கும் குரல் இலா ஒலி, குரல் உடை ஒலி என இரு ஒலிகள் உள்ளன. வழக்கம் போல் சொல்லின் முதலில் வரும் போது குரல் இலா ஒலியாகவும் ‘த்’ /t/, மூக்கொலிக்கு அடுத்தாற்போல், வரும்போது குரல் உடை ஒலியாகவும் ‘த்’ /d/, வருகின்றது. இவ்வொலிகள் பல்லில் பிறக்கின்றன.

    • ‘ட்’ /, /

        டகர ஒலியும் மற்ற வெடிப்பொலிகளைப் போல இரண்டாகப் பிறக்கின்றது. இவ்வொலிகள் வளைநா இடத்தில் பிறக்கின்றன. ஒன்று குரல் உடை ஒலி ‘ட்’ /d/; மற்றொன்று குரல் இலா ஒலி ‘ட்’ //.

    • ச், ஜ் /c,j/

        சகரம், ஜகரம் என்னும் இரு ஒலிகளும் முறையே குரல் இலா ஒலியாகவும், குரல் உடை ஒலியாகவும் பிறக்கின்றன. இவ்வொலிகள் முன் அண்ணத்தின் உதவியுடன் பிறக்கின்றன.

    • ங், ஞ், ண், ந், ம், ன் / Œ, , –, n, m, /
      

        இம் மூக்கொலிகள் தற்காலத் தமிழ் மொழியில் உள்ள ஒலிகள் ஆகும். இவற்றுள் ‘ந், ன்’ என்ற மூக்கொலிகள் இரண்டும் தற்காலத் தமிழில் ஒன்று சேர்ந்துவிட்டன என்பதைச் சொல்லெழுத்து மாற்ற வரலாறு என்ற பாடத்தின் கீழ் பார்த்தோம்.

        ‘ங்’ /Œ/ - அடிநாக்கு, பின் அண்ணத்தைத் தொடுதலால்      பிறக்கிறது.

        ‘ஞ்’ // - முன் அண்ணத்தின் உதவியுடன் பிறக்கிறது.

        ‘ண்’ // - வளைநா இடத்தில் பிறக்கிறது.

        ‘ந்’ /n/ - மேல்வாய்ப் பல்லில் பிறக்கிறது.

        ‘ம்’ /m/ - ஈரிதழ் உதவியுடன் பிறக்கிறது.

        ‘ன்’ /n/ - அண்பல்லில் பிறக்கிறது.

    • ல், ள், /l, ˜/
     

        இவ்விரண்டு மருங்கொலிகளுள் ‘ல்’ , /l/ அண்பல் இடத்திலும், ‘ள்’ /˜/ வளை நாவிலும் பிறக்கின்றன.

    • ர், ழ், ற் /r. l. r/

        இம்மூன்று வருடொலிகளுள் ‘ர்’ /r/     அண்பல் இடத்திலும், ‘ழ்’ /l/, ‘ற்’ /r/ என்ற ஒலிகள் அண்ணத்தின் உதவியுடனும் பிறக்கின்றன.

    • ஸ், ஷ் /s, s/

        இவ்விரண்டு உரசொலிகளுடன் ‘ஸ்’ /s/ என்பது அண்பல்லிலும், ‘ஷ்’ // என்பது வளைநாவிலும் பிறக்கின்றன.

    • ய், வ் /y, v/

        ‘ய்’ /y/ என்பது முன் அண்ணத்தின் உதவியுடன் பிறக்கின்றது. ‘வ்’ /v/ என்பது மேற்பல்லும் கீழ் இதழும் இயையப் பிறக்கின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 11:22:40(இந்திய நேரம்)