Primary tabs
-
3.2 மெய் ஒலிகளின் பாகுபாடு
மெய் ஒலிகளைத் தொல்காப்பியர், நன்னூலார் போன்ற தமிழ் இலக்கண நூலாரும், தற்கால மொழியியலாரும் அவற்றின் பிறப்பிடம், ஒலிப்புமுறை ஆகியவற்றைக் கொண்டு பலவாறு வகைப்படுத்திக் காட்டியுள்ளனர்.
3.2.1 தமிழ் இலக்கண நூலார் பாகுபாடு
தமிழ் இலக்கண நூலார் மெய் ஒலிகளை மூன்று வகையாகப் பிரித்துக் கையாளுகின்றனர். அவையாவன:
1. வல்லினம்
2. மெல்லினம்
3. இடையினம்
க, ச, ட, த, ப, ற என்பனவற்றை வல்லின ஒலிகளாகவும் ங, ஞ, ண, ந, ம, ன ஆகியவற்றை மெல்லின ஒலிகளாகவும், ய, ர, ல, வ, ழ, ள என்பனவற்றை இடையின ஒலிகளாகவும் பிரிக்கின்றனர். இதனை,
வல்லெழுத்து என்ப கசட தபற
மெல்லெழுத்து என்ப ஙஞண நமன
இடையெழுத்து என்ப யரல வழள
(தொல். எழுத்து, 19-21)என்ற நூற்பாக்களில் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.
வல்லின ஒலிகள் மார்பினை இடமாகக் கொண்டும், மெல்லின ஒலிகள் மூக்கை இடமாகக் கொண்டும், இடையின ஒலிகள் மிடற்றினை (கழுத்து) இடமாகக் கொண்டும் பிறக்கின்றன என்றகிறார் நன்னூலார். இதனை,
அவ்வழி
ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்;
மேவும் மென்மை மூக்கு; உரம் பெறும் வன்மை
(நன்னூல். எழுத்து. 75)என்ற நூற்பாவில் அவர் உணர்த்துகிறார்.
3.2.2 தற்கால மொழியியலார் பாகுபாடு
தற்கால மொழியியலார் தமிழில் உள்ள மெய் ஒலிகளை இருவகை நோக்கில் பாகுபாடு செய்துள்ளனர். அவை ஒலிக்கருவிப் பாகுபாடு, ஒலிப்புமுறைப் பாகுபாடு என்பன ஆகும். இவ்விருவகைப் பாகுபாட்டில் தமிழில் காலந்தொட்டு வழங்கிவரும் பதினெட்டு மெய் ஒலிகளோடு தற்காலத் தமிழில் வழங்கும் கிரந்த எழுத்துகளாகிய ‘ஸ’, ‘ஷ’ ஆகிய இரண்டையும் மொழியியலார் சேர்த்துக்கொள்கின்றனர்.
- ஒலிக்கருவிப் பாகுபாடு
மொழியியலார் மெய் ஒலிகளைப் பாகுபாடு செய்யும்போது, ஒலிக்கும் கருவிகளாகிய (பேச்சு உறுப்புகளாகிய) இதழ், நா, பல், அண்ணம் என்பனவற்றால் பிறத்தலை (points of articulation) ஒட்டிப் பின்வரும் ஏழு வகைகளாகப் பாகுபாடு செய்துள்ளனர். (இதழ், நா, பல், அண்ணம் ஆகியவற்றை மெய் ஒலிகள் வாயின்கண் பிறத்தற்கு உதவும் இடங்கள் (places of articulation) என்றும் மொழியியலார் கூறுவர்,
1. ஈரிதழ் (Bi-labial) - ப, ம
2. பல் இதழ் (Labio-dental) - வ
3. பல் (Dental) - த, ந
4. அண்பல் (Alveolar) - ர, ல, ழ, ன, ஸ
5. வளை நா (Retroflex) - ட, ண, ள, ஷ
6. முன் அண்ணம் (Palatal) - ச, ஞ, ய, ற
7. பின் அண்ணம் (Velar) - க, ங
- ஒலிப்புமுறைப் பாகுபாடு
மெய் ஒலிகளின் ஒலிப்பு முறையை (Manner of articulation) ஒட்டித் தமிழில் உள்ள மெய் ஒலிகளைப் பின்வரும் ஆறு வகைகளாக மொழியியலார் பாகுபாடு செய்துள்ளனர்.
1. வெடிப்பொலிகள் (Plosive Sounds) - க, ச, ட, த, ப
2. மூக்கொலிகள் (Nasal Sounds) - ங, ஞ, ண, ந, ம, ன
3. மருங்கொலிகள் (Lateral Sounds) - ல, ள
4. வருடொலிகள் (Flap Sounds) - ர, ழ, ற
5. உரசொலிகள் (Fricative Sounds) - ஸ, ஷ
6. அரை உயிர்கள் (Semi-Vowels) - ய, வ
இவ்விருவகையான பாகுபாடு குறித்து மொழியியலார் கூறும் கருத்துகளை விரிவாகக் காண்போம். முதற்கண் ஒலிப்புமுறைப் பாகுபாடு பற்றி மொழியியலார் கூறும் கருத்துகளைக் காண்போம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I