Primary tabs
-
4.2 சிதம்பரம் பெரிய கோயிலமைப்பு
தில்லை வனமாக இருந்த, சிதம்பரம் நடராசப் பெருமான் ஆலயத்தை, முதற்கண் கட்டட அமைப்புகளுடன் கூடிய திருவிடமாக ஆக்க முற்பட்டவன் இரணியவர்மன். அவனுக்குப் பிறகு, சோழர்களும் பாண்டியர்களும் விசயநகர - நாயக்க மன்னர்களும் பெரும் பொருட்செல்வர்களும் ஆலய வளாகத்தில் பல சிற்றாலயங்கள் கட்டி, அதனை விரிவாக்கியுள்ளனர்.
-
பெருமை
பதஞ்சலி முனிவரும் புலிக்கால் முனிவரும் பூசித்த பெருமை கொண்டது இந்தத் திருத்தலம் ; புலிக்கால் முனிவர் காரணமாக இத்தலத்தைப் பெரும்பற்றப் புலியூர் என்பர்.
தில்லை நடராசர் கோயில், 51 ஏக்கர் நிலப்பரப்பில் பலவகைக் கோயிற் கட்டடங்களையும் மண்டபங்களையும் கொண்டது. தெற்கு நோக்கிய வண்ணம் நடராசர் சன்னிதியையும், கிழக்கு நோக்கிய வண்ணம் திருச்சித்திர கூடம் என வழங்கும் கோவிந்தராசர் கோயிலையும் அருகருகே கொண்டு விளங்குவது.
நடராசர் தம் தேவி சிவகாமியுடன் வீற்றிருக்கும் இடமும், அதற்கருகேயுள்ள இடமும், கனக சபையும் சித் சபையுமாகும். கனக சபையாகிய பொன்னம்பலம் முதற் பராந்தக சோழனால் பொன் தகடால் வேயப்பட்டது; பிறகு, பலரும் இத்திருப்பணியில் ஈடுபட்டனர். நடராசர் சன்னிதிக்கு எதிரே பொன் தகட்டால் ஆன கொடிக் கம்பமும் பலி பீடமும் உண்டு. அதன் தென்பால் ‘நிருத்த சபை’ உள்ளது; அங்கு ஊர்த்துவ தாண்டவமூர்த்தி சன்னிதியும், சரப மூர்த்தி சன்னிதியும் அமைந்துள்ளன. நிருத்த சபைக்குச் செல்லும் படியருகே தூணில் காலசம்மார மூர்த்தியின் திருவுருவம் மிகச் சிறப்பான வடிவமைப்பினைக் கொண்டது.
ஆடல் வல்லானது பொன்னம்பலத்தைச் சுற்றித் திருச்சுற்றும், திருச்சுற்று மாளிகையும் உள்ளன.
இக்கோயிலுக்கு நான்கு திசையிலும் நான்கு இராசகோபுரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 135 அடி உயரம் உடையது. ஏழு தளங்களுள்ள இக்கோபுரங்கள் ஒவ்வொன்றின் சிகரத்திலும் 13 பெரிய செப்புக் கலசங்கள் உள்ளன. கோபுரம் ஒவ்வொன்றும் 90 அடி நீளமும் 60 அடி அகலமும் உள்ள நீள் சதுர அமைப்புடன் கூடிய அடிப்பகுதி கொண்டது; அடிமட்டத்திலிருந்து 36 அடி உயரம் வரையில் நேராகக் கருங்கற் கட்டடமும், அதன் மேல் படிப்படியே குறுகிச் செல்லும் சுதை வேலைப்பாட்டு்க் கட்டடமும் உடையது.
மேற்குக் கோபுர நுழைவாயிற்கு அருகே தென்பால் கற்பக விநாயகர் கோயிலும், உள்ளே நுழைந்தால் மேற்குக் கோபுரத்தின் தென்பால் முக்குறுணி விநாயகர் கோயிலும், வடபால் சுப்பிரமணியர் கோயிலும், சோமசுந்தரக் கடவுள் கோயிலும் உள்ளன.
-
மண்டபங்கள்
மூன்றாம் பெரிய பிராகாரத்தில் வடபால் சிவகங்கைத் தீர்த்தக் குளம் நல்ல படிக்கரையமைப்புடன் உள்ளது; சிவகங்கைக்கு மேற்பால் ஒற்றைக் கால் மண்டபம், நூற்றுக் கால் மண்டபம், சிவகாமியம்மன் கோயில், துர்க்கைக் கோயில், பாண்டிய நாயகம் கோயில் முதலியவற்றைக் காணலாம். சிவகங்கைக்குக் கீழ்ப்புறமாக இராசசபை எனும் ஆயிரம் கால் மண்டபத்தைக் கட்டடக் கலைச் சிறப்புடன் கண்டு கொள்ளலாம்.
-