Primary tabs
-
4.4 இராமேசுவரம் கோயில்
இந்தியப் பெரு நாட்டின் ஆன்மநலப் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் சிறப்பான திருத்தலங்களுள் ஒன்று இராமேசுவரம்; பன்னிரண்டு ஜோதிலிங்கங்களுள் ஒன்று நிறுவப்பட்ட இராமேசுவரம், புனிதத் தலப்பயணத்தில் வாரணாசியாகிய காசியுடன் இணைத்துக் கூறுவர். இது கட்டடக் கலைச் சிறப்புமிக்க ஒன்று.
-
சிறப்பு
சிவலிங்கத்தை இராமன் பூசித்தமையால், இராமேசுவரம், தேசத்தின் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஆன்ம நலப்பாலமாக விளங்குகிறது. தீர்த்தப் பெருஞ்சிறப்புடைய இத்தலத்தின் பழைய பெயர் ‘கந்தமாதனப் பர்வதம்’ ஆகும்.
கருங்கற்பாறை கிட்டாத ஒரு தீவில் மிகப் பெரிய திருக்கோயிலைப் பல மண்டபங்களுடனும் வனப்புமிகு சிற்பங்களுடனும் உலகப் புகழ் பெற்ற பெரிய பிராகாரத்துடனும் திருப்பணி புரிந்தவர்கள் பாண்டிய, நாயக்க அரசர்களும், இராமநாதபுரத்துச் சேதுபதிகளுமேயாவர்.
-
சிவன் கோயில்
இங்குள்ள சிவன் கோயில் முதற்கண் இராமரால் நிறுவப்பட்டது என்பர். இக்காலத்திய அமைப்பில் கோயிலின் நீளம் 1000 அடி, அகலம் 657 அடி; மேலை வாயிலில் மட்டும் முடிவு பெற்ற கோபுரம் இருக்கிறது. இங்குள்ள நான்கு பிராகாரங்களில் மூன்று கூரையால் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. மூன்றாம் பிராகாரத்தின் இருபுறங்களிலுமுள்ள மேடைகளின் மேல் வரிசையாகத் தூண்களைக் காணலாம். தூண்கள் தாங்கிய கூரையினடியிலுள்ள நடையின் அழகு சிறப்புடையது. இக்கோயிலின் பெரும்பகுதி, 15-16ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது.
இக் கோயிலின் நான்காம் பிராகாரத்தின் மேற்புறத்தில் காணப்படும் சிவன் கோயில் சிறியது; இதுவே மிகப் பழைய ஆலயம்.
-