Primary tabs
-
4.3 தேர் வடிவக் கட்டட அமைப்பு (சோழர், பாண்டியர் காலம்)
பல்லவ மாமன்னன் நரசிம்மவர்மன் தன் காலத்தில் மாமல்லபுரத்தில் தோற்றுவித்த தேர்க் கோயில்கள், அவனுக்கு முற்பட்ட காலத்தில் மரம் செங்கல் சுண்ணாம்பு முதலிய அழியக் கூடிய பொருட்களால் கட்டப்பட்ட கோயில்களின் சாயலைக் கொண்டவை என்பர்.
பல்லவர் காலக் கல்தேர்கள் (ஒற்றைக் கற்கோயில்கள்- Monolithic Temples) பிற்காலத்தில் மன்னர்கள் பலரால் போற்றப்பட்டு, அவர்களும் சிற்சில இடங்களில் கற்றளியாகவும் மண்டபமாகவும் தேர்வடிவ அமைப்பில் கட்டுவதற்குக் காரணமாயின. அவ்வாறமைந்த சில கட்டடங்களைக் காண்போம்.
- நடராசர் கோயில்
சிதம்பரம் நடராசர் கோயிலில், நடராசர் சன்னிதிக்கு எதிப்புறத்தில் கொடிமண்டபத்திற்குத் தென்பால் நிருத்த சபை (நடன சபை) உள்ளது. அதன் இருபுறமும் சக்கரங்களைப் பெற்றுத் தேர்போல் காட்சியளிக்கிறது. அந்த மண்டபத்திலுள்ள சிற்ப எழில் கொண்ட 56 தூண்களும், அழகிய வேலைப்பாடமைந்த அதி்ட்டானமும் (துறவிகளைப் புதைக்கும் இடம்) கட்டடக் கலைக்குச் சிறப்பினை அளிக்க வல்லவை.
அதே நடராசர் கோயில் வளாகத்தில் (மூன்றாம் பிராகாரத்தில்) பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பாண்டிய நாயகம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. தேர் வடிவமான இக்கோயிலில் மூவருக்கு எதிரேயுள்ள மகாமண்டபம் கந்தபுராண நிகழ்ச்சிச் சித்திரங்களைத் தன் விதானத்தில் கொண்டுள்ளது.
- அமிர்த கடேசுவரர் கோயில்
மேலைக் கடம்பூர் அமிர்த கடேசுவரர் கோயில், முதலாம் குலோத்துங்க சோழனால் (கி.பி. 1070 - 1125) கற்றளியாக மாற்றப்பட்ட சிறப்பினைக் கொண்டது. அதிட்டானம் தொடங்கி விமானம் வரையில் அற்புதச் சிற்பங்களைக் கொண்ட இக்கோயில் தேர்வடிவிலானது. கருவறையுடன் கூடிய விமானம் விண்ணிலிருந்து பூவுலகத்திற்கு வந்தது போன்ற தோற்றமுடையது. ஆலய நடுப்பகுதியாகிய துணைப் பீடத்தில் பக்கங்களிலே சிற்ப வேலைப்பாடு மிகுந்த தேர்ச் சக்கரங்கள் உள்ளன. இரு புறங்களிலும் தேரையிழுக்கும் குதிரைகள் காலை உயர்த்தியபடி சிற்ப எழிலுடன் காட்சியளிக்கின்றன.
- நாச்சியார் கோயில்
நாச்சியார் கோயில் - பூந்தோட்டம் சாலையிலுள்ள துக்காச்சி (‘துர்க்கையாட்சி’ என்பதன் மரூஉ) ஆபத்சகாயர் ஆலயம் முதலாம் விக்கிரம சோழனால் கற்றளியாக ஆக்கப்பட்டது. இக்கோயில் தெற்கு நோக்கிய இரத மண்டபத்துடன் இணைந்த மூன்று மண்டபங்களைக் கொண்டது. இரு சக்கரங்களுடன் கூடி, தேர் மண்டபம் இரு குதிரைகளால் இழுக்கப்படுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.
-
தாராசுரம் கோயில்
சோழன் இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146-1172) காலத்தில் கட்டப்பட்ட தாராசுரம் (இராசராசேச்சுரம்) ஐராவதேசுவரர் கோயில் தேர் அமைப்பினைக் கொண்டது. சற்று உயர்ந்த உபபீடத்தின் மீது அமைக்கப்பட்ட இக்கோயிலின் அகர மண்டபம் ‘இராச கம்பீரன் திருமண்டபம்’ என்ற பெயருடையது. தேர் போல் அமைந்துள்ள இம்மண்டபத்தின் இரு பக்கங்களிலுமுள்ள சக்கரங்கள் சிற்ப வனப்புடன் கூடியவை.
-
கும்பகோணம் கோயில்கள்
கும்பகோணத்தில் சிவாலயங்களைப் பொறுத்த வரையில் நாகேச்சுவரர் கோயிலும், வைணவதிவ்ய தேசத்தைப் பொறுத்த வரையில் சாரங்கபாணி திருக்கோயிலும் தேர் வடிவ அமைப்பில் தனியே இரு கட்டடங்களைக் கொண்டவை. இரு ஆலயங்களுமே சிற்பச் சிறப்பிலும் கட்டடக் கலை நேர்த்தியிலும் காண்போரின் உள்ளங்கவரத்தக்கவை.
நாகேச்சுவரர் கோயிலில் வடபகுதியிலுள்ள ஆடல்வல்லான் மண்டபம் மூன்றாம் இராசராசன் காலத்தில் (கி.பி. 1216-1246) சன்னிதியுடன் கூடிய தேர் வடிவக் கட்டட அமைப்பாக உருவாக்கப்பட்டது. தேரின் இருபுறங்களிலும் எட்டடி விட்டமுள்ள தேர்க்கால்களுடன் - சிற்பச் சிறப்பு மிகு சக்கரங்களுடன் தோற்றமளிக்கும். சக்கர ஆரங்களில் பன்னிரண்டு இராசிகளின் தேவதைகள் சிற்ப அமைப்பில் காட்டப்பட்டுள்ளன. இத்தேரினை இரு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுப்பது போலச் சிற்பியரால் காட்டப்பட்டுள்ளன.
சாரங்கபாணி கோயிலில் குதிரைகள், யானைகள், தேர்ச்சக்கரங்களுடன் கூடிய விமானத்தை வைதிக (வேத) விமானம் என்றும், சோமச்சந்த விமானம் என்றும் அழைக்கின்றனர். தேர் போல அமைந்துள்ள கருவறை பிற்காலச் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறே தேர் போல அமைந்த ஆலயங்களும், ஆலயவளாகத்தில் அமைந்த மண்டபங்களுமாகத் தமிழகத்தில் பல உள்ளன
-
திருவாரூர் கோயில்
திருவாரூர் திருக்கோயிலில் மூன்றாம் பிராகாரத்துச் சுவர் அருகே மனுநீதிச் சோழன் வரலாற்றைச் சித்திரிக்கும் நோக்கில் அமைந்துள்ள தேரின் அமைப்பு காணத்தக்கது; மிகவும் போற்றத்தக்கது.
திருவக்கரை சந்திர மௌலீசுவரர் ஆலயத்தில் தேர்வடிவிலான திருக்கலியாண மண்டபம் உள்ளது.
-
மீனாட்சியம்மன் கோயில்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், தளபதி அரியநாத முதலியாரால் கட்டப்பட்ட ஆயிரக்கால் மண்டபம், தேர் போல அமைந்து, குதிரைகள் தேரை இழுப்பது போல் சிற்பச் சிறப்புடன் காட்டப்பட்டுள்ளது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I