Primary tabs
-
4.6 திருவில்லிபுத்தூர்க் கோயில்கள்
வைணவ திவ்ய தேசங்களுள் பெருஞ்சிறப்பிற்குரிய சிலவற்றுள் திருவில்லிபுத்தூரும் ஒன்றாகும். சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாகிய ஆண்டாள் அவதரித்த புண்ணியத்திருப்பதி அதுவாகும். வடபத்ரசாயியிக்கும் ஆண்டாளுக்கும் தனித் தனிச் சன்னிதிகள் உள்ளன.
-
கல்வெட்டுச் செய்தி
ஆலிலைப் பள்ளியான் என்பதற்கு வடமொழிப் பெயரே ‘வடபத்ர சாயி’, இவ்விறைவன் கோயிலைத் திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் குலசேகர தேவன் கட்டினான் என்றும், ஆண்டாள் கோயிலைச் சுந்தரத் தோளுடைய மாவளி வாணாதிராயன் கட்டினான் என்றும் கல்வெட்டுகள் கூறும்.
-
வடபத்ர சயனர் கோயில்
வடபத்ர சயனர் கோயில் மிகப்பெரிய கோபுரத்துடன் விளங்குகிறது. அக் கோபுரவாயிலை யடுத்து வட புறத்தில் தெற்கு நோக்கியவாறு பெரியாழ்வார் சன்னிதி உள்ளது. இச் சன்னிதியை யடுத்து மேற்கே பெரிய பெருமாள் சன்னிதி காணப்படுகிறது. இச் சன்னிதியில் இரு தளங்கள் உள்ளன. கீழ்த்தளத்தில் நரசிங்கப்பெருமாள் சன்னிதி இதற்கு வடபுறம் ஆழ்வார் பன்னிருவரும் தசாவதார (பத்து அவதாரங்கள்) மூர்த்திகளும் அமைந்துள்ளனர். தென்புறத்தில் மேல்தளத்திற்குச் செல்ல நல்ல படிகள் உள்ளன.
மேல் தளத்திற்குச் சென்றால் ‘போபால விலாசம்’ எனும் கட்டட அமைப்பு உள்ளது. இதனையடுத்து விமல ஆகிருதி விமானத்தின் கீழுள்ள கருவறையில் வட ஆலமரத்தினடியில் ஆதிசேடன் மீது திருமகளும் பூமகளும் அடிவருட பெருமாள் கிழக்குமுகமாகப் பள்ளிகொண்டிருத்தலைக் காணலாம். அருகிலுள்ள அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் மிகப் பாதுகாப்பாக உள்ளனர்.
-
நாச்சியார் ஆலயம்
அடுத்ததாக, ஆண்டாள் நாச்சியாரின் ஆலயம் மிகச் சிறப்புடைய கட்டட நேர்த்தி கொண்டது. அக்கோயிலில் முதலில் காணப்படுவது ‘பந்தல் மண்டபம்’. இதன் வழியாக உள்சென்றால் இடப்பக்கம் கலியாண மண்டபமும், அதற்கடுத்து இடைநிலைக் கோபுரமும் உள்ளது.
இடைநிலைக் கோபுரத்தை அடுத்துள்ளது வெளித்திருச்சுற்று அதனில் இராமர், ஸ்ரீநிவாசன் ஆகியோர் சன்னிதிகள் காணப்படுகின்றன.
இக்கோயிலின் உள்திருச்சுற்றில் சித்திரச் சிறப்புடன் கூடிய ‘மாதவிப்பந்தல்’ உள்ளது. அடுத்ததாக மணிமண்டபம் காணப்படும். அதனையடுத்து அர்த்த மண்டபமும், கருவறையும் உள்ளன.
கருவறையில் நடுவே ரங்கமன்னாரும் (திருமாலும்), வலப்பக்கத்தே ஆண்டாளும், இடப்பக்கத்தே கருடாழ்வாரும் காட்சியளிப்பர். அவர்களுக்கு எதிரில் தங்க ஸ்தாபன கோபால மஞ்சத்தில் (தங்கத்தால் ஆன படுக்கை) அவர்களே உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியிருக்கக் காணலாம்.
இந்தக் கோயில் விமானம், தங்கத்தகடு போர்த்தப் பெற்று அழகுமிக்கது; மேலும், திருப்பாவைப் பாசுரங்களை விளக்க வல்ல திருவுருவங்கள் அழகுற அமைந்துள்ளன.
-