தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பழநிக் கோயில்

  • 4.5 பழநிக் கோயில்

        திருமுருகனின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகப் பழநிப்பதி விளங்குகிறது. சங்ககாலப் புலவர் மாமூலனார் வாக்கிற் கிணங்க, நெடுவேள் ஆவி (ஆவியர் குடியைச் சேர்ந்த மன்னவன்) தொடர்புபடுத்தப்பெற்றுப் ‘பொன்னுடை நெடுநகர்ப் பொதினி’ என்ற குறிப்பு உள்ளது. திருமுருகாற்றுப்படையும் ‘திருவாவினன்குடி’ என்று குறிப்பிடுகிறது.

    • அமைப்பு

        மலைமீதுள்ள பழநித்திருக்கோயில் சேரநாட்டை நோக்கி, மேற்குத் திசை பார்த்துக் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இறைத்திருமேனி நவபாஷாணத்தால் ‘போகர்’ எனும் சித்தரால் அமைக்கப்பட்டது. போகரும், அவர் மாணவர் புலிப்பாணியும் இங்கு வாழ்ந்துவந்தமையால் ‘சித்தன் வாழ்வு’ என்றும் இப்பகுதிக்குப் பெயர் ஏற்பட்டது.

    • சேரமான் பெருமாள்

        இந்த மலைக்கோயில் முதன் முதலில் சேரமான் பெருமாளால் கட்டப்பட்டது. மலை ஏறும்போது எதிரே முதலில் காணப்படுவது சேரவிநாயகரின் சிற்றாலயமாகும். மலைமீது காணப்படும் தண்டாயுதபாணியின் கருவறையில் வடப்பக்கத்துச் சுவரிலும் சேரமான் பெருமாள் தன் குதிரை மீது செல்லும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு

        இக்கோயில், பல்வேறு கால, இன மன்னர்களால் பராமரிப்பினைப் பெற்று வந்துள்ளது. விசய நகரத்துக் கிருஷ்ணதேவராயர் திருப்பணியும் இத்தலத்துக்கு உண்டு.

    • உச்சியில் முருகன்

        பொதினியாகிய பழநி மலைக்கோயில் மேலே அமைந்திருக்க, அடிவாரத்தில் திருவாவிùன்குடிக் கோயில் நல்ல கட்டட அமைப்புடன் விளங்குகிறது. பழநி மலைக்குச் சிறிது அருகே மற்றுமொரு சிறுகுன்று ‘இடும்பன்மலை’ என்ற பெயருடன் விளங்குகிறது. (இவை கடல் மட்டத்திற்கு மேல் 1068 அடி உயர்ந்துள்ளன.) இதனை அடுத்துள்ள ‘இடும்பன் குளம்’ 147 ஏக்கர் பரப்புள்ளது. பழநி மலை உச்சியில் அதன் மணிமுடி போல் முருகன் திருக்கோயில் விளங்கி வருகிறத.

    • மண்டபமும் படிகளும்

        இக்கோயிலில் சுவாமிக்கு முன்பு அமைந்துள்ள மண்டபச் சிறப்பும், பக்தர்கள் வரிசையாக வந்த வழிபடுவதற்கேற்ற வழியமைப்பும் காணத்தக்கவை.

        மலை ஏறுவதற்கு வசதியாகப் படிகளும், இடையிடையே தங்கு மண்டபங்களும், ஓரிடத்தில் இடும்பன் சன்னிதியும் நன்கு பராமரிக்கப்படுகின்றன. யானையடிப் பாதையும் தனியே அமைந்துள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-07-2017 15:40:44(இந்திய நேரம்)