தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இசைக்கருவிகள்

  • 1.4 இசைக்கருவிகள்

        பழந்தமிழர் பல்வேறு கருவி வகைகளை உருவாக்கி இசைத்தனர். இவற்றில் யாழ், குழல், முழவு ஆகியன முதன்மை பெறுகின்றன. இக்கருவிகளின் பெயர்களைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள். "தமிழ்" என்ற சொல்லின் சிறப்பொலி எழுத்து ‘ழ’ அல்லவா? இந்த ‘ழ’ என்னும் ஒலி இக் கருவிப் பெயர்களிலும் உண்டு.

    (எ.டு)

    யாழ், குல், முவு

    தமிழர் உருவாக்கிய இசைக்கருவிகளின் தனித்தன்மையை இது உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

    • யாழ்
     

        பண்களை இனிமையாக இசைக்கும் கருவி யாழ். இது நரம்புக் கருவி வகையைச் (stringed instruments) சேர்ந்தது. மேலை நாட்டு இசையில் நரம்புக் கருவிகளைக் கார்டோபோன்ஸ் (chordophones) என்று அழைப்பர்.

    • குழல்

        பண்களை இனிமையாக இசைக்கும் மற்றைய கருவி குழல். இது காற்றுக் கருவி வகையைச் (wind instruments) சேர்ந்தது. மேலை நாட்டு இசையில் காற்றுக் கருவிகளை ஏரோபோன்ஸ் (aerophones) என்பர்.

    • முழவு

        தாளங்களை (rhythms) அளவாக முழக்கி அடித்துத் தரும் கருவி முழவு. இது தோற்கருவி வகையைச் (percussion instruments) சேர்ந்தது. மேலை நாட்டு இசையில் தோற் கருவிகளை மெம்பிரானோபோன்ஸ் (membranophones) என்பர்.

        பழந்தமிழர் யாழ், குழல், முழவு ஆகிய மூவகைக் கருவிகளையும் பாட்டிசையோடு இணைத்து இசைத்தனர். சங்கத் தொகை நூல்களில் எட்டுத் தொகையுள் ஒன்று பரிபாடல். இந்நூலில் இது பற்றித் தெளிவாகச் சொல்லியிருப்பதைப் பாருங்கள்.

    எழுபுணர் யாழும் இசையுடன் கூடக்
    குழலளந்து நிற்ப முழவெழுந் தார்ப்ப

    (புணர்:இணைந்து, அளந்து:சரியாக, ஆர்ப்ப : பெரிதாக ஒலிக்க) அதாவது யாழில் இணைந்து எழுகின்ற இனிய இசை பாட்டிசையோடு கூடி இசைக்கும். அப்பொழுது குழலில் எழும் இசை அதனோடு அளவாகச் சேரும். இவற்றுடன் பெரிதாக ஒலித்தபடி முழவின் ஓசை சேரும்.

        பழந்தமிழர் கருவிகளைப் பொதுப்பட யாழ், குழல், முழவு என்று வகைப்படுத்தினர். இவை ஒவ்வொரு வகையிலும் பல்வேறு கருவிகள் உண்டு. இவை பற்றி இனித் தெரிந்து கொள்வோமா?

    1.4.1 பல்வேறு யாழ்க் கருவிகள்

    • வடிவத்தால் பெயர் பெற்றவை

        பழந்தமிழர் பல்வேறு வகை யாழ்க் கருவிகளை இசைத்தனர். அவற்றில் வடிவத்தால் பெயர் பெற்றவை வில்யாழ், சீறியாழ், பேரியாழ் ஆகியன.

    வில் வடிவத்தில்
    இருக்கும் யாழ் வில்யாழ் எனப்பட்டது.
    சிறிய உருவத்தில் இருக்கும் யாழ் சீறியாழ் எனப்பட்டது.
    பெரிய உருவத்தில் இருக்கும் யாழ் பேரியாழ் எனப்பட்டது.
    • நிலத்தால் பெயர் பெற்றவை

        நிலப்பெயரால் பெயர் பெற்றவை குறிஞ்சியாழ், முல்லையாழ், மருதயாழ், பாலையாழ் ஆகியவை.

    • இசைப்பரிணாம வளர்ச்சியால் பெயர் பெற்றவை

        இசையின் பரிணாம வளர்ச்சியின் செவ்விசை நிலையில் யாழ்க் கருவி வகை நான்கு எனக் கொண்டனர் பழந்தமிழர். அவை பேரியாழ், மகரயாழ், சகோட யாழ், செங்கோட்டு யாழ் என அழைக்கப்படும். இக்கருவிகளில் நரம்புகளின் (strings) எண்ணிக்கையால் அவை வெவ்வேறாயின. இந் நான்கு வகைக் கருவிகளின் நரம்பு எண்ணிக்கையை இங்கே பாருங்கள்.

    பேரியாழ்
    -
    21 நரம்புகள்
    மகரயாழ்
    -
    19 நரம்புகள்
    சகோடயாழ்
    -
    14 நரம்புகள்
    செங்கோட்டுயாழ்
    -
    07 நரம்புகள்

        இக் கருவிகளின் தோற்றம், மற்றும் உறுப்புகள் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப் படை, மலைபடுகடாம், திருமுருகாற்றுப்படை ஆகிய பத்துப்பாட்டு நூல்களில் காணலாம். எட்டுத்தொகை நூல்கள் யாழ்க்கருவியின் இனிய இசை பற்றிக் கூறுகின்றன.

        "தேஎந் தீந்தொடை நல்யாழ்" எனப் புறநனூறு கூறுகின்றது. தேனென இனிமையாக ஒழுகும் யாழின் இசைச் சிறப்பை இது உணர்த்துகிறது அல்லவா?

    • யாழ் இசைப்பவர் தகுதி

        யாழ் இசைப்பவருக்கு இசை இலக்கண அறிவு நிறைவாக இருக்கவேண்டும்.யாழ்க் கருவியின் நரம்புகளின் சுருதி மாறாமல் இசைக்க வேண்டும். பண்களின் இலக்கணம் தவறாமல் கருவியை இசைக்க வேண்டும். பாடலின் சொல், பொருள், எழுத்து ஆகியவற்றிற்கு ஏற்றவிதமாக இசை அமைக்கும் திறமை பெற்றிருக்கவேண்டும்.

        இத் தகுதிகள் பெற்றவர் ‘யாழாசிரியன்’ என்று அழைக்கப்பெற்றார்.

    1.4.2 குழல் வகைகள்

        கொன்றைக் குழல், ஆம்பல் குழல், முல்லைக்குழல், சிறு குழல், நெடுங்குழல் எனப் பல்வேறு வகைக் குழல்களைப் பழந்தமிழர் இசைத்தனர்.

    • தொடக்கநிலை குழல் வகைகள்

        கொன்றை மரக் காயைக் குழலாக உருவாக்கி இசைத்தல்; ஆம்பல் கொடியின் தண்டினைக் (stem) குழலாக உருவாக்கி இசைத்தல்; இவை தமிழர் இசை மரபின் தொடக்கநிலைக் குழல் வகைகளாகக் கொள்ளலாம்.

    • செவ்வியல் நிலை குழல் வகைகள்

        படிப்படியாகக் குழல்இசை, செவ்வியல் நிலையை (classical form) அடைந்தது. குரலிசைக்கு (vocal music) நிகரான எல்லா இசை நுட்பங்களையும் இசைக்க வல்ல சிறந்த கருவியாகப் பழந்தமிழர் இதனை உருவாக்கினர்.

    • குழலிசை பெறுமிடம்

        குழலை, தனித்து இசையைப் பெருக்கும் கருவியாகப் பயன்படுத்தினர். யாழ், முழவு முதலான பிற கருவிகளோடு இணைத்தும் இசைத்தனர். பாட்டிசைக்குப் பக்க இசை வழங்கவும் பயன்படுத்தினர்.

    • குழலிசை முதலிடம் பெறல்

        பழந்தமிழர் கண்ட இசை முறை செவிக்கினிய மெல்லிசை ஆகும். இம்முறைக்கு முதலில் ஆதாரமாக ஓர் ஒலி நிலை வேண்டும். இணையும் குழலிசை கருவியிசை ஆகிய அனைத்துக்கும் ஒரே ஆதார ஒலி வேண்டும். இக்காலத்தில் சுருதிப் பெட்டி, தம்புரா முதலான கருவிகள் ஆதார ஒலிக்காகப் பயன்படுத்தப்படும். ஆதார ஒலி காட்டப் பழந்தமிழர் குழல் கருவியைப் பயன்படுத்தினர்.

        இதோ பாருங்கள்! கூட்டு இசை நிகழ்ச்சியில் குழல் இசை வழி யாழிசையும், யாழிசை வழி தண்ணுமை என்னும் தாள இசையும், தண்ணுமை இசைவழி முழவும் சேரும் பாங்கைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகிறது.

    குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
    தண்ணுமை நின்றது தகவே தன்ணுமைப்
    பின்வழி நின்றது முழவே . . .

    • குழல் அமைப்பு

        மூங்கிலால் உருவாக்கப்படுவது குழல் கருவி. இதில் எட்டுத் துளைகள் இருக்கும். பொதுவாகக் கருவியின் நீளம் 15 அங்குலமாக இருக்கும். சுற்றளவு 3 அங்குலமாக இருக்கும். குழலின் இடப்பக்கத் துவாரம் அடைத்திருக்கும். வலப் பக்கத் துவாரம் திறந்திருக்கும். வாய் வைத்து ஊதும் முதல் துளை "முத்திரை" அல்லது "முத்திரைத் துளை" எனப்படும். மீதி ஏழு துளைகள் மேலும் ஏழு விரல்கள் பண் அமைப்பிற்கேற்ப மூடித் திறக்கும். அப்பொழுது பண்ணிசை காற்றில் இனிமையாக மிதந்து வரும்.

    • குழல் இசைப்பவர் தகுதி

        குழல் இசைப்பவருக்குப் பண்களின் இலக்கணம் பற்றிய முழு அறிவும் இருக்க வேண்டும். தாள நுட்பங்கள் தெரிந்து மத்தளம், தண்ணுமை போன்ற முழவுக் கருவிகளோடு இணைந்து இசைக்கும் திறன் இருக்கவேண்டும். பாட்டிசையோடு சேர்ந்து இசைக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். பாட்டின் பொருள் தெரிந்திருக்க வேண்டும். மொழியின் வல்லின. மெல்லின, இடையின ஒலிகள் தெரிந்து அவ்வொலிகளைத் தழுவிக் குழலிசைக்க வேண்டும். இத் தகுதிகள் பெற்றவர் ‘குழலாசிரியன்’ எனப்பட்டார்.

        பழந்தமிழர் உருவாக்கிய இக் கருவி இக்காலத்தில் புல்லாங்குழல் என அழைக்கப்படுகிறது.

    1.4.3 முழவு வகைகள்

        தாளக் கருவிகள் அனைத்தையும் பொதுவாக முழவு என்றனர் பழந்தமிழர்.

    • தாளத்தின் சிறப்பு

        பாடல், ஆடல் ஆகிய இரண்டையும் அளவிடுவது தாளம். சுருங்கக் கூறினால், வரம்பு கடந்து ஒடும் ஆறுகள் போன்றன பாடலும் ஆடலும். இவற்றை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும் கரைகள் போன்றவை தாளங்கள்.

        தாளக் கலை மிக நுட்பமானது. மிக விரிவானது. பழந்தமிழர் பல்வேறு வகைத் தாளங்களைக் கண்டறிந்தனர்.35 தாளங்கள், 108 தாளங்கள், 175 தாளங்கள் எனப் பலவகைத் தாள நுட்பங்களைப் பழந்தமிழர் பயின்றனர். இவற்றைக் கருவிகளில் முழக்கி இன்புற்றனர்.

    • தாளக்கருவிகள்
     

        பழந்தமிழர் உருவாக்கிய தாளக் கருவிகள் ஏராளம். சிலப்பதிகார உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார். இவர் பழந்தமிழர் பயன்பாட்டில் இருந்த சில தாளக் கருவிகளை நூற்பா ஒன்றில் தருகிறார். நூற்பா சொல்வதைப் பார்ப்போமா?

    பேரிகை

    சீர்மிகு

    திமிலை

    தமருகம்

    அந்தரி

    மொந்தை

    நிசாளம்

    ஆசில்

    தொக்க

    படகம்

    மத்தளம்

    குடமுழாத்

    தண்ணுமை

    முழவொடு

    முரசு

    துடுமை

    தகுணிச்சம்

    உபாங்கம்

    இடக்கை

    சல்லிகை

    தக்கை

    தாவில்

    சந்திர

    கண்விடு

    சிறுபறை

    விரலேறு

    துடிபெரும்

    உடுக்கை

    கரடிகை

    கணப்பறை

    தடாரி

    வளையம்

    துாம்பு

    அடக்கம்

    பாகம்

    பறை.

        காலகட்டத்தில் இவற்றில் பல அழிந்து போயின. ஒரு சிலவற்றின் தோற்றத்தை இங்குப் பார்க்கலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 12:41:34(இந்திய நேரம்)