தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கலைப்பிரிவினர்

  • 1.3 கலைப்பிரிவினர்

        இசையும் கூத்தும் நுண்கலைகள். இவை நுட்பமான கலைக்கூறுகள் கொண்ட வித்தைகள். எனவே இவை எல்லோராலும் கையாளத்தக்க கலைகள் அல்ல.

        பழந்தமிழகத்தில் கலைகளில் நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற கலை வகுப்பினர் வாழ்ந்தனர். இசைக்கலை வகுப்பினர் இருந்தனர். கூத்துக்கலை வகுப்பினர் இருந்தனர். கவியிசைக் கலைஞரும் இருந்தனர். அவரவர்க்குத் தெரிந்த கலையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர்.

        பழந்தமிழகத்தில் மன்னர்கள் போருக்குச் செல்வர். வெற்றி வாகை சூடித் திரும்புவர். அப்போதெல்லாம் இக்கலைஞர்கள் உடனிருந்து பாடல்கள் பாடியும், கூத்தாடியும், கருவிகளை இசைத்தும் மகிழ்விப்பர்.

    • கலைப் பயன்கள்

        மக்களிடையேயும் இக்கலைஞர்கள் பெருஞ் செல்வாக்குப் பெற்று விளங்கினர். கலைத்திறனால் மக்கள் மனத்துயரங்களைப் போக்கினர். போருக்குச் சென்ற தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு ஆறுதல் தரவும், ஊடியிருக்கும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே துாது செல்லவும் பண்ணோடு பாடிய இவர்கள் கலைத்திறன்கள் உதவின.

        மன்னரும் மக்களும் இவர்களுக்குப் பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்தனர்.

    1.3.1 பாணர்

        ‘பண்’ பாடினோர் ‘பாணர்’ எனப் பெயர் பெற்றனர். (‘பண்’ என்னும் சொல்லின் அடியாகப் பிறந்து, முதல் நீண்டது தான் "பாண்’. இச்சொல் "அர்" என்னும் பலர்பால் ஈறு பெற்றுப் ‘பாணர்’ என்றாகியது.)

    • பாணர் பிரிவுகள்

        பாணர்கள் இசையில் நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றவர்கள். இவர்களில் பல பிரிவினர் உண்டு. இசைப் பாணர், யாழ்ப் பாணர், மண்டைப் பாணர் என்போர் பாணர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

        வாய்ப்பாட்டுப் பாடுவோர் இசைப்பாணர். யாழ்க்கருவி இசைப்போர் யாழ்ப்பாணர். தோற்கருவிகளை முழக்குவோர் மண்டைப் பாணர். பழந்தமிழகத்தில் "பறை" என்னும் தோற்கருவிக்கு "மண்டை" என்ற பெயரும் வழங்கி வந்தது. எனவே பறை அடிக்கும் பாணர் "மண்டைப் பாணர்" எனப்பட்டனர்.

        யாழ்ப்பாணரில் "பேரியாழ்" என்னும் பெரிய யாழ்க்கருவி இசைத்தோர் பெரும்பாணர் எனப்பட்டனர். ‘சீறியாழ்’ என்னும் சிறிய யாழ்க்கருவி இசைத்தோர் சிறுபாணர் எனப்பட்டனர்.

    • சிறந்த குடிகள்

        பழந்தமிழகத்தில் பாணர்குடி சிறந்த குடிகளுள் ஒன்றாகும். சங்கப் புலவர் மாங்குடி கிழார் என்பவர் புறநானூற்று 335 ஆம் பாடலில் இவ்வாறு கூறுகிறார்.

    துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
    இந்நான் கல்லது குடியு மில்லை

        நல்ல குடிமக்கள் என்று சொல்லப்படும் இவர்கள் யாவர்? தெரிந்து கொள்வோமா?

    ‘துடி’ என்னும் தோற்கருவியை இசைப்போர் துடியர்
    ‘பண்’ என்னும் இனிய இசை பாடுவோர் பாணர்
    ‘பறை’ என்னும் தோற்கருவியை இசைப்போர் பறையர்
    முருக வழிபாட்டில் ஈடுபட்ட இசை வகுப்பினர் கடம்பர் (கடம்பன் என்பது முருகக் கடவுளைக் குறிக்கும்)
    பாணர் குடியிருக்கும் பகுதி ‘பாண்சேரி’ என்று அழைக்கப்படும்.

    1.3.2 பாடினி

        பாணரோடு சேர்ந்து அவர்கள் துணைவியரும் பண் பாடுவர், பாட்டிசைப்பர். இவர்களைப் பாடினி என்று அழைப்பர். பாடினியர் கூத்துக் கலையிலும் வல்லவர்கள். அபிநயங்கள் காட்டி ஆடுவார்கள். யாழ்க் கருவியிலும் இனிய இசையை மீட்டுவார்கள்.

    • பாடினியர் வேறு பெயர்கள்

        இவர்களுக்குப் பாண்மகள், விறலி, பாடினி, மதங்கி, பாட்டி, பாடன்மகடு எனப் பல பெயர்கள் உண்டு.

    • பாடினியின் தன்மை

        பாடினி, இனிய குரல்வளம் கொண்டவள். மென்மையான அழகுள்ளவள். மயில் போன்ற சாயல் கொண்டவள். அறிவுக்கூர்மை மிக்கவள். இது போன்ற பல செய்திகளை முடத்தாமக்கண்ணியார் "பொருநராற்றுப்படை" என்னும் நூலில் தருகிறார். இந்நூல் சங்கத் தொகை நூல்களுள் பத்துப்பாட்டுக்களில் ஒன்றாகும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    முத்தமிழின் நடுவணது எது?
    2.
    பஞ்சமரபு என்னும் நூலில் கூறப்படும் ஐந்து மரபுகளையும் எழுதுக.
    3.
    இது சரியா பிழையா என்று எழுதுக. "கூத்த நூல் இயற்றியவர் அறிவனார்"
    4.
    நெய்தல் நிலத்திற்குரிய பண் எது?
    5.
    பண்களுக்குரிய ஏழு இசை யாவை?
    6.
    கருநாடக இசையின் ஸட்ஜம், பஞ்சமம் ஆகிய சுரங்களைப் பழந்தமிழ்ப் பண்ணில் எவ்வாறு அழைத்தனர்?
    7.
    ஏழிசையில் ஐந்திசை கொண்ட ‘பண்’ எவ்வாறு அழைக்கப்படும்?
    8.
    மண்டைப் பாணர் என்போர் யார்?
    9.
    பாணர் குடியிருக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
    10.
    பாடினி என்பவள் யார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 12:12:46(இந்திய நேரம்)