தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

இசையாளர் தகுதிகள்

  • 1.5 இசையாளர் தகுதிகள்

        பன்னெடுங்காலமாகப் பக்குவமாகப் பண்படுத்திய இசையைப் பயில்பவர்க்கு வேண்டிய தகுதிகள் இருந்தன. பழந்தமிழர் இதில் பெருங்கவனம் செலுத்தினர்.

        இசைபாடுபவர், யாழ் இசைப்பவர், குழல் வாசிப்பவர், தாளக்கருவி முழக்குபவர் ஆகியோர்க்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்ற விதிகள் இருந்தன. விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய அவ்வக் கலைஞர் இருக்கவேண்டும். இருந்தால் "ஆசிரியன்" என்றும் "முதல்வன்" என்றும் அக்காலச் சமுதாயத்தில் அவர் மதிக்கப்பட்டார்.

        இதோ! இசையின் ஒவ்வொரு துறையிலும் இருப்பவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றிப் பாருங்கள்.

        சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையில் இது தெளிவாகச் சொல்லப்படுகிறது.

    1.5.1 இசைபாடுபவர் தகுதி

        இசைபாடுபவர் மிடற்றுப் பாடலில் (குரலிசையில்) வல்லவராக இருக்க வேண்டும். அவருக்கு யாழ், குழல் ஆகிய பண்ணிசைக் கருவிகளை இசைக்கத் தெரியவேண்டும். தாளக் கருவிகளின் தாள நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

        இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய சொற்களைச் சொல்லும் பொருளும் சிதையாமல் பாடத் தெரியவேண்டும். பாடற் சுவையை உணர்ந்து இனிமையாக இசைக்க வேண்டும்.

        இத்தகுதிகளை உடையவர் ‘இசை ஆசிரியன்’ என மதிக்கப்பட்டார்.

    1.5.2 தாளக் கருவியிசையாளர் தகுதி

        பழந்தமிழர் ஏராளமான தாளக் கருவிகளை இசைத்தனர். இவற்றில் தண்ணுமை, மத்தளம் ஆகியவை செவ்வியல் தகைமை (classical) பெற்றிருந்தன. சிலப்பதிகாரத்தில் மாதவி என்னும் ஆடல்மங்கையின் அரங்கேற்ற நிகழ்ச்சி விளக்கப்படுகிறது. "வேத்தியல்" (மன்னவனுக்காக மன்னன் முன் ஆடுவது) என்று சொல்லப்படும் செவ்வியல் நிகழ்ச்சியாக அது அமைந்தது.

        அரங்கேற்றத்தின் பக்கஇசை வழங்கிய தாளக் கருவி தண்ணுமை ஆகும். இக்கருவியை இசைப்பவர் தகுதிகள் என்னென்ன?

        தாள இலக்கணம் கூறும் எல்லா நுட்ப அறிவும் பெற்றிருக்க வேண்டும். இயல், இசை, நாடகம் எனப்படும் முத்தமிழும் தெரிந்திருக்க வேண்டும். இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகியவற்றின் சொற் பிரயோகங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

        பண்களின் இலக்கணம் தெரியவேண்டும். பண், பண்ணியல், திறம், திறத்திறம் ஆகியவற்றின் இசை இயல்புகளுக்கு ஏற்பத் தாளக் கருவியைக் கையாளத் தெரிய வேண்டும்.

        பாடல், ஆடல் நிகழ்ச்சிகளின் குறை ஏதும் ஏற்படின், குறை தெரியாமல் தன் கலைத் திறனால் நடத்திச் செல்லும் திறமை வேண்டும்.

        இத்தகைய தகுதிகள் பெற்றவர் "தண்ணுமை முதல்வன்" என்று அழைக்கப்பட்டார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:57:34(இந்திய நேரம்)