Primary tabs
பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகும்.
இது கருத்து எதுவும் வெளிப்படுத்தாமல் ஆடும் ஆடல் முறை, மகிழ்ச்சிச் சுவை ஒன்றையே வெளிக்காட்டும். அடவுகள் இந்த ஆடல் வகையில் மிக முக்கியம். கை, கால், முகம் ஆகிய உறுப்புகளின் நிலைகளோடு கூடியது அடவு. தட்டடவு, நாட்டடவு, குத்தடவு எனப் பல அடவு வகைகள் உண்டு. அவை வெவ்வேறு தாளத்திற்கேற்ப அமையும். பரதநாட்டியத்தில் ‘அலாரிப்பு’ என்னும் நிகழ்ச்சி பல அடவுகளின் சேர்க்கையாகும்.
இது நிருத்த முறையோடு கூடிய பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தும் ஆடல் முறை. கண்களாலும் முகத்தாலும் கை முத்திரைகளாலும் கருத்துகளையும் உள்ளத்து உணர்வுகளையும் வெளிக்காட்டும் ஆடல் முறை. இதில் ‘பாடல்’ சிறப்பிடம் பெறும். பரதநாட்டியத்தில்சப்தம், பதவர்ணம் ஆகிய நிகழ்ச்சிகள் நிருத்திய வகையைச் சார்ந்தன.
இது கதையைத் தழுவி வரும் ஆடல் முறை. கதையின் வெவ்வேறு கதாபாத்திரங்கள் அபிநயித்து ஆடப்பெறும். ஒருவரே வெவ்வேறு கதாபாத்திரங்களாக அபிநயிப்பர். பலர் சேர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களைச் சித்தரித்தும் ஆடுவர்.இதற்குக் குறவஞ்சி நாட்டியம், நாட்டிய நாடகங்கள் ஆகியவை எடுத்துக் காட்டாகலாம்.