தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.5-4.5 ஆடலின் உயிர் இசையே

  • 4.5 ஆடலின் உயிர் இசையே

        ஆடல் இல்லாத இசை இருக்கலாம். ஆனால் இசை இல்லாத ஆடல் இல்லை. ஆதலால் ஆடலுக்கு இசை உயிராகிறது.

    பரதநாட்டியத்திற்கு உரிய இசை கருநாடக இசை. இந்த இசையின் இராகங்களும் தாளங்களும் பரதநாட்டியத்தின் அடிப்படை. கருநாடக இசை உருப்படிகள் நாட்டிய உருப்படிகளாகின்றன. எப்படி? ஜதி சுரம், வர்ணம், பதம், தில்லானா ஆகியவை கருநாடக இசை உருப்படிகள். இவை ஒவ்வொன்றின் இசை அமைப்பும் தனித்தனி நாட்டிய உருப்படிகளை உருவாக்குகிறது.

    நாட்டியம் சிறக்க அதன் இசை சிறப்பாக இருக்க வேண்டும். ஆக, பல்வேறு இசை விற்பன்னர்களின் பக்கத்துணை நாட்டியத்திற்கு அவசியமாகிறது.

    பக்க இசையாளர்

        இனிப் பக்க இசையாளரான நட்டுவ ஆசான், பாட்டிசையாளர், கருவி இசையாளர் முதலானோரின் பங்கு எத்தகையது எனப் பார்ப்போம்.

    4.5.1 நட்டுவ ஆசான்

        பரதநாட்டிய நிகழ்ச்சியை நெறிப்படுத்துபவர் நட்டுவ ஆசான். வாயால் சொல்லும் சொற்கட்டுக் கோவைகள், கைத்தாள ஒலி. இவற்றால் இவர் ஆடலையும் இசையையும் இணைத்து நிகழ்ச்சியை நடத்திச் செல்வார். நட்டுவ ஆசானின் இத்தகு செயற்பாடு, "நட்டுவாங்கம்" என்று சொல்லப்படும்.

    நாட்டியம் ஆடுபவர் அடவுக்கோவைகளை ஆடுவார். அப்போது நட்டுவ ஆசான் பின்னணியாகச் சொற்கட்டுக் கோவைகளை இசைப்பார். அதே வேளையில் கைத்தாளத்தில் அதே சொற்கட்டுக் கோவைகளைத் தாள ஒலியால் எழுப்புவார்.

    கைத்தாளம் ஒரு கஞ்சக் கருவி. இது சோடியாக இருக்கும். ஒன்று வெண்கலத்தில் குமிழ் வடிவில் இருக்கும். மற்றையது இரும்பில் தடிப்பான தட்டை வடிவில் இருக்கும். மிருதங்கத்திற்கு இணையாக மிக நுட்பமான சொற்கட்டுக் கோர்வைகளை இந்தத் தாளக் கருவியில் இசைக்கலாம்.

    பரதநாட்டிய நிகழ்ச்சியில் நட்டுவ ஆசான் மிக முக்கியமானவர். இந்தியாவின் ஒரு தலைசிறந்த நட்டுவ ஆசான் தஞ்சாவூர் கே.பி. கிட்டப்பாபிள்ளை. நட்டுவாங்கம் பற்றி இவர் என்ன சொல்கிறார்? பார்ப்போமா?

    "லய சுத்தத்தோடு நட்டுவாங்கச் சொற்கட்டுகளை
    இசைத்துக் கைத்தாளத்தைப் பிடிப்போடு போட
    வேண்டும். அப்பொழுதுதான் ஆடுபவர் அங்கங்களில்
    பாடலின் சுவைக்கும் உணர்வுக்கும் பொருந்த
    நாட்டியம் இயல்பாகவும் அழகாகவும் அமையும்".

    (SRUTI : DEC. 1985. p.30)

    4.5.2 பக்கப் பாடகர்

        நாட்டியத்திற்குப் பக்க இசை பாடுவோர் கருநாடக இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியம். நாட்டிய நிகழ்ச்சிக்கு ஒருவர் அல்லது இருவர் பக்க இசை பாடலாம். ஆண்குரலும் பெண்குரலும் இணைந்தும் பாடலாம்.

    குரல் இனிமை, நல்ல சுருதி ஞானம், தாள ஞானம் ஆகியவை பாடகர் தகைமைகளாகும். பாடும் பொருளை உணர்ந்து பாடவேண்டும். மொழி உச்சரிப்புச் சரியாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கையும் பாட்டில் நிதானமும் வேண்டும்.

    4.5.3 வயலின், வீணை, புல்லாங்குழல்

        குரலிசைக்கு ஏற்ப இசை வழங்கும் கருவிகள் பண்ணிசைக் கருவிகள்     (melodious instruments) எனப்படும். பரத நாட்டியத்திற்கு வயலின், வீணை, அல்லது புல்லாங்குழல் ஆகியவை சிறந்த பக்க இசைக் கருவிகளாகும். இக் கருவிகளை இசைப்போர் கருநாடக இசையில் நல்ல பயிற்சி பெற்றவராய் இருத்தல் வேண்டும்.

    தனிக் கச்சேரி வாசிக்கும் தகுதியுடையோராயினும் பக்க இசை வழங்குகையில் ஒத்துழைப்புத் தருவது அவசியம். தன்னுடைய திறமையை     அதிகம் காட்டக்     கூடாது.     மற்றைய இசையாளர்களோடு சேர்ந்து ஆடலுக்கு ஏற்றம் தருவதை நோக்காகக் கொண்டு இசை வழங்குவது முக்கியமாகும்.

    4.5.4 மிருதங்கம்

        பரதநாட்டியத்தின் முக்கியமான தாளக் கருவி மிருதங்கம். இக்கருவி இசை நட்டுவனாரின் நட்டுவாங்கத்திற்குப் பக்க பலமாக இருக்கும். உறுதுணையாகவும் இருக்கும்.

    நாட்டியச் சொற்கட்டுகளை மிருதங்கத்தில்     அருமையாக வாசிக்கலாம். பாதங்களின்     தாள     வேலைப்பாடுகளை நட்டுவாங்கத்தோடு இணைந்து வாசித்து ஆடலுக்கு ஏற்றம் தரும் கருவி மிருதங்கமாகும்.

    அலாரிப்பு, ஜதிசுரம், வர்ணம், தில்லானா ஆகியவை சொற்கட்டுகள் நிறைந்த உருப்படிகள். மிருதங்கக் கருவியாளரின் லயப் பிடிப்பான வாசிப்பு ஆடுபவருக்குப் பெரும் துணையாக விளங்கும்.

    4.5.5 கூட்டு முயற்சி

        பரத நாட்டிய நிகழ்ச்சி ஒரு கூட்டுமுயற்சி என்று கூறலாம். ஆடுபவருக்குத் துணைநிற்கும் அத்துணைப் பக்க இசையாளருக்கும் அந்நிகழ்ச்சியின் வெற்றி தோல்வியில் பங்குண்டு. ஆதலால் பக்க இசை வழங்கும் நட்டுவனார், பாடகர், கருவி இசையாளர் அனைவரது ஒத்துழைப்பும் நாட்டியம்     ஆடுபவருக்கு இன்றியமையாது வேண்டும்.

    தத்தம் துறைகளில் தனித்திறமை பெற்றவர்கள் பக்க இசையாளர். இவர்கள், ஆடுபவரது தேவைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப அனுசரித்து இசை வழங்குவது சிறப்பு.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:16:04(இந்திய நேரம்)