தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Diplamo Course - D06142- நவீனத்துவம் - விளக்கம்

  • 2.1 நவீனத்துவம் விளக்கம்     

        நவீனத்துவம் என்ற கலைச்சொல்லில் பழைமை, தொன்மை என்பவற்றிற்கு ‘மாறானது’ என்ற பொருள், காணப்படுகிறது. மிக நீண்ட     காலமாக     இருந்துவந்த சமூக - பொருளாதார நிலைமைகளிலிருந்து அறிவியல் தொழில்     நுணுக்கப் புரட்சி காரணமாகப் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. முதலாளித்துவம் பெரும் சக்தியாக, 19-ஆம் நூற்றாண்டில் வளர்கிறது. இதனோடு, அல்லது இதன் விளைவாக, அன்றைய சமூக- பொருளாதாரப் பண்பாட்டுச் சூழ்நிலைகளை எதிர்கொள்கிற விதத்தில் நவீனத்துவம் தோன்றுகிறது. நவீனத்துவம் என்பது வெறுமனே ஒரு கலை இலக்கியக் கொள்கை மட்டும் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை; ஒரு மனநிலை; ஒரு பண்பாட்டு வடிவம். பழைமை, மரபு என்பது நீண்ட காலமாக ஒரே மாதிரியான பாதையில், ஒரே மாதியான போக்கில் சென்று கொண்டிருக்கும் நிலையில்,     அதனை மறுத்து, அதற்கு வித்தியாசமாகப் புதிய பாதைகளையும் புதிய தடங்களையும் தேடுவதாக நவீனத்துவம் அமைகிறது. உதாரணமாக, செய்யுள் வடிவம் என்பது இலக்கியத் துறையில் தொன்றுதொட்டு ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு வடிவமாகும். அதனை மறுத்து, உரைநடை என்பது புதிய சமூக இருப்புகளையும் வெவ்வேறு நிகழ்வுகளையும் சொல்லுவதற்கு     உரிய ஒரு வடிவமாக ஆகிறது; பல்வேறு துறைகளிலும் அது ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் காரணமாகப் புதிய புதிய இலக்கிய வகைகள் தோன்றுகின்றன. நவீனத்துவம் ஒரு புதிய பண்பாட்டு நிலைமையின் வெளிப்பாடாகக் கலை, இலக்கியத் தளத்தில் அமைகிறது.

    2.1.1 நவீனத்துவம் - சில அடிப்படைகள்

        கலை     இலக்கியத்தளத்தில்,     நவீனத்துவத்தின் அடிப்படைகளாகவும் வெளிப்பாடுகளாகவும் அமைகின்றவற்றுள் மிக முக்கியமானது. அது, புதியகலை, புதிய இலக்கியம், புதிய வடிவம் என்ற நிலைகளையும் தேவைகளையும் வற்புறுத்துகின்றது. தமிழில், சற்றுப் பழைய இலக்கிய வடிவங்கள் தலபுராணங்கள், பிள்ளைத் தமிழ், உலா போன்ற பிரபந்தங்கள் எனின், அவற்றிற்கு மாறாக உரைநடை இலக்கியங்கள் மற்றும் அவற்றின் பல வகைமைகளை நவீனத்துவம் கொண்டாடுகிறது. பொதுவாக, பழைய இலக்கிய வடிவங்கள் (முன்னர்க் கூறப்பட்டவை மற்றும் அவை போன்ற பிறவும்) தத்தமக்குரிய சமகாலங்களின் பிரச்சினைகளையும் சமூக நீரோட்டங்களையும் சொல்லுவதில்லை. ஆனால் நவீன இலக்கியம் என்பது சமகாலச் சமூக (Contemporary Society) வாழ்வுகளை ஏதாவதொரு வகையில் முன்னிறுத்துகின்றது. உதாரணமாக, நவீன இலக்கிய வடிவமாகிய சிறுகதை, தமிழில் அது தோன்றிய காலத்திலேயே அன்றைய (19-ஆம் நூற்றாண்டு மற்றும் 20 -ஆம் நூற்றாண்டு) சமூகப் பிரச்சினையாகிய பால்ய விவாகம், விதவை மணம் முதலியவற்றைச் சித்திரிக்கின்றதைக் காணமுடியும்.

         கலை இலக்கியம், சுதந்திரமும் சுயாதிக்கமும் கொண்டது என்று நவீனத்துவம்     பிரகடனப்படுத்துகிறது. இலக்கிய வடிவங்களில் சோதனைகள்     செய்வதை நவீனத்துவம் முன்னிறுத்துகிறது. இலக்கியத்தில் உயர்ந்த தரம் வேண்டும் என்றும், இலக்கியப் படைப்பு என்பது புனிதமானது என்றும், அது தனித்துவம் அல்லது தனக்கெனத் தனித்தன்மைகள் கொண்டது என்றும் நவீனத்துவம் வாதிடுகின்றது. அத்தகைய நிலைகளில் - இலக்கியம் எல்லோராலும் படைக்கப்படுவதில்லை; அதற்கு, உயர்ந்த திறனும் ஆளுமையும் வேண்டும் என்று அது சொல்கிறது. அதேபோல, தாராளம் கொண்ட மனிதநேயம் (Liberal humanism) நவீனத்துவத்தின் ஒரு முக்கியமான மனநிலையாக அமைகிறது. மனிதனை, அவனுடைய சமகாலத்துச் சூழ்நிலையோடு சித்திரிக்க வேண்டும் என்று கருதுவதால், அவனுடைய வாழ்நிலைகளில் அக்கறை கொள்வது இயல்பேயாகும்.

    2.1.2 சில வெளிப்பாடுகள்

        நவீனத்துவத்தின் உடன்தோன்றியது அல்லது அதனுடைய முக்கியமான வெளிப்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது நடப்பியல் அல்லது எதார்த்தவாதம் (Realism) ஆகும். மனிதச் செயல்பாடுகளை உண்மையாகக் காட்ட வேண்டும்; உண்மை என்பது நேர்கோட்டில் அமைவது அல்ல; முரண்பாடுகளும் மோதல்களும் கொண்டது; அவற்றிற்குக் காரணங்களும் உரிய சூழல்களும் உண்டு என்ற கருத்தோட்டம் கொண்டது நடப்பியல். இது, நவீனத்துவத்தின் உடன் தோன்றிய     ஒரு     முக்கியமான வெளிப்பாடு. மேலும், குறியீட்டியல்(Symbolism),     இருத்தலியல்     (Existentialism), மீமெய்ம்மையியல் (Surrealism), இருண்மை வாதம் (Obscurity), அபத்தவாதம்     (Absurdity) முதலிய கருத்து நிலைகளும் நவீனத்துவத்தின் வெளிப்பாடுகளேயாகும். அன்றியும், உருவவியல், அமைப்பியல் முதற்கொண்டு ஃபிராய்டியம், மார்க்சியம் முதலியனவும் நவீனத்துவத்தின் உடன்தோன்றியனவே யாகும்.

        நாம் ஏற்கெனவே கூறியவாறு, நவீனத்துவம் புதிய இலக்கிய வடிவங்களையும் வகைமைகளையும், இலக்கியச் செல்நெறிகளையும் உருவாக்குகிறது. அல்லது, அவை உருவாக இது காரணமாக அமைகின்றது.     புனைகதை     என்ற இலக்கிய வகைமை அத்தகையவற்றில் ஒன்று என்பது மட்டுமல்லாமல், அதிலே தோன்றிய அல்லது காணப்படுகின்ற புதிய புதிய உத்திகளுக்கும் வடிவங்களுக்கும் நவீனத்துவம் காரணமாக அமைகின்றது எனலாம். புதுமைப்பித்தன்,     தமிழ்ச் சிறுகதையுலகில் நவீனத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறவர். (இது அவருடைய புனைபெயர். உண்மைப் பெயர் சொ.விருத்தாசலம் என்பது. நவீனத்துவத்தின் தாக்கமே, அவருடைய புனைபெயர்) இவர், சிறுகதைகளில் பல சோதனைகள் (Experiments) நிகழ்த்தியவர். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்ற பழந்தமிழ் வாசகத்தை இறுதி வாசகமாகக் கொண்டு, கல்தூணில் அமைந்த பழங்காலத்திய தெருவிளக்குகளின் இடத்தில் மின்விளக்கு அமைகிறது என்ற நிகழ்வை மையமிட்டுப் புதுமையின் அவசியத்தைக் குறியீடாகச் சித்திரிக்கும் தெரு விளக்கு முதலிய அவருடைய கதைகளில் பல, இவ்வாறு புதிய உத்திகளைச் சோதனை முறையில் செய்து காட்டியனவேயாகும்.

        தமிழில் புதுமையின் அவசியத்தை அல்லது நவீனத்துவத்தை முன்னிறுத்துவதற்காகவே, 1950-1960களுக்குப் பிறகு பல இலக்கிய இதழ்கள் தோன்றின. மணிக்கொடி இவற்றுள் மிக முக்கியமானது. இது , சிறுகதை இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தந்தது. மற்றும் கிராம ஊழியன், சரசுவதி, எழுத்து, இலக்கிய வட்டம் முதலிய இதழ்களும் நவீனத்துவக் கருத்தோட்டங்களை முன்வைத்தன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:48:18(இந்திய நேரம்)