Primary tabs
-
2.4 மையமும் விளிம்பும்
ஒரு சமூக அமைப்பில், பார்ப்பனர் அல்லது உயர்சாதி வகுப்பினர் மையம் என்ற நிலையில் நடுவே இருக்கிறார்கள் என்றால் தலித்துகள், பெண்கள், அரவாணிகள் மற்றும் இதுபோன்ற நிலையினர் விளிம்புநிலையில் இருக்கிறார்கள். விளிம்பு நிலையிலிருப்போர் மையத்திலிருப்பவரோடு மோதலும் கலகமும் செய்கிறார்கள். மையத்தை நோக்கி நகர்கிறார்கள். எப்போதும் இந்தச் சச்சரவு நடந்து கொண்டேயிருக்கிறது. இவ்வாறு பின்னை நவீனத்துவம் கூறுகிறது. இதன் காரணமாகப் பெண்ணியம், தலித்தியம் முதலியவற்றில் இது அக்கறை காட்டுகிறது. “விளிம்பு நிலை வாழ்க” (“Hail to Edge” - Linda Hutcheon) என்று கூறினாலும் தீர்வுகளுக்கோ, சமூக மாற்றங்களுக்கோ இது வழிமுறை சொல்லுவதில்லை. மேலும், விளிம்பு நிலையிலிருப்போரைக் கூடத் தனித்தனிக் குழுக்களாகப் பார்க்கவே இது விரும்புகிறது. குழுக்களிடையே செயலளவிலான தொடர்புகளை இது கூறவில்லை.
பின்னை நவீனத்துவத்தின் ஒரு முக்கியமான பங்களிப்பு, வழிவழியாகப் ‘புனிதம்’ என்று வழங்கப்படுபவற்றை மறுத்தது ஆகும். காட்டாக, திருமணம்- ஒருத்திக்கு ஒருவன் , ஒருவனுக்கு ஒருத்தி எனும் கற்புநிலை, குடும்பம் முதலிய அமைப்புகளும் அவை பற்றிய கருத்தியல்களும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. அவற்றை, இது கேள்வி கேட்டு மறுக்கிறது. அதுபோல் உயர்வு அல்லது தரம் என்று இலக்கியத்தை அடையாளம் காட்டுவதையும் அல்லது பாராட்டுவதையும் இது மறுக்கிறது. அப்படியானால், வணிகரீதியாக எழுதப்பெறும் மர்ம நாவல்கள் உள்ளிட்ட ஜனரஞ்சக (Mass or Popular literature) எழுத்துகளையும் பின்னை நவீனத்துவம் ஏற்றுக் கொள்கிறது என்று பொருள். ஆனால், நடைமுறையில் தமிழில் பின்னை நவீனத்துவவாதிகள் இதனை ஏற்றுக் கொள்ளுவதில்லை.
பின்னை நவீனத்துவ வாதிகளால் அதிகமாகப் பேசப்பெறும் ஒன்று கதையாடல் (Narrative) ஆகும். அறிகிற / தெரிகிற ஒரு நிகழ்வை அல்லது செய்தியைச் சொல்லுதல்- விளக்கமாகச் சொல்லுதல் என்பதாக மொழி மாற்றம் செய்வதுதான் கதையாடல் ஆகும். நடைமுறை நிகழ்ச்சிகளின் மீது ஒரு தொடர்ச்சியையும் அர்த்தத்தையும் திணிக்கின்ற ஒரு செயல் வடிவத்தின் வடிவமாகவே இது கொள்ளப்படுகிறது என்று விளக்கம் அளிப்பார் ஹேடன் ஒயிட் என்பார். இதனைப் பின்னை நவீனத்துவம் இரண்டு நிலைகளாகப் பார்க்கிறது. ஒன்று - மிகப் பலரால் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருகின்ற, பலவற்றிற்கு மையமாக இருக்கின்ற, பெருங்கதையாடல் (grand or great narrative) என்பது. இது, சங்க கால வரலாறு, வீரயுகம் என்பது போன்ற வரலாறாக இருக்கலாம்; தாய்மை என்பது போன்ற கருத்துநிலை பற்றிய விளக்கமாக இருக்கலாம். இவற்றைப் பின்னை நவீனத்துவம் மறுக்கிறது; மாறாகத் தனித்தனி வட்டாரங்கள், தனித்தனிக் குழுக்கள், குடும்பமோ பிற கட்டுப்பாடுகளோ அற்ற உறவுகள் முதலியவற்றைச் சிறுகதையாடல் (Little narrative) என்று கொண்டு, அவற்றைப் பின்னை நவீனத்துவம் வரவேற்றுப் போற்றுகிறது.