Primary tabs
-
2.3 பின்னை நவீனத்துவம் - தோற்றமும் சூழலும்
முதலாளித்துவப் பொருளாதாரம், ஏகபோக பன்னாட்டு முதலாளித்துவமாக வளர்ந்த சூழலில், பின்னை நவீனத்துவம் தோன்றுகிறது. நவீனத்துவம் இந்த உலகையும் சிந்தனை முறையையும் விளக்குவதற்கு போதாது என்ற நிலை வளர்ந்தபோது அதற்கு மாற்றாக இது தோன்றுகிறது. முதலில், கட்டிடக் கலையின் வடிவமைப்பு முறையில் ஏற்பட்ட சிந்தனையாகத் தோன்றியது இது. பின்னர், பண்பாட்டையும் இலக்கியத்தையும் விளக்கக் கூடியதாக 1970-80களில் வளர்ச்சி பெறுகிறது. ஜேக்கு டெர்ரிடா முதலியோர் முன்மொழிந்த பின்னை அமைப்பியலின் தாக்கம் இதிலுண்டு. அதிகார மையங்கள், பண்பாட்டு அரசியல் முதலியவை பற்றிப் பேசிய மிக்கேல் ஃபூக்கோ (Michael Foucault) மற்றும் கிராம்ஷி (Gramsei) ஆகியோரின் தாக்கமும் இதிலுண்டு. மேலும், நீட்ஷே, ஹெய்டேக்கர் முதலிய தத்துவவாதிகளின் தாக்கமும் இதிலுண்டு. இலக்கியத்தில் லியோத்தா, மோதிலார், ஹேபர்மாஸ், லிண்டோ ஹு ட்ஷியோ, ஃபிரடெரிக் கேம்சன், டெர்ரி ஈகிள்டன் முதலியோர் பின்னை நவீனத்துவச் சிந்தனையாளர்களாகக் கருதப்படுகிறார்கள். தமிழிலும் அ.மார்க்ஸ், பிரேம், ஜமாலன் முதலியோர் இந்த வகைத் திறனாய்வில் ஈடுபட்டார்கள். முக்கியமாக, இலக்கியச் சிற்றிதழ்கள், இந்தச் சிந்தனைமுறையை வலியுறுத்தி வந்துள்ளன. பின்னை அமைப்பியலின் புகழ் மங்குகிற அளவிற்குப் பின்னை நவீனத்துவம் சமீப காலப் பகுதியில் செல்வாக்குப் பெற்றது.
பின்னை நவீனத்துவத்தின் துவக்கக் கொள்கை நூலாகக் கருதப்படுவது, லியோதா (Jean Francois Lyotard) என்ற பிரெஞ்சு சிந்தனையாளரின் பின்னை நவீனத்துவ நிலைமை (La condition Post moderne) என்ற நூலாகும். பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் , பண்பாட்டு உலகிலும் ஏற்பட்டுவிட்ட நுகர்வுக் கலாச்சாரம் (consumerism) பற்றியும் இலக்கியத்தில் அதன் வெளிப்பாடுகள் பற்றியும் கொள்கை ரீதியாக இந்த நூல் பேசுகிறது. இலக்கியத்திலும் சரி, பண்பாடு நிகழ்வுகளிலும் சரி, மையம் (center) என்று ஒன்று இல்லை; இருத்தலாகாது. எனவே, முழுமை (totality) என்பது அர்த்தமற்றது என்று பின்னை நவீனத்துவம் பேசுகிறது. முழுமை என்பதற்குப் பதிலாகப் பகுதிகள் அல்லது கூறுகள் (Fragmentation) என்பதை இது முன்வைக்கிறது. கூறுகளே உண்மை என்று கூறுகிறது. இந்தக் கூறுகளும்கூட, ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவையே என்றும் இது பேசுகிறது. சமூக- பண்பாட்டு அமைவுகளில் ஒதுக்கப்பட்டனவாக விளிம்புகள் (edge) இருக்கின்றன என்றும், எப்போதும் விளிம்புகளுக்கும் மையங்களுக்கும் இடையே மோதல்கள் இருக்கின்றன என்றும், விளிம்புகள் மையங்களை நோக்கி நகர்கின்றன என்றும் பின்னை நவீனத்துவம் கூறுகின்றது.
பின்னை நவீனத்துவக் கொள்கையில் இதுவன்றியும் பின்வரும் கருத்தியல்களும் அடிப்படைகளாக இருக்கின்றன. அவற்றுள் சில:
-
நவீனத்துவம், கலை வடிவங்களைப் புதிய வடிவங்களாகக் காண விரும்புகிறது; பின்னை நவீனத்துவம், எதிர்நிலை வடிவமாகக் (anti-form) காணவிரும்புகிறது.
-
உயர்வு, உயர்ந்தோர் வழக்கு, உயர்தரம் என்பவற்றையும், பலராலும் மரபு வழியாக அங்கீகரிக்கப்பட்ட ‘புனிதம்’ என்பதனையும் இது மறுக்கிறது.
-
பெரும் நீரோட்டம், பெருநெறி, பெருங்கதையாடல் என்பதற்கு மறுப்புத் தெரிவிக்கிறது. அதேபோது சிறு நெறிகளுக்கு முக்கியத்துவம் தருகிறது.
-
நடைமுறை நிகழ்வுகளை - அவை, கலகங்களாக, மோதல்களாக இருந்தாலும் - இது மொழி விளையாட்டுகளாகவே காண்கிறது. மாற்றுவது, தீர்ப்பது இதன் நோக்கமல்ல.
-
ஒற்றைப் போக்கு, ஒற்றைத் தன்மை என்பதற்கு மாறாகப் பன்முகத்தன்மையை இது முன்வைக்கிறது.
இவ்வாறு பின்னை நவீனத்துவம், மொத்தப்படுத்துதல், முழுமைப்படுத்துதல், புனிதப்படுத்துதல் என்பவற்றிற்கு மாறாகக் கருத்தியல்களை முன்மொழிந்தாலும், சுயமுரண்பாடுகள் கொண்டதாகவும் வேறுபட்ட பல கருத்துகளைக் கொண்டதாகவும் இது விளங்குகிறது. மேலும், ‘கொள்கைக்கு எதிராகவே’ (Resistance to Theory) இருப்பதாகவும் இது தன்னைச் சொல்லிக் கொள்கிறது. இதனுடைய இன்னும் சில முக்கியமான கருத்தமைவுகளைச் சற்று விரிவாக இனிக் காணலாம்.
-