Primary tabs
-
4.1 வீரத்தாய்
‘வீரத்தாய்’ எனும் காவியம் ஓரங்கக் கவிதை நாடகமாகக் காணப்படுகிறது. ஒன்பது காட்சிகள் கொண்டு கதை தழுவிய கவிதையாகக் காணப்படுகிறது. இலக்கண வேலியைத் தாண்டி, காப்பிய நெறியில் புதுமையைக் கொண்டுள்ள காவியம். தமிழ்ச் சமுதாயத்தில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பெண் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த காட்சி, புரட்சிக் கவிஞனுக்கு வேதனை அளித்தது. பழந்தமிழ் இலக்கியங்களில் கொடுக்கப்பட்டு வந்த உரிமை கூடப் பிற்காலத்தில் இல்லாமல் இருந்ததைப் பார்த்துக் கோபமடைந்த கவிஞர், தமிழ்ச் சமுதாய வாழ்விற்கு மகளிரே தலைமையேற்கும் வரலாற்றை மீட்டமைக்க, பெண்கள் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தி, ‘வீரத்தாய்’ எனும் காவியத்தலைவி மூலம் அதனை நிறைவேறச் செய்கிறார்.
வீரத்தாய் கவிதை நாடகத்தில் வீரமும் உறுதியும் அமைந்தவளாகவும், உலகத்தினர் மெச்சும் வகையில் எல்லாக் கலையினையும் கற்றவளாகவும் ஒரு தலைவியைப் படைத்திட வேண்டும் என்று கவிஞர் தம் இதயத்தில் பொங்கிப் புறப்பட்ட பெண்ணின் பெருமையே ‘வீரத்தாயாக’ உருக்கொண்டது.
அடிப்படையான பெண்மை நலச் சிந்தனை ‘வீரத்தாய்’ கவிதைக் காடு முழுவதும் பூத்துக்குலுங்குவதைக் காணலாம். பிள்ளைகளைப் பெற்றதோடு கடன் முடிந்து விட்டது என்றில்லாமல், உற்ற கடமைகள் பல உண்டு என்று உணர்த்தி, உயர்கலைகள் பல கற்பித்து ஒழுக்க வீரனாய்ச் சுதர்மனை உருவாக்கிப் பிறநாட்டு வேந்தர்களும் போற்றும் அளவிற்கு உயர்த்திப் பெருமை சேர்த்திட ‘வீரத்தாய்’ என்று பட்டம் சூட்டி மகிழ்வித்திருக்கிறார் கவிஞர்.
சீவக சிந்தாமணியின் சீவகன் தாயை மனத்துள் கொண்டே கவிஞர் ‘வீரத்தாயை’ வரைந்துள்ளார் போலத் தோன்றுவதைக் காணலாம். இக்காவிய நாடகம் - இன்பியல் நாடகமா துன்பியல் நாடகமா என்பதைவிட, எழுச்சியியல் நாடகமாக நினைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, பல்வேறு பட்ட மாந்தர்களைப் படைத்து, கருத்தின் வேகத்தைக் குறைக்க விரும்பாமல், கவிஞர் கதையைவிடக் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அறிந்து மகிழலாம்.
1891 ஏப்ரல் 29 ஆம் நாள் புதுச்சேரி கனகசபைக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் பாரதிதாசன். பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம்.
1895 இல் ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம் ஆரம்பக்கல்வி பயின்றார். 1906 இல் வித்வான் தேர்வில் தேர்ச்சியடைந்தார். 1907 இல் புதுச்சேரி மகாவித்வான்ஆ.பெரியசாமி ஐயாவிடமும் பங்காரு பத்தரிடமும் இலக்கண - இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
1908 இல் புதுச்சேரியில் பாரதியாரைச் சந்தித்தார். பாரதியாரின் வேண்டுகோளுக்கிணங்க, ‘எங்கெங்குக் காணினும் சக்தியடா’ எனும் பாடலைப் பாடிப் பாரதியின் அன்பைப் பெற்றார். பாரதியிடம் தாம் கொண்ட மதிப்பின் காரணமாகப் ‘பாரதிதாசன்’ எனத் தன்பெயரை மாற்றிக் கொண்டார்.
சமூக விடுதலைக்காகவே ஆயிரக்கணக்கில் கவிதைகளைப் படைத்தார்.
1946 இல் அறிஞர் அண்ணா தலைமையில் பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டு ரூபாய் 25,000/- நிதி அளிக்கப் பெற்றது.
1954 இல் புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
1962 இல் இராஜாஜியால் சிறப்பிக்கப் பெற்றார்.
1964 ஏப்ரல் 21 ஆம் நாள் இயற்கை எய்தினார்.
பாவேந்தர் பாரதிதாசன் மறைந்தாலும் அவரது பாடல்கள் தமிழரின் வாழ்விற்கும் மேன்மைக்கும் அடிப்படையாக அமைந்தன. இவ்வாறு தேசியத்திலிருந்து தமிழ்த் தேசியமாகி, சர்வ தேசிய எல்லைகளை நோக்கி விரிகிற படைப்புகளாகப் பாரதிதாசன் படைப்புகள் அமைந்துள்ளன.
பாரதியின் பாடல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தில் சுதந்திர உணர்வை உண்டு பண்ணியது போல, பாரதிதாசனுடைய பாடல்கள் சமூகச் சீர்திருத்த உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டியது எனலாம்.
கல்வி இன்றி, உரிமை இழந்து, சிந்தனை அறியாமல் கண்டதெல்லாம் குடும்பம் என்றே கிடந்த பெண்கள் உலகத்தைப் பகுத்தறிவுப் பாதையில் கொண்டு செல்லவும், சமூகத்தில் பலவீனர்கள் என்பதை மாற்றிடவும் தான் வீரத்தாயைப் படைத்தார். அதனை உள்நோக்கமாகக் கொண்டுதான் பெண்மாந்தர்களைத் தலைமைப் பாத்திரமாக ஏற்க வைத்துள்ளார். அதிலும் ஆண் மாந்தர்களை விஞ்சுகின்ற அளவுக்குப் பெண் மாந்தர்களைப் படைத்துள்ளார். .
எத்தனை வஞ்சம் இடைப்பட்டாலும் அத்தனையும் தவிடுபொடியாக்கிக் காட்ட, ஒரு பெண்ணால் முடியும் என்பதை நிலை நிறுத்துகிறார்.
ஆண் துணையின்றி, சுற்றுச்சார்பு ஏதுமின்றித் தோள்வலிமை ஒன்றாலேயே ஒரு பெண் சாதித்து வெற்றி பெறுவாள் என்பதை நிலை நாட்டும் நோக்கத்தில் தான் காப்பியத் தொடக்கத்திலேயே ‘விஜய ராணி’ யை வீர தீரக் கலைகளிலும் அறிவு முதிர்ச்சியிலும் திறம் பட்டவள் என்று அறிமுகம் செய்கிறார்.
குடும்ப அமைப்புக்குக் கடைக்காலாக நின்று சமூக வாழ்விற்கு நெடுத்துணையாக விளங்குகின்ற பெண்கள், கல்வியில்லாமல், உரிமையில்லாமல், முன்னேற வழியில்லாமல் கடைக்கோடிப் பள்ளத்தில் தள்ளப்பட்டதை மாற்றிடவும், தமிழ்ச் சமூக வாழ்விற்கு ஏற்றம் தந்திடவும் சமூக வாழ்விற்கு மகளிர் தான் தலைமையேற்றிட வேண்டும் என நினைத்த பாவேந்தர் பாரதிதாசன்.
“படியாத பெண்ணினால் தீமை - என்ன
பயன் விளைப்பாள் அந்த ஊமை” என்றும்“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி - நல்ல
நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி”என்றும் பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
பொதுவுடைமைச் சமுதாயத்தை விரும்பிய கவிஞர் பாரதிதாசன், ‘வீரத்தாய்’ காவியத்தை முடிக்கும் போது பொதுவுடைமைச் சமுதாய நோக்கத்தோடு, மன்னராட்சி ஒழிந்த மக்களாட்சிக் குரலோடு முடித்திருப்பதை அறிய முடிகிறது.