Primary tabs
-
4.2 கதைச்சுருக்கம்
மணிபுரி மாளிகை மன்னன் மது அருந்தித் தன்னை மறந்து கிடக்கிறான். இதற்குக் காரணம் சேனாபதி காங்கேயன். மன்னன் மரித்தால், ‘அரசி விஜயராணியை அரண்மனையை விட்டுத் துரத்தி விடலாம், அரசிளங்குமரன் சுதர்மனைக் காட்டில் அலையவைத்துப் படிப்பறிவு, போர்ப் பயிற்சி இல்லாமல் செய்து விடலாம்’ என்பது சேனாபதி திட்டம். திட்டத்தை அறிந்த விஜயராணி, தானே அரண்மனையிலிருந்து மறைந்து விடுகிறாள். சேனாபதி, சுதர்மனைக் காட்டில் ஒரு கிழவனிடம் வளர்க்கச் சொல்லி ஒப்படைக்கிறான். தன் கையாள் காளிமுத்துவின் மூலம் அரச குமாரனைப் படிப்பறிவற்ற மூடனாக வளர்க்க வேண்டும் என்று சொல்லுகிறான்.
- சேனாதிபதியின் கற்பனை
- பொக்கிஷம்
- காட்டில் சுதர்மன்
- பொக்கிஷம் திறத்தல்
- சேனாதிபதியின் ஆசை
- வேஷம் கலைகிறது
சேனாதிபதியும் அமைச்சனும் தாங்களே அரசனாகவும், தலைமையமைச்சனாகவும் கற்பனையில் மகிழ்கின்றனர். ‘நமது விஜயராணி, வீரம் செறிந்தவள், நடுவில் புகுந்து தொல்லைகொடுத்தால்.,? என்று அமைச்சன் கேட்க, ‘அவள் என்ன சாதாரணப் பெண்தானே! எதற்குப் பயப்பட வேண்டும்?’ என்று கேலி பேசுகிறான் சேனாதிபதி.
‘பெண்களை நான் எளியவர்களாய் நினைக்கவில்லை’ என்கிறான் அமைச்சன். சேனாதிபதி சிரித்தவாறே, ‘ஆடைக்கும் அணிகலனுக்கும் ஆசைப்படுபவர்கள்; அஞ்சுவதும் நாணுவதும் ஆடவர்களைக் கொஞ்சி மகிழ்வதும் மகளிர் இயல்பு. மனித சமூகத்தில் வலிவற்ற பகுதி அவர்கள்.’ என்றான். ‘வலுவற்ற பகுதிதானே வீரம் மிகுந்த ஆண்களைப் படைக்கிறது. மகளிர் கூட்டம் தான் சக்தி பெற்றது. மேலும் எட்டு வயதுடைய அரசகுமாரன் வளர்ந்ததும் ‘ஆட்சியைக்கொடு’ என்று வருவானே?’ அவனை நடைப்பிணம் போல் வளர்க்க வகை செய்துள்ளேன். யாரும் அறியாத ரகசியமாய்! மிகவும் சாமர்த்திய சாலிதான். உன் திட்டம் என்ன என்று கேட்டான் மந்திரி.
‘பொக்கிஷத்தைத் திறக்க வேண்டும் - பொக்கிஷச் சாவியை அரசி எடுத்துப் போய்விட்டாள். அதைத் திறப்பவர்களுக்குப் பரிசளிப்பதாகத் தண்டோரா போடச் செய்ய வேண்டும். கஜானா கைக்கு வந்தால், பணத்தால் பதவியைப் பெற்று விடலாம்’ என்கிறான் சேனாதிபதி காங்கேயன்.
சுதர்மன் காட்டில் கிழவர் ஒருவர் மேற்பார்வையில் வளர்கிறான். சேனாதிபதி, அரசகுமாரனுக்குப் போர்ப் பயிற்சி எதுவும் கற்றுத் தரக் கூடாது என்று சொல்லியும், அந்தக்கிழவர் மறைவிடத்தில் அவனுக்கு வாள் பயிற்சி தினமும் அளித்து வருகிறார். தன்னை இவ்வளவு அக்கறையுடன் வளர்க்கும். ‘அந்தக் கிழவர் யார்?’ என்பதையறிய சுதர்மன் முயல்கிறான். ‘என்னையறிய முயற்சி செய்யாதே, உன் பகைவன் என் பகைவன். இது மட்டும் தெரிந்து கொள்’ என்கிறார் முதியவர்.
ஒரு நாள் காலை வாள் பயிற்சி நடந்து முடிந்த நேரம், தண்டோரா போடும் சத்தம் கேட்கிறது. ‘பொக்கிஷம் திறக்க வாரீர், பரிசு பெற்றுச் செல்வீர்’. கிழவர் யோசிக்கிறார். அரண்மனைக்குள் செல்ல நல்ல சமயம் என்று நினைத்து அரண்மனை சென்றார். கிழவர் பொக்கிஷ அறைக்குள் புகுந்தார். நாலைந்து முயற்சிகளுக்குப் பிறகு ஒரு சாவியினால் கஜானாவைத் திறந்தார். அமைச்சன் ஆச்சரியமடைந்தான். பரிசுப்பணத்தை அளிக்கும்படி வேண்டினார் கிழவர். இவருடைய சாமாத்தியத்தை அறிந்த சேனாதிபதி, ‘இங்கே அரண்மனையிலேயே தங்கியிருங்கள். உங்கள் உதவி எங்களுக்குத் தேவைப்படும்’ என்றான்.
மணிபுரி மகுடம் தரிக்க சேனாதிபதி நாள் குறித்தான், வெளிநாட்டரசர்களுக்கு எல்லாம் ஓலை அனுப்பினான். வெள்ளி, வள்ளி, கொன்றை, குன்றநாடு என்று பலநாட்டு மன்னர்கள் வருகை தருகிறார்கள். பொக்கிஷத்தைத் திறந்த கிழவரை அரண்மனையில் காணவில்லை. சேனாதிபதி காங்கேயனுக்கு ஒரு சந்தேகம். அமைச்சனுடன் அரச குமாரனைப் பார்க்கக் காட்டுக்குப் போகிறான். அங்கே அந்த முதியவர், அரச குமாரனுக்கு வில், வாள் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். எழுந்த கோபத்தில் சேனாதிபதி, தன் உடை வாளை உருவி, அரச குமாரனை வெட்ட வாளை ஓங்குகிறான். கிழவரின் வாள் அதைத் தடுக்கிறது. சேனாதிபதி வாள் கீழே விழுகிறது. உயிர் மேல் ஆசை கொண்டு அதிர்ச்சியும், பீதியும் தாங்காமல் அரண்மனை திரும்புகிறான்.
பலநாட்டு மன்னர்களும் சேனாதிபதியை ‘அரசகுமாரன் எங்கே? அவனை முதலில் கொண்டு வந்து காட்டு. பிறகு ‘நீ முடி சூடலாம்’ என்கின்றனர். ‘இதோ, அரசகுமாரன்!’. ஒலிவந்த திசையைப் பார்க்கின்றனர் அனைவரும். அந்த முதியவருடன் கையில் வாளுடன் வீரம் செறிய வந்து நிற்கிறான் சுதர்மன். சபையுள் நுழைந்த கிழவர் - தம் தாடி மீசை எல்லாவற்றையும் உரித்தெடுத்துப் போட்டார் - பார்த்தவர்கள் பிரமித்தனர்.
‘நான்தான் ராணி விஜயராணி, சேனாதிபதியும் அமைச்சனும் கனவு கண்டபடி நான் இறக்கவில்லை. என் பிள்ளையை இந்த நாட்டு அரச குமாரனை வீரமகனாக வளர்த்திருக்கிறேன்’ என்று கர்ஜனை புரிகிறாள்.
சுதர்மன், சேனாபதியை மன்னித்து, தன்நாட்டைக் குடியரசாக அறிவிக்கிறான்.