Primary tabs
-
4.7 தொகுப்புரை
தமிழ்ச் சமுதாயம் ஒரு ஆணாதிக்கச் சமுதாயமாக இருப்பதைப் பார்க்கிறார் பாரதிதாசன். பெண்களைத் தெய்வங்கள் என்று போற்றிக் கொண்டே, இன்னொரு பக்கம் இழிநிலையில் வைத்திருக்கும் காட்சியும் கவிஞரின் கண்களுக்குப் புலப்படுகிறது. இந்த விழ்ச்சியிலிருந்து பெண்மக்களைக் கரையேற்ற முயன்று இருப்பதை வீரத்தாய் கவிதைக் காவியத்தில் காண முடிகிறது.
கதை மாந்தர்கள் அனைவரிலும் தலைமை சான்றவளாகப் பெண்ணே படைக்கப்பட்டுள்ளாள். மன்னன் மதுவிலே மயங்கிக் கிடக்கிறான். படைத் தலைவன், பதவியைப் பிடித்திடத் திட்டம் போடுகிறான். பக்கத்துணைக்கு அமைச்சனையும் அழைத்துக் கொள்கிறான் - பதவி ஆசைகாட்டி! சூழ்நிலையை உருவாக்கிச் சூழ்ச்சியால் நாட்டைக் கைப்பற்ற முயலும் படைத்தலைவனின் சூதினை, பின்புலம் ஏதுமின்றித் தன் தோள் வலிமை ஒன்றையே நம்பித் தகுந்த நேரமும் காலமும் பார்த்திருந்து, சமயோசித புத்தியைப் பயன்படுத்தி வெற்றி வாகை சூடுகிறாள் வீரத்தாய் விஜயராணி.
வெற்றிக்கான விதையைச் சரியாகப் பாதுகாப்பதில் வீரத்தாய் விழிப்பாக இருக்கிறாள். கிழவராக மாறுவேடம் பூண்டு, கெட்டு வளர வேண்டிய மகனைப் பக்குவமாக வளர்த்து, ஒழுக்கம் மிக்க வீரனாகச் சுதர்மனை வளர்க்கிறாள். பகைவனை அண்டி அவனிடம் பதவி பெற்றுப் பக்குவமான காலம் வந்ததும் பலரும் அறிய அவனது வஞ்சனைத் திரைகிழித்து வெளியே வரவழைக்கும் மனவுறுதியும் அறிவு முதிர்ச்சியும் பெற்றவளாக விளங்குகிறாள் விஜயராணி.
பெண் என்றால் இப்படியல்லவா பிறந்திடல் வேண்டும்; பெண்ணுலகமே இப்படி ஆகிவிட்டால் துன்பமெல்லாம் பிறக்காதல்லவா? அதனால்தான் ‘வீரத்தாய்’ எனும் பட்டம் சூட்டிப் பெருமிதம் கொள்கிறார். பாவேந்தர் பாரதிதாசன். புரட்சிக்கவிஞர் தம் இதயத்தில் பொங்கிப் புறப்பட்ட பெண்ணின் பெருமையே வீரத்தாயாக உருக்கொண்டுள்ளது. ஆண் துணையேயில்லாமல் பெண்கள் அரசியலில் சாதித்துக் காட்ட முடியும் என்பதை நினைவூட்டுவதே இந்தக் கதையாகும்.