Primary tabs
-
4.6 பா நலம்
எதுகை மோனை கவிதையின் அடிப்படைக் கூறு. பாரதிதாசன் எதுகை மோனையைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். அதைப்போல, கவிதைக்கு மெருகு ஊட்டும் உவமைகளையும் பயன்படுத்தியுள்ளார். இவை காப்பியத்தின் பா நலத்தை எடுத்துரைக்கின்றன.
எதுகை மோனைகள் தாமாகவே வந்து கவிஞருக்குக் கை கொடுப்பதைக் காணலாம்.
கீழ்க்குறிப்பிடப்படும் பாடல்கள் எதுகை மோனைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
“ஆடை அணிகலன் ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதுவும்,
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்
கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர்குலம்”
“எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்
செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும்”எனும் பாடல்களில் எதுகை மோனை நயங்களுடன், தமது நேர்க்கூற்றாகவே தமிழ்க்கனல் கொப்பளிக்கும் பாடல்களை இயற்றியுள்ளார்.
கவிஞர்கள் தங்களுடைய உணர்வுகளைத் தெளிவாகவும் கூர்மையாகவும் வெளிப்படுத்துவதற்கு உவமைகளைக் கையாள்வார்கள். அந்தவகையில் காப்பியப் பாத்திரப் படைப்புகளின் அவலநிலை, ஆற்றல், செயல்திறம், தோற்றம், இயற்கையை வருணித்தல் ஆகியவற்றை விளக்க வீரத்தாயில் பல இடங்களில் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார் பாரதிதாசன்.
இலட்சியத்தை அடைவதற்காக ‘நீறுபூத்த பெருங்கனல் போல் பொறுத்திருப்பாய்’ என்று சுதர்மனுக்கு விஜயராணி அறிவு புகட்டுவதைக் காண முடிகிறது.
‘பிணிபோல் அன்னவன் பால் தீயொழுக்கம்’ என்று சுதர்மனுக்குத் தீயொழுக்கம் பிடித்திருக்கிறது என்பதைச் சேனாபதியின் மூலம் பயன்படுத்தியிருப்பதும்,
“மானைத் துரத்தி வந்த வாளரி போல் வந்து குறித்தெடுத்துப் பார்க்கின்றீர்” என்று வெள்ளிநாட்டு வேந்தனின் பேச்சிலும்,
‘கானப்புலி போல் கடும் பகைவர் மேற்பாயும்’ என்று சுதர்மனின் வீர உரையிலும் உவமைகளைப் பயன்படுத்திருப்பதைக் காணமுடிகிறது.
ஆள் நடமாட்டமே இல்லாத சிற்றூரின் நிலையை “ஆந்தை அலறும் அடவி சிற்றூர்” என்று வருணிப்பதைக் காணலாம். இவ்வாறு வீரத்தாய் காவியத்தில் உவமை, உருவகம், கற்பனை, ஓசை, சந்த நயங்களை அமைத்துச் செஞ்சொல் கவி இன்பத்தைப் பெற வைத்துள்ளார் பாரதிதாசன்.