Primary tabs
5.2 பாலைத் திணையின் முப்பொருள்கள்
நிலமும் பொழுதும் முதற்பொருள்; தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், மரம், தொழில் போன்றவை கருப்பொருள்கள்: நிலத்திற்கு உரிய மக்களின் ஒழுக்கம் உரிப்பொருள் என்பதை முன்பே அறிந்தீர்கள். பாலைத் திணைக்கு உரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதியில் அறியலாம்.
முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் மழையின்றி வறண்டு தம் வளமான இயல்பு குறையும்போது அவை பாலை நிலம் எனப்படும். பாலைக்கு உரிய நிலம் சுரமும் சுரம் சார்ந்த இடமும் ஆகும். சுரம் என்பது வறண்ட, பயனற்ற வெயில் கொளுத்தும் காட்டுப் பகுதியைக் குறிக்கும். எனவே பாலை எனத் தனி ஒரு நிலப் பகுப்பு இல்லை. வறட்சியின் காரணமாகவே பாலை நிலம் தோன்றுகிறது.
- பெரும் பொழுது
பாலையின் பெரும்பொழுது இளவேனிற் காலமும் முதுவேனிற் காலமும் ஆகும். இளவேனிற் காலம் என்பது சித்திரை, வைகாசி மாதங்கள். முதுவேனிற் காலம் என்பது ஆனி, ஆடி மாதங்கள். மொத்தத்தில் வெயில் சுட்டெரிக்கும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களே பாலைத் திணைக்குரிய பெரும்பொழுது ஆகும். பாலையின் பெரும்பொழுதாகப் பின்பனிக் காலத்தையும் குறிப்பிடுவர்.
- சிறுபொழுது
நன்றாக வெயில் சுட்டெரிக்கும் நேரமான பகல் 12 மணி முதல் மதியம் 2 மணிவரை உள்ள நண்பகல் நேரமே பாலையின் சிறுபொழுது ஆகும்.
பாலைத்திணைக்கு உரிய கருப்பொருள்கள்.
தெய்வம்
:கொற்றவை (காளி)மக்கள்:விடலை, காளை, எயிற்றி, எயினர்,
எயிற்றியர், மறவர், மறத்தியர்.பறவை:கழுகு, பருந்துவிலங்கு:செந்நாய், இளைத்த யானை, புலிஊர்:குறும்புநீர்:வற்றிய கிணறுபூ:பாதிரி, மரா, குராமரம்:இருப்பை, ஓமை, பாலைஉணவு:வழிப்பறி செய்த பொருள்கள், வளமான
பகுதிகளில் சென்று கொள்ளை அடித்த
பொருள்கள்பறை:போர்ப்பறை, ஊரெறி பறைபண்:பாலை (பஞ்சுரம்)யாழ்:பாலையாழ்தொழில்:வழிப்பறி செய்தல்.பாலைத் திணைக்கு உரிய உரிப்பொருள் பிரிதலும் பிரிதல் தொடர்பான நிகழ்வுகளும் ஆகும். பொருள் ஈட்டத் தலைவன் பிரியக் கருதுதல், அதனைத் தோழி வாயிலாகத் தெரிவித்தல், தலைவி வருந்திப் பிரிவுக்கு உடன்படாமை, தோழி தலைவனைப் பிரியாதிருக்கச் செய்தல், பின் தலைவன் பிரிதல், பாலை நிலக் கொடுமைகளை நினைத்துத் தலைவி அஞ்சுதல், தோழி தேற்றுதல், பிரிந்திருக்கும் இடத்திலிருந்து கொண்டு தலைவன் வருந்துதல் போன்ற நிகழ்வுகளையும் கூற்றுகளையும் பாலைத் திணைப் பாடல்களில் காணலாம். தலைவி தலைவனோடு பிறர் அறியாமல் உடன்போக்கில் சென்றுவிடத் தலைவியின் பிரிவால் தாயர் வருந்துவதும் பாலைத் திணையில் கூறப்படும்.