Primary tabs
- 5.4 பாலைத் திணையின் இயல்புகள்
பாலை நிலத்து மக்களின் ஒழுக்கம், பண்பு ஆகியவற்றை நோக்கும் போது பாலையின் சிறப்புகளாகக் குறிக்கப்படுவன பின்வருமாறு:
(1) உடன்போக்கு
(2) நற்றாய் வருந்துதல்
(3) செவிலி மகளைத் தேடிச் செல்லல்
(4) செலவு அழுங்குவித்தல்
(5) தலைவியை ஆற்றுவித்தல்இவை பாலைத் திணைக்கு உரிய சில அகவாழ்க்கை நிகழ்வுகள் ஆகும். கீழ் வருவன பாலைத் திணைக்கு உரிய புறவாழ்க்கை நிகழ்வுகள் ஆகும்.
(1) கொள்ளை அடித்தல்
(2) அறம் பாராட்டல்
காதல் கொண்ட தலைவனும் தலைவியும் பிறர்க்குச் சொல்லாமல் ஊரை விட்டுச் சென்றுவிடுவது உடன்போக்கு எனப்படும். தலைவனுடன் தலைவி போவதால் இது உடன்போக்கு என்று சொல்லப்படுகிறது.
உடன்போக்கு என்பதற்குக் களவுக் காதலர் கற்பு வாழ்க்கை மேற்கொள்ள ஊரை விட்டுச் செல்வது என்று பொருள் கொள்ளலாம்.
தலைவன் பொருள் ஈட்டச் செல்கிறான். தன்னை அவன் பிரிகிறான் என்பதை உணர்ந்த தலைவி வருந்துகிறாள். தோழி தலைவனிடம் போய்த் “தலைவியையும் உடன் அழைத்துச் செல்” என்கிறாள். அவன் அதற்குச் சரி என்கிறான். தோழி தலைவியிடம் இதனைச் சொல்லத் தொடங்குகிறாள்.
“தோழியே கேள் ! தலைவன் பொருள் ஈட்டப் பிரிந்து போவான் என்ற நம் மனத்துன்பம் நீங்கித் தொலைவில் செல்லவிருக்கிறது.
தலைவன் செல்லும் வழியில் கூர்மையான பல்லை உடைய பெண் செந்நாய் பசியால் வருந்தும். அதன் பசியைப் போக்க நினைக்கும் ஆண் செந்நாய். அப்போது பெண்மான் ஒன்று ஆண் கலைமானைத் தேடிக் கொண்டிருக்கும். ஆண் செந்நாய், ஆண் கலைமானின் தொடையைச் சிதைக்கும் (கிழிக்கும்). இதைக் கண்டு பெண்மான் அலறும். வெப்பம் மிக்க வழியாக அவ்வழி இருக்கும். ஆறலை கள்வர்கள் (ஆறு + அலை + கள்வர் - வழியில் மறித்துத் துன்புறுத்துகின்ற திருடர்) வழிப்போக்கர் மீது கல்லை எடுத்து எறிவர். கிழிசல் ஆடையையும், உலர்ந்த குடையையும் உடைய வழிப்போக்கர் அஞ்சி மரத்தில் ஏறுவர். உணவை வேட்டையாட எண்ணி இனத்திலிருந்து பிரிந்து வந்த பருந்து வானத்தில் பறக்கும் பொழுதை எதிர் நோக்கி அம்மரத்தில் இருக்கும். இத்தன்மையான கடுமையும் கொடுமையும் நிறைந்த காட்டு வழியில் பெரிய தோளையும் குவளை மலர் போன்ற கண்களையும் உடைய இவளும் நம்முடன் வருவாள்” என்று தலைவன் கூறியதாகத் தோழி கூறுகிறாள். (அகநானூறு -285, காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்)
பாலை நிலம் வெப்பமும், காட்டு விலங்குகள், ஆறலை கள்வர்கள் ஆகியோரின் கொடுமைகளும் நிறைந்ததாயினும், தலைவியின் பிரிவுத் துயருக்கு அஞ்சி அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்லத் தலைவன் துணிகிறான் என்பதை இப்பாடலில் காண்கிறோம்.
உடன்போக்கில் தலைவனுடன் சென்றுவிட்டாள் தலைவி. பிரிவைத் தாங்காமல் மகளை நினைத்துப் புலம்புகிறாள் தாய். தாய் என்பது பெரும்பாலும் செவிலித் தாயைக் குறிக்கும். செவிலித் தாய் என்பவள் வளர்ப்புத் தாய். தாய் என்பது நற்றாயைக் குறிப்பதும் உண்டு. நற்றாய் என்பவள் பெற்ற தாய்.
உடன்போக்கில் சென்ற மகள் விட்டுச் சென்ற அவள் விளையாடிய பொருள்களைப் பார்க்கிறாள் நற்றாய். கண்கள் கலங்குகின்றன. வாய் புலம்புகிறது.
“நீர் வேட்கை (தாகம்) மிகுந்ததால் யானை வங்கியம் என்னும் இசைக்கருவி போல் துதிக்கையை உயர்த்திப் பிளிறும். அக்கொடிய வழியில் என்மகள் சென்றுவிட்டாள். பந்து, பாவை, கழங்கு என்று அவள் விளையாடிய பொருள்களை விட்டுவிட்டுச் சென்று விட்டாளே. அது ஏன்? நான் அவற்றைக் கண்டு அவளை நினைந்து வருந்தத்தானோ?”
சென்றனள் மன்றஎன் மகளே
பந்தும் பாவையும் கழங்கும்எமக்கு ஒழித்தே
(ஐங்குறுநூறு - 377)(பாவை = பதுமை, பொம்மை; கழங்கு = பெண்கள் விளையாடும் கருவி)
களவு ஒழுக்கத்தில் இடையூறு ஏற்பட்டதால் தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டுச் செல்கிறான். இச்செய்தியைக் கேள்விப்படுகிறாள் செவிலி. அழுது புலம்பியபடி தன் மகளைத் தேடிக் காட்டுவழியில் செல்கிறாள் அவள்.
மகளைத் தேடிவரும் செவிலி ஒழுக்கத்தில் சிறந்த அந்தணர் சிலரை வழியில் காண்கிறாள். அவர்களிடம்,
இவ்இடை
என்று கேட்கிறாள்.
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாம்அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும !
(கலித்தொகை- 9 : 5-8)“அந்தணர்களே ! என் மகள் ஒருத்தியும், வேறொருத்தியின் மகனும் மற்றவர் அறியாது தமக்குள் கூடியவர்; இன்று மற்றவர் அறியுமாறு கூடி அவர்கள் சென்றுவிட்டனர். அவர்கள் இருவரையும் இந்தக் காட்டில் கண்டீர்களா?” என்பது இப்பாடல் அடிகளின் பொருள்.
இவ்வாறு வளர்த்த பாசம் தாளாமல் உடன்போக்கில் சென்ற தன் மகளைத் தேடிச் செல்லும் செவிலித் தாயைப் பாலைத் திணைப் பாடல்களில் காண முடிகிறது.
தலைவன் பிரிந்து செல்வதைத் தோழி தன் நாவன்மையால் தடுத்து விடுவதும் உண்டு. செலவு என்றால் பயணம், அழுங்குவித்தல் என்றால் தவிர்த்துவிடல் அல்லது நிறுத்தச் செய்தல் ஆகும். ‘பயணம் தவிர்த்து விடல்’ என்பதே ‘செலவு அழுங்குவித்தல்’ என்பதற்குச் சரியான பொருள் ஆகும்.
தோழி தலைவியின் இளமை தொலைதல் பற்றித் தலைவனிடம் கூறுகிறாள். அவன் பிரிந்து செல்வதைக் கைவிடுகிறான்.
மலை கடந்து தேடும் பொருள், காடு கடந்து தேடும் பொருள் பொருள் ஆகாது. அருந்ததி போன்ற கற்பினை உடைய தலைவியைப் பிரியாது இருத்தல்தான் உண்மையான பொருள் என்று தலைவனுக்கு உணர்த்துகிறாள் தோழி.
மலைஇறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ?...
கடன்இறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ? வடமீன்போல் தொழுதுஏத்த வயங்கிய கற்பினாள்
தடமென்தோள் பிரியாமை பொருள்
(கலித்தொகை 2 : அடிகள் 12, 20, 21, 22)(கடன் = சுரம்; இறந்து = கடந்து; வடமீன் = அருந்ததி; தொழுதுஏத்த = வணங்கி வாழ்த்தும்படி; வயங்கிய = விளங்கிய; தடமென்தோள் = பெருமையுடைய மென்மையான தோள்கள்)
பாகனின் அங்குசத்தால் குத்தப்பட்டும் அடங்காமல் வேகமாகச் செல்லும் ஆண்யானை யாழ் ஓசை கேட்டு மயங்கி நின்றது. அதைப்போல் தோழியின் மென்மையான பேச்சைக் கேட்டுத் தலைவன் மனம் மாறிப் பயணத்தைத் தவிர்த்து விடுகிறான் என்று வரும் இப்பாடல் கருத்து நினைத்துச் சுவைக்கக் கூடியது.
தலைவனின் பிரிவை எண்ணி வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறி அப்பிரிவைத் தாங்கச் செய்வாள் தோழி. இதனை ஆற்றுவித்தல் என்று சொல்வர்.
குறுந்தொகைப் பாடல் ஒன்றில் தோழி தலைவியிடம், ‘தலைவர் உன் மீது மிகுந்த அன்புடையவர். ஆகவே விரைந்து வந்து விடுவார்’ என்று கூறித் தேற்றுகிறாள்.
நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி அவர்சென்ற ஆறே
(குறுந்தொகை -37, பாலை பாடிய பெருங்கடுங்கோ)(நசை = விருப்பம்; நல்குவர் = அருள் செய்வார்; பிடி = பெண்யானை; களைஇய = நீக்குவதற்காக; வேழம் = ஆண் யானை; யாஅம் = யாமரம்; பொளிக்கும் = பட்டையை உரிக்கும்)
“தோழி! தலைவர் உன்மீது மிகுந்த விருப்பம் உடையவர்; அவர் சென்ற வழியில் பெண்யானையின் பசியைப் போக்க ஆண்யானை யாமரத்தின் பட்டையை உரித்துக் கொண்டிருக்கும் அன்பான காட்சியைப் பார்ப்பார்; அதனைப் பார்த்ததும் உன்னை நினைத்து உடனே திரும்புவார்” என்பது தோழியின் ஆறுதல் கூற்று.
பாலைத் திணை பிரிவைக் குறிக்கும் திணை. பிரிவு தலைவி - தலைவன் இருவர்க்குமே வருத்தம் தருவது. அவ்வருத்தத்திற்கு ஏற்ற பின்னணி யாகவே வறண்ட காடு, மழையின்மை, வெயில் கொடுமை, விலங்குகளால் வரும் கொடுமை, ஆறலை கள்வர்களால் வரும் துன்பம் ஆகியன காட்டப்படுகின்றன. வழிப்பறி, கொள்ளை எல்லா இடத்தும், எல்லாக் காலத்தும் உள்ளனவே. ஆயினும் பிரிவுத் துயருக்குப் பின்னணியாகக் காட்டவே இவை பாலைத் திணைப் பாடல்களில் பேசப்படுகின்றன.
கொடிய காட்டு வழியில் அலைந்து அங்கு வரும் பிறரது உடைமைகளைக் கொள்ளை அடித்து வாழ்வர் ஆறலை கள்வர்கள்.
ஆறலை கள்வர் அல்லது கள்வரைப் பற்றிப் பல பாலைப் பாடல்கள் கூறுகின்றன.
ஆறலை கள்வர் வழியில் செல்பவரை வருத்துபவர்கள்; அவர்தம் பொருளைக் கவர்பவர்கள்; அப்பொருள் கொண்டு உண்பவர்கள்; பயிர்த் தொழில் முதலியவற்றைச் செய்து உண்ண விரும்ப மாட்டார்கள்; மழையை விரும்ப மாட்டார்கள்; கொள்ளை அடித்திடக் காட்டு வழிகளை விரும்புபவர்கள்; வில்லாகிய ஏரால் பிறர் உடலில் உழுபவர்கள்.
கான்உயர் மருங்கில் கவலை அல்லது
வானம் வேண்டா வில்ஏர் உழவர்
பெருநாள் வேட்டம் கிளைஎழ வாய்த்த
பொருகளத்து ஒழிந்த குருதி
(அகநானூறு- 193: 1-4, மதுரை மருதனிள நாகனார்)(கான் = காடு; மருங்கில் = பக்கத்தில்; கவலை = வழி; வானம் வேண்டா = மழையை விரும்பாத; வேட்டம் = வேட்டை; பொருகளம் = போரிடும் இடம்; கிளை = சுற்றம்)
“உயரமான காட்டில் உள்ள கிளை பிரிந்த வழிகளைத் தவிர மழையை விரும்பாத, வில்லாகிய ஏரால் உழும் ஆறலை கள்வர் சுற்றத்துடன் புறப்பட்டுச் சென்றபோது கிடைத்தது நல்ல வேட்டை. அவ்வேட்டையில் வழிச் செல்பவரோடு போரிடுகிறார்கள். அப்போது வழிச்செல்பவரின் உடலில் இருந்து இரத்தம் சிந்துகின்றது” என்று ஆறலை கள்வரின் கொள்ளை அடிக்கும் வாழ்க்கை பற்றி இப்பாடல் அடிகள் கூறுகின்றன.
தலைவன் பொருள் தேடிப் பிரிவதைச் சொல்வது பாலைத் திணை. பொருள் எதற்கு? இல்லாதவர்க்குக் கொடுப்பதாகிய அறம் செய்வதற்கு. ஆகவே பாலைத் திணைப் பாடல்களில் தலைவனின் பொருள் தேடும் முயற்சியைச் சொல்லும் போது, பொருளால் செய்ய வேண்டிய அறம் பற்றிப் புலவர்கள் எடுத்துரைப்பதைக் காணலாம்.
பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாடல்கள் பலவற்றில் உலக வாழ்க்கையின் நல்லறங்களை எடுத்துரைக்கும் இயல்பினைக் காண முடிகிறது.
- வினையே உயிர்
தொழிலை உயிராகக் கருதுபவர் ஆண்கள். இல்லத்தில் வாழும் பெண்களுக்கு உயிர் அவர்தம் காதலரே. பாலை பாடிய பெருங்கடுங்கோவின் குறுந்தொகைப் பாடலில் இக்கருத்தைக் காணலாம்.
வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதல்
மனைஉறை மகளிர்க்கு ஆடவர் உயிர்
(குறுந்தொகை - 135 : 1-2)(வாள் நுதல் = ஒளி பொருந்திய நெற்றி; மனைஉறை = இல்லத்தில் வாழும்)
- ஈயாமை
சேர்த்து வைத்த பொருளைத் தன்னை நாடி வந்து இரப்பவர்க்குக் கொடுத்து வாழ்வதுதான் சிறந்தது. இரப்பவர்க்குக் கொடுக்காது (ஈயாது) வாழ்வது இழிவு ஆகும். இக்கருத்தைக் குறுந்தொகைப் பாடலில் பாலைபாடிய பெருங்கடுங்கோ சுவையாக வெளிப்படுத்துகிறார்.
தலைவன் பிரியப்போகின்றான் என நினைக்கிறாள் தலைவி. அவள் அச்சம் நீக்குகின்றான் தலைவன்.
“உன்னைப் பிரிந்து சென்று நான் நீண்ட நாள் தங்கி விட்டால், இரப்போர் என்னிடம் வாராத நாள்கள் பல ஆகட்டும்” என்று கூறுகிறான் அவன்.
இரவலர்க்கு வழங்க வேண்டும் என்றால் அவர்கள் வழங்குபவரை நாடி வரவேண்டும். அவர்கள் வராமல் பொருள் வழங்கும் ஒருவனை ஒதுக்கிவிட்டால் அது கொடுமையானது. தலைவியைப் பிரிந்தால் இரப்போர்க்கு வழங்கும் அறநெறி தனக்கு இல்லாமல் போகட்டும் என்பது தலைவனின் கருத்து. (குறுந்தொகை - 137)
இல்என இரந்தார்க்குஒன்று ஈயாமை இழிவு
(கலித்தொகை- 2 : 15)எனக் கலித்தொகையில் இவர் காட்டுவதும் இங்குக் கருதத்தக்கது.
- பொருள் தேடல்
பொருள் தேடும் நேர்மையான முறையில் இருந்து நீங்கிப் பொருள் தேடக்கூடாது. அப்படித் தேடிய பொருள் அவரை விட்டு நீங்கும். இப்பிறவி மட்டுமின்றி, மறுபிறவியிலும் அப்பொருள் அவர்க்குப் பகையாகும் என்கிறது கலித்தொகைப் பாடல் ஒன்று.
செம்மையின் இகந்துஒரீஇப் பொருள்செய்வார்க்கு
(செம்மையின் இகந்து ஒரீஇ = நேர்வழியில் இருந்து நீங்கி)
அப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ
(கலித்தொகை-14 : 14-15)எனவே நேர்மையாகப் பொருள் தேடவேண்டும் என்ற அறம் இங்கு வலியுறுத்தப்படுகிறது.
- வாழ்க்கை நடத்தல்
குறிப்பிட்ட பருவம் வரை பெற்றோர்க்கு உரியவள் பெண். உரிய பருவம் வந்தபோது நல்ல ஆணைத் துணையாகக் கொண்டு அவனோடு சென்று இல்லறம் நடத்துவது நல்லறமே ஆகும். இக்கருத்தை,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
அறம்தலை பிரியா ஆறும்மற்று அதுவே
(கலித்தொகை - 9 : 23-24)(இறந்த = மிகுந்த; எவ்வம் = வருத்தம்; படரன்மின் = செய்யாதீர்கள்; வழிபடீஇ = வழிபட்டு; அறம் தலைபிரியா = அறத்தினின்று தவறாத; ஆறு = வழி; மற்று = பொருள் அற்ற அசைச்சொல்)
உடன்போக்கில் சென்று விட்ட தலைவியைத் துன்புறுத்தாதீர் எனச் செவிலியிடம் அறவோர் கூறும்போது இல்லறமே சிறந்த அறம் என இவ்வாறு எடுத்துரைக்கின்றனர்.