Primary tabs
-
கல்வி ஓர் அழியாச் செல்வம் என்று விளக்கிய வள்ளுவர்அந்த
அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்பதினால் வரும்
சிறப்புகளையும் குறிப்பிடுகிறார். அது கண் போன்றது என்கிறார்.
‘கண்’ என்றால் தமிழில் ஒளி என்று பொருள்.கல்வி எவ்வாறு
ஒளியாக விளங்குகிறது என்பதையும் விளக்குகிறார்.எல்லா உறுப்புகளும் சரியாக இருந்தும், ‘கண்’ இல்லாவிட்டால்
ஒருவனால், பொருள்களையும், காட்சிகளையும், இயற்கையின்
அழகுகளையும் காண இயலாது. எனவே அவன் ஒரு முழுமை
பெற்ற மனிதனாகக் கருதப்படமாட்டான். இந்த உண்மையின்
அடிப்படையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், தேவையையும்
வற்புறுத்த விரும்பிய வள்ளுவர், கல்வியைக் கண்ணோடு
ஒப்பிடுகிறார்.நம் வாழ்க்கையின் இன்பதுன்பங்கள் பலவற்றிற்கும்,
புறக்காட்சிகளும், நிகழ்ச்சிகளும்தானே காரணம்? நாம் பார்க்கும்
சில விபத்துகள் நம் உள்ளத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. நம்
கண்முன்னாலே அடிக்கடித் தோன்றி மறைகின்றன. இந்தக்
காட்சியை நாம் பார்த்திருக்காவிட்டால், எந்தப் பாதிப்பும்
ஏற்படாது இல்லையா?மகிழ்ச்சியோ, துன்பமோ, நாம் பார்க்கும் காட்சி அல்லது
நிகழ்ச்சியால் தானே அமைகின்றது? இந்த அனுபவத்தை அல்லது
நுகர்வை எது வழங்குகிறது? கண். காலம்காலமாக அறிஞர்களும்
சான்றோர்களும் தாம் கண்டவற்றையும், அவற்றின் அடியில்
எழுந்த சித்தாந்தங்களையும், கொள்கைகளையும்,
கண்டுபிடிப்புகளையும், அறிவுரைகளையும், இன்ன பிறவற்றையும்
நம் புலனுக்குக் கொண்டு வருவது கல்வியே. இக்காரணம் கருதி,
வள்ளுவர், கல்வியைக் கண் என்கிறார்.
கல்வியின் அடிப்படை எண்ணும் எழுத்தும். இலக்கியம், சமயம்,
தத்துவம், அறிவியல், கணிதம் எனக் கல்வியின் துறைகள்
அனைத்தும் எண்ணையும் எழுத்தையும் சார்ந்தே அமைந்துள்ளன.சில துறைகளில் எண்ணின் சார்பு மிகுதியாகவும் சிலவற்றில் எழுத்தின் சார்பு
மிகுதியாகவும் உள்ளன. எண், எழுத்து
ஆகிய இரண்டும் மனிதர்க்கு இருகண்கள்.
இரண்டு கண்களும் பொருந்தி இருத்தல்
முகத்திற்கு அழகு. எண்ணும் எழுத்தும்
பொருந்தியிருத்தல் கற்ற கல்விக்கு அழகு.
5:3:1 அறிவு வளர்ச்சிக்கு அகச்சான்று
இக்குறளுக்கு அறிஞர் பலர விளக்கம் தந்துள்ளனர். வள்ளுவரின்
பெருமையும், தமிழ் அறிவியல் வளர்ச்சிக்கு இக்குறளில் காணும்
அகச்சான்றினையும், அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்கள்
எடுத்துச் சொல்வது கவனிக்கத்தக்கது.‘இன்று மனித வாழ்வில் பெரிய புரட்சியை ஏற்படுத்தி, நாள்
ஒருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும்
கணிப்பொறி ‘ 0 ‘, ‘ 1 ‘ என்ற இரண்டு எண்களின்
அடிப்படையில் செயல்படுகின்றது. இதில், முழுவதுமாக எண்ணை
அடிப்படையாகக் கொண்ட குறியீட்டு மொழிகளைத் தான்
பயன்படுத்துகிறார்கள். எனவே, ‘எண்ணென்ப, ஏனை எழுத்தென்ப’
என்று கூறிய வள்ளுவர், எண்ணின் இடத்தையும், எழுத்தின்
இடத்தையும் ஆழமாக, அறிவார்த்தமாக அறிந்தே எழுதியிருக்கிறார்.காலம், இடம் இரண்டும் கடந்து நிற்கும் தன்மை வாய்ந்த
உண்மைகளை மட்டும் இயன்ற அளவில் அசாதாரண மேதைத்
தன்மையுடன் வடித்து எடுத்துச் சொல்லும் உத்தியைத் தமது நூல்
முழுவதும் பெரும்பாலும் கையாண்டிருக்கிறார். எண் என்பது
இலக்கம். எண் என்பது கணிதம். எண் என்பது மனம். எண்
என்பது சிந்தனை. தமிழர்கள் மனத்திற்கும், மனத்தில் எழும்
சிந்தனைக்கும், சிந்தனையின் உயர்ந்த நிலையில் உருவாகும்,
கணிதத்திற்கும், கணிதத்தின் அடிப்படையான இலக்கம் எனும்
குறியீட்டிற்கும், ஒரே சொல்லைப் பயன்படுத்தி இருப்பது,
வியக்கத்தக்க ஒன்றாகும். அன்றைய அறிவு வளர்ச்சி நிலைக்கு
இதை ஓர் அகச்சான்றாகவும் சொல்லலாம்.பயில் முறைப் பயிற்சி
‘எண்’ என்ற சொல்லைப் பல பொருள்படும்படித் தமிழர்
பயன்படுத்தியதை அறிஞர் திரு.வா.செ.கு. அவர்கள்
குறிப்பிட்டுள்ளார். பண்டைத் தமிழ் இலக்கியம் ‘எண்’ என்ற
சொல்லை வெவ்வேறு பொருள்படும்படி கையாண்டதைக் காண
விருப்பமா? உங்கள் இணையத்தின் வழியாக எமது நூலகத்தின்
அகராதிப் பிரிவை அணுகுங்கள். அதில் Tamil Lexicon -ன்
முதல் தொகுதியில் ‘எண்’ என்ற தலைச்சொல் (head-word)
லுக்கான விளக்கத்தைப் பாருங்கள்.
மேற்குறிப்பிட்ட கருத்துகள் எவற்றை வெளிப்படுத்துகின்றன?வள்ளுவரின் கருத்துகள், இன்றைய அறிவியல் உலகிற்கும்
பொருந்தும்; அவை என்றைக்கும் பொருந்தும்.கல்வியால் அறிவைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம்
அன்றையத் தமிழ்ச் சமுதாயத்தில் இருந்திருக்கிறது. அறிவாலும்,
ஆற்றலாலும் பண்பட்ட ஒரு சமுதாயத்தில் தான், இத்தகைய
இடம், காலம் கடந்த கருத்துகள் தோன்றும்.‘எழுத்து அறிவித்தவன் இறைவன்’ என்பார்கள். எழுதவும்
படிக்கவும் துணை செய்பவர், இறைவனுக்குச் சமமானவர்.
இதிலிருந்து கல்விக்கும் கற்பிப்பவனுக்கும் கொடுக்கும்
முக்கியத்துவம் நன்கு புலனாகிறது. வள்ளுவர் எழுத்தைக் கண்
என்று கூறுகிறார். எழுத்தைக் கற்பித்தவன் கண்ணை
வழங்கியவன், எனவே அவன் இறைவனைப் போன்றவன்.