தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 5.5-கல்லாதவரின் இழிவு

  • 5:5 கல்லாதவரின் இழிவு

    E

    கற்றவரின் சிறப்பைச் சொல்லிய வள்ளுவர், கல்லாதவர்
    நிலையையும் பல எடுத்துக்காட்டுகளின் மூலம் விளக்குகிறார்.
    கல்லாதவர் விலங்கினைப் போன்றவர். கல்லாதவர் கண்ணிருந்தும்
    கண் இல்லாதவர்களாகவே கருதப்படுவார்கள்.


    5:5:1 கல்லாதவர் - விலங்கு போன்றவர்

    சில நேரங்களில், சிலர், கொஞ்சம் கூட சிந்திக்காமல்,
    மூர்க்கத்தனமாக     நடந்திருப்பார்கள். உணர்ச்சிவயப்பட்டு,
    அடித்திருப்பார்கள் அல்லது தாக்கியிருப்பார்கள். அவர்களைப்
    பார்த்து ‘ஏ மிருகமே! கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? இப்படி
    மிருகம் போல் நடந்து கொள்கிறாயே’ என்று கோபமாகக்
    கூறுவோம். இதற்குக் காரணம் என்ன? தம் அறிவைப்
    பயன்படுத்தி, இவ்வாறு செய்யலாமா அல்லது செய்யக்கூடாதா
    என்று சிந்திக்காமல், மிருகத்தைப் போல் அவர்கள் நடந்து
    கொண்டிருப்பார்கள். மனிதத் தன்மையில் இருந்து விலகி,
    மிருகத்தன்மையுடன் செயல்பட்டு இருப்பார்கள். எனவே, மிருகம்
    என்று அழைக்கப்பட்டார்கள். மனிதனில் இருந்து மிருகம்
    வேறுபட்டது இல்லையா? ஒருவனை ‘மிருகமே’ என்று அழைத்தால்
    மகிழ்ச்சி அடைவானா?

    விலங்கு சிரிக்காது சிந்திக்காது. தனக்குரிய உணவைத் தானே
    தயாரிக்காது. ஆனால் மனிதன் அப்படிப்பட்டவன் அல்ல. அவன்
    சிரிப்பான், சிந்திப்பான். தனக்கு உரிய உணவைத் தானே உற்பத்தி
    செய்வான். எனவே விலங்கிற்கும் மனிதனுக்கும் மிகுந்த வேறுபாடு
    இருக்கிறது. இந்த வேறுபாட்டை நாம் எப்படிக் காட்டுவது?
    உருவத்தாலா? இல்லை. நம் அறிவால். அறிவு கொண்டு செய்யும்
    செயலால். அந்த அறிவை எங்கிருந்து பெறுவது? கல்வியால். பல
    நூல்களைக் கற்றுத் தெரிந்து கொண்ட கல்வியால். எனவே கல்வி
    அறிவு இல்லாத ஒருவன், மிருகம் போல்தான் செயல்படுவான்.
    செயல் முறைகளில் அவனுக்கும் மிருகத்திற்கும் அதிக வேறுபாடு
    இருக்க முடியாது. எனவே, வள்ளுவர்


    விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
    கற்றாரோடு ஏனை யவர்.



    (குறள் எண்: 410)


    (இலங்குநூல் = அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்)

    என்ற குறள் மூலம் இந்த உண்மையை வலியுறுத்துகிறார்.

    கல்வியைக் கற்காமல் இருந்தால் இந்தச் சமுதாயம் நமக்கு எந்தத்
    தகுதியைக் கொடுக்கிறது என்பதை இந்தக் குறள் மூலம் வள்ளுவர்
    குறிப்பிடுகிறார். அதோடு கல்வியைக்     கற்காமலிருப்பவர்
    நிலையையும் வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார்.


    5.5.2 கல்லாதவர் - கண்ணிருந்தும்
    குருடர்கள்!

    கல்வி கற்பவனைக் கண் உடையவன்
    என்றார். ஆனால் கல்லாதவனைப் பற்றி
    என்ன சொன்னார்? கல்லாதவன் முகத்தில்
    கண் உடையவனாக இருந்தாலும், அவைகள்
    புண்கள். எனவே அவன் முகத்தில் புண்
    உடையவன் என்கிறார்.


    கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு



    புண் உடையர் கல்லாதவர்.
    (குறள் எண்: 393)


    - என்பது குறள்.

    கண்ணுக்கு ஒளி என்றும் ஒரு பொருள் உண்டு என்று முன்னமே
    கூறினோம். கண் உயிரின் ஒளி. கல்வி உணர்வின் ஒளி.
    கல்வியாகிய கண் வாழ்க்கைக்கு ஒளிதரக் கூடியது. ஆனால் புண்?
    துன்பம்     தரும்.     உரிய     நேரத்தில்     புண்ணைக்
    குணப்படுத்தாவிட்டால், கண்ணின் பார்வையையே இழந்து
    விடுவோம். கூகைக்குப் (Owl) பகலில் கண் தெரியாது. இரவில்
    தெரியும். காகத்திற்கு இரவில் கண் தெரியாது பகலில் தெரியும்.
    ஆனால் முகத்தில் இரண்டு கண்களை உடைய கல்லாதவனுக்கு
    இரவிலும் பகலிலும் ஒன்றும் தெரியாது என்கிறார் வள்ளுவர்.

    புண் நிரந்தரத்தன்மை உடையது அல்ல. குணப்படுத்தக் கூடியது.
    கல்லாமையும் தற்காலிகமானது. கல்வியைக் கற்று, கல்லாமையைப்
    போக்கலாம். எனவே, இனியும் கல்வி கற்காமல் நாள்களை
    வீணாக்காதீர்கள் என்று வேண்டுகிறார் வள்ளுவர்.

    மேலும் கல்வி கற்பதற்கு, கால எல்லையோ, வயது வரம்போ
    கிடையாது. எந்த வயதிலும், எந்த நேரத்திலும் கல்வியைக
    கற்கலாம் என்பதையும் வள்ளுவர் உணர்த்துகிறார்.

    கண்ணையும் புண்ணையும் கல்வியோடு ஒப்பிட்டுக் கூறியிருப்பது
    மிகவும் யதார்த்தத் தன்மையுடன் அமைந்துள்ளது! இல்லையா?
    எவ்வளவு முக்கியமான கருத்து இது? கல்லாதவர் நிலையை
    இதைவிட எளிமையாகக் கூற முடியுமா?


    5.5.3 கல்லாதவர் - பயன் தரா நிலம் போல பூமிக்குப் பாரமானவர்

    ஒரு நிலம் வளமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான், அதில்

    நெல் முதலிய பயிர்களை விதைக்க முடியும்.
    விதைத்த பயிர் முளைக்கும், வளரும், பயன்
    கொடுக்கும். ஆனால் உவர் நிலத்தில்?
    எந்தப் பயிரும் முளைக்காது. முளைத்தாலும்
    வளராது. அந்த நிலத்தால் எந்தப்பயனும்
    இல்லை. உவர் நிலம்
    (Saline Soil)

    பாழாய்க்கிடக்கும். அதை யாரும் பயன்படுத்தமாட்டார்கள். கல்வி
    கல்லாதவர் நிலைமையும் அவ்வாறு தான் என்கிறார் வள்ளுவர்.


    உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
    களர் அனையர் கல்லாதவர்.



    (குறள் எண்: 406)


    (களர் = உவர் நிலம்; பயவா = பயன் ஏதும் தராத)

    சமுதாயத்தின் அங்கமாகிய மனிதன், ஏதோ ஒருவகையில்
    தன்னைச் சார்ந்த குடும்பத்திற்கோ, அல்லது சமுதாயத்திற்கோ,
    நாட்டிற்கோ பயன் உடையவனாக இருக்க வேண்டும்.
    இல்லாவிட்டால், அவன் பிறப்பின் பயன் என்ன? குடும்பத்திற்கு
    எந்த வித பயனும் இல்லாத ஒருவனை ஒரு பளுவாக (சுமையாக)
    நினைக்க மாட்டார்களா? குடும்பத்தில் அவனுக்கு என்ன மரியாதை
    கிடைக்கும்? சோம்பேறி என்பார்கள், தண்டச் சோறு என்பார்கள்.
    கல்லாதவனைப் பற்றிக் கேட்டால், ‘ஏதோ இருக்கிறான்’ என்று
    தான் கூறுவார்கள் (உளர் என்னும் மாத்திரையர்) என்கிறார்
    வள்ளுவர். இது எல்லாம் நமக்குத் தேவையா? எனவே கல்வியைக்
    கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார் வள்ளுவர்.

    கல்லாதவர் மிருகத்திற்குச் சமம், பயனற்ற உவர் நிலம்
    என்றெல்லாம் வள்ளுவர் குறிப்பிடுகிறார். இதன் பின்னரும்
    கற்காமல் இருப்போமா?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:16:37(இந்திய நேரம்)