Primary tabs
-
3.6 சமணப் பெண்கள்
சமணப் பெண்கள்பெண் பிறவியைத் தாழ்ந்த பிறவியாகச் சமண சமயம்
சித்திரிக்கிறது. ஒருவன் யாரையாவது வஞ்சிப்பானானால்
(ஏமாற்றுதல் போல்வன) அவன் அடுத்த பிறப்பில் பெண்ணாகப்
பிறப்பான் என்பது சமண சமயக் கொள்கை ஆகும்.
இக்கொள்கை மூலம் சமணர்கள் பெண்களை இழிவாகக்
கருதியமை தெரிகிறது. சமண சமயத்தில் பெண்ணாகப் பிறந்த
ஒருவர் வீடுபேறு அடைய முடியாது.● சுவேதாம்பரச் சமணப் பெண்கள்
பெண்கள் வீடுபேறு அடைய முடியாது என்பது சமண
சமயப் பொதுக்கொள்கை. ஆயினும் சமணர்களுள் ஒரு
பிரிவினரான சுவேதாம்பரர், பெண்கள் துறவு நெறி மேற்கொண்டு
மன உறுதியுடன் செயல்பட்டால் அவர்கள் வீடுபேறு அடைய
முடியும் என்று நம்பினர்.● திகம்பரச் சமணப் பெண்கள்
பெண்ணாகப் பிறந்த ஒருவர் வீடுபேறு அடைவதற்கு
வழியே இல்லை என்பது திகம்பரச் சமணர்களின் முடிவாகும்.
எனவே, வீடுபேறு அடைய விரும்பும் பெண், அடுத்த பிறவியில்
ஆணாகப் பிறந்து துறவு மேற்கொண்டு ஒழுக வேண்டும் என்பது
இப்பிரிவினரின் கருத்தாகும்.● ஆருகத சமணப் பெண்கள்
சமண சமயத்தின் மற்றொரு பிரிவு ஆருகத சமயம். இச்
சமயத்தில் பெண்கள் துறவு மேற்கொள்ளலாம். இப் பெண்கள்
கந்தி என்று அழைக்கப்பட்டனர். இவர்களுக்குக் கவுந்தி,
ஆர்யாங்கனை, குரத்தி என்று வேறு பெயர்களும் உண்டு.பிச்சை ஏற்கச் செல்லும்பொழுது சமண முனிவர்கள்
கவுந்திகளை எதிரில் கண்டால் பிச்சை ஏற்கக் கூடாது.
அதுபோல் கவுந்திகளும் சமண முனிவர்களை எதிரில் கண்டால்
பிச்சை ஏற்றல் கூடாது.சமண முனிவர்கள் உறையும் பள்ளியில் கந்தியார்
இருத்தல் கூடாது; அதுபோல் கந்தியார் உறையும் பள்ளியில்
சமண முனிவர்கள் இருத்தல் கூடாது.இப்பெண்கள் தலையை மழித்து, வெண்மை நிற
ஆடை அணிந்திருந்தனர். சமண சமய நூல்களையும் இலக்கண,
இலக்கிய நூல்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்களாக இவர்கள்
இருந்தனர்.