தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.1-நிதானங்கள்

  • 6.1 நிதானங்கள்


        உலக உயிர்கள் படும் துன்பத்திற்குக் காரணங்கள்
    பன்னிரண்டு என்று புத்தர் கண்டறிந்தார். இதனைப் பன்னிரண்டு
    நிதானங்கள்
    என்று பௌத்தர்கள் கூறுவர். தமிழில் இதனைப்
    பன்னிரு சார்பு என்று கூறுவர். நிதானம் என்றால் காரணம்
    என்று பொருள்.

    ●  பன்னிரண்டு நிதானங்கள்

        புத்தர் தமது அறிவுரைகளைப் பாலி.மொழியிலேயே
    கூறினார் என்று முந்தைய பாடத்தில் படித்துள்ளீர்கள் அல்லவா?
    அதன்படியே பன்னிரு நிதானங்களையும் பாலிமொழியில்தான்
    புத்தர் குறிப்பிட்டுள்ளார். பன்னிரு நிதானங்களைக் குறிப்பிடும்
    பாலி மொழிப் பெயர்களையும் அவற்றிற்கு இணையான தமிழ்ப்
    பெயர்களையும் கீழ்க் காணுமாறு அறிஞர்கள் சுட்டுகின்றனர்.

    பன்னிரண்டு நிதானங்கள் (பாலி)
    -
    பன்னிரு சார்பு (தமிழ்)
    1.
    அவிஜ்ஜை (அவிச்சை)
    -
    பேதைமை
    2.
    ஸங்க்காரம் (ஸம்ஸ்காரம்)
    -
    செய்கை
    3.
    விஞ்ஞானம்
    -
    உணர்வு
    4.
    நாமரூபம்
    -
    அருவுரு
    5.
    ஸடாயதானம்
    -
    வாயில்
    6.
    பஸ்ஸ (ஸ்பர்சம்)
    -
    ஊறு
    7.
    வேதனா
    -
    நுகர்வு
    8.
    தண்ஹா (திருஷ்ணா)
    -
    வேட்கை
    9.
    உபாதானம்
    -
    பற்று
    10.
    பவம்
    -
    பவம் (கருமத் தொகுதி)
    11.
    ஜாதி
    -
    தோற்றம்
    12.
    ஜராமரணம்
    -
    வினைப்பயன்

        இப்பன்னிரு சார்புகளின் தன்மைகளைச் சீத்தலைச்
    சாத்தனார் தம் காப்பியமான மணிமேகலையின் 30ஆம்
    காதையாகிய பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதையில்
    விளக்கி உள்ளார். பன்னிரு சார்புகளின் தமிழ்ப் பெயர்கள் அவர்
    குறிப்பிட்டவை ஆகும்.

    6.1.1 வீடுபேறு அல்லது நிர்வாண மோட்சம்

        இப்பன்னிரண்டு சார்புகளும் ஒன்றிற்கொன்று சார்பாக
    அமைந்து உயிர்களின் துன்பத்திற்குக் காரணமாக அமைகின்றன.
    இதனால் உயிர்களுக்கு மூப்பு, பிணி, சாக்காடு ஏற்படுகின்றன.
    இச்சார்புகளை விட்டு நீங்கி வீடு பெறுவதே பௌத்தர்களின்
    நிர்வாண மோட்சம் ஆகும்.

         வீடுபேறு     அடைவதற்கு     (நிர்வாண மோட்சம்
    அடைவதற்கு) நான்கு உயர்ந்த உண்மைகள் என்று கூறப்படும்
    சத்தியங்களைப் பின்பற்ற வேண்டும். இச் சத்தியங்கள் பற்றிப்
    பின்னர்க் காண்போம். இப்பொழுது பன்னிரண்டு சார்புகள் பற்றி
    விரிவாகக் காண்போம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:41:33(இந்திய நேரம்)