Primary tabs
-
1.0 பாட முன்னுரை
இன்றைக்கு எங்கும் உலகமயமாக்கல் பற்றிப் பேசப்படுகிறது. அதன் நன்மை தீமைகள் அறிஞர்களிடையே தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன. அந்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, வளர்ச்சி குன்றியிருந்த இந்தியா, சீனா, பிரேசில் போன்ற பல நாடுகள் முன்னேற்றப் பாதையில் நடைபோட உலகமயமாக்கல் வழிவகுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ஒருபுறம் கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் காலத்தை மீறிய வளர்ச்சி. இன்னொருபுறம் தகவல்தொடர்புத் தொழில்நுட்பத்தில் தடம்பதிக்கும் முன்னேற்றங்கள். இரண்டு தொழில்நுட்பங்களின் சங்கமத்தில் இன்றைக்குத் தகவல் தொழில்நுட்பம் முன்னிலைக்கு வந்துள்ளது. நாம் வாழும் யுகம் தகவல் யுகமாய் மாறிப்போனது. விரல்நுனியில் தகவல்கள். விரல்சொடுக்கும் நேரத்தில் தகவல் பரிமாற்றம். பூமிக் கோளத்தில் நாடுகளின் எல்லையும், கடல்களின் பரப்பும் காணாமல் போயின. உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிப் போனது.
தகவல் தொழில்நுட்பம் மனித குலத்துக்கு இரண்டு வகையில் உதவி புரிந்திருக்கிறது. ஒன்று: மனித வாழ்க்கைக்கு ஒரு புதிய பொருள்விளக்கத்தை வழங்கி, மனிதகுல இலட்சியங்களுக்கு ஒரு புதிய எல்லையைக் காட்டியுள்ளது. இரண்டு: இதற்கு முன்பு என்றும் இல்லாத அளவுக்கு வேறெந்தத் துறைகளைக் காட்டிலும் அதிகமான வேலைவாய்ப்புகளை படித்த இளைஞர்களுக்கு வழங்கியுள்ளது. குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் இந்த வேலைவாய்ப்பின் பலன்களைப் பெருமளவு அறுவடை செய்துகொண்டது இந்தியாவும் சீனாவும் ஆகும்.
தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டது. மனிதனின் தேவைகள் பெருகின. தகவல் தொழில்நுட்பச் சேவைகள் (IT Services - ITS) பெருகின. தகவல் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி கண்டது. மனிதனின் தேவைகள் மேலும் பெருகின. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (IT Enabled Services - ITES) உருவாயின. அதன் காரணமாய்ப் பன்னாட்டு நிறுவனங்கள் தமது வணிகச் செயல்பாடுகளைப் பிற நிறுவனங்களைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ளும் ’வணிகச் செயல் அயலாக்க’ (Business Process Outsourcing) வழிமுறைகள் உருவாயின. தொடர்ந்து ’அறிவுச் செயல் அயலாக்கச்’ (Knowledge Process Outsourcing) சேவைகள் பரிணமித்தன. வாடிக்கையாளர் சேவை மையங்கள் ’அழைப்புதவி மையங்கள்’ (Call Centre) ஆயின. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றதுக்கு மாபெரும் வாய்ப்புகளைத் திறந்து விட்டுள்ளன. புதிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. வருங்காலத்தில் மென்மேலும் தொழில்வாய்ப்புகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவைபற்றியெல்லாம் இப்பாடத்தில் விரிவாகக் காண்போம்.