Primary tabs
-
1.5 தொகுப்புரை
-
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் உலகமயமாக்கலைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகப் பொருளாதார வளர்ச்சியும் நெருங்கிய தொடர்புள்ளவை.
-
உலகச் சந்தைகளில் உற்பத்தியாளர்களிடையே நிலவும் போட்டியினால் இலாபத்தைப் பெருக்கவும் அல்லது குறைந்த பட்சம் முந்தைய இலாபத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் (1) உற்பத்தியைப் பெருக்க வேண்டும் அல்லது (2) உற்பத்திச் செலவினைக் குறைக்க வேண்டும்.
-
முந்தைய உற்பத்தி முறைகளைக் கொண்டு உற்பத்தியைப் பெருக்க முடியாது. உற்பத்தி முறைகளில் புதிய உத்திகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்த வேண்டியது கட்டாயத் தேவை ஆகிவிடுகிறது. இத்தகைய தேவைகளின் காரணமாகவே தகவல் தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சியைக் கண்டது.
-
உற்பத்தியில் நவீன எந்திரங்களைப் புகுத்துவதன் மூலமும் விரையங்களைத் தவிர்ப்பதன் மூலமும் ஓரளவு உற்பத்திச் செலவுகளைக் குறைக்கலாம். இதற்கும் தொழில்நுட்பத்தின் தயவையே நாட வேண்டியுள்ளது. உற்பத்திச் செலவுகளைக் குறைக்க, உழைப்பாளர்களின் ஊதியத்தைக் குறைப்பது அவசியமாகிறது. ஊதியத்தை நேரடியாகக் குறைக்க இயலாத போது அதற்கான மாற்று வழிமுறையாகக் கண்டறியப்பட்டதுதான் ‘அயலாக்கம்’ (Outsourcing) - செலவு குறைவாக ஆகும் நாட்டில் அப்பணிகளைச் செய்து முடிப்பது. உற்பத்தி முறையில் புதிதாகப் புகுத்தப்பட்ட அயலாக்க நடைமுறைதான் தகவல் தொழிநுட்பம் சார்ந்த சேவைகளின் வளர்ச்சிக்கு ஊற்றுக் கண்.
-
கணிப்பொறித் தொழில்நுட்பம் வன்பொருள், மென்பொருள் என இருபெரும் பிரிவுகளைக் கொண்டது. வன்பொருள் நிறுவுகை, பராமரிப்பு, பழுதுபார்ப்பு ஆகியவையும் மென்பொருள் பகுப்பாய்வு, வடிவாக்கம், நிரலாக்கம், பரிசோதிப்பு, தரக்கட்டுப்பாடு, விற்பனை, நிறுவுகை, பராமரிப்பு ஆகியவையும், இரண்டுக்கும் பொதுவான முறைமை நிர்வாகம், பிணைய நிர்வாகம், பிணைய மேலாண்மை, பிணையப் பாதுகாப்பு, தரவுத்தள நிர்வாகம் போன்றவை தகவல் தொழில்நுட்பச் சேவையில் அடங்குகின்றன.
-
உலகெங்குமுள்ள நிறுவனங்களுக்கு டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் டெக்னாலஜீஸ், விப்ரோ, சத்யம் போன்ற இந்திய நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பச் சேவைகளை வழங்கி வருகின்றன. இவை வழங்கும் தகவல் தொழிநுட்பச் சேவைகளுள் சில: (1) முறைமை ஒருங்கிணைப்புச் சேவைகள் (2) தகவல் மேலாண்மைச் சேவைகள் (3) தனிப்பயன் பயன்பாட்டு உருவாக்கம் (4) பயன்பாட்டு மேலாண்மை (5) மென்பொருள் பரிசோதிப்பும் சரிபார்ப்பும் (6) நிறுவனத் தரக்கட்டுப்பாட்டுச் சேவைகள் (7) அகக்கட்டமைப்புச் சேவைகள் (8) பழையன கழித்துப் புதியன புகுத்தல்.
-
பல தரப்பட்ட துறைகளிலும் வளர்ச்சி பெற்றுள்ள ஐடீஇஎஸ் சேவைகள் சில: (1) அழைப்புதவி மையங்கள் (2) நிதி-கணக்குவைப்பு (3) மனிதவளச் சேவைகள் (4) ஆவணமாக்கம் (5) மொழிபெயர்ப்பு (6) வலையகச் சேவைகள் (7) பொறியியல் மற்றும் வடிவாக்கம் (8) பல்லூடக உள்ளடக்க உருவாக்கம் (9) நிகழ்நிலைக் கல்வி (10) தரவு உள்ளீடும் தரவு வடிவ மாற்றமும் (11) தகவல் சேமிப்பும் தகவல் தேடலும் (12) சந்தை ஆய்வும் சந்தைப்படுத்தலும் (13) நிகழ்நிலை விற்பனை (14) நூல் வெளியீட்டு அச்சக முன்வேலைகள் (15) பிணைய மேலாண்மையும் பாதுகாப்பும்.
-
வணிகச் செயல் அயலாக்கத்தில் பின்புல வணிகச் செயல்பாடுகள் முக்கிய இடம் வகிக்கின்றன. பின்புல வணிகச் செயல்பாடுகளுள் சில: நிதி-கணக்கு வைப்புகள், சம்பளப் பட்டியல் தயாரித்தல், காப்பீட்டு, நலவாழ்வுச் சேவைகள், சட்ட ஆலோசனைகள், ஆவண மேலாண்மைச் சேவைகள், தகவல் சேகரிப்பு, உள்ளீடு, தேடுகை, உள்ளடக்க உருவாக்கம், வலையகம் பராமரித்தல், மின்-பதிப்பகச் சேவைகள்.
-
இப்பணிகளைக் குறைவான செலவில் பிற நாடுகளில் செய்து முடிக்க முடியும். தகவல் தொடர்பு அகக்கட்டமைப்பு வசதிகளையும் தொழில்நுட்பப் படிப்புகளைப் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் ஏராளமான இளைஞர்களையும் கொண்ட இந்தியா, சீனா போன்ற நாடுகள் வணிகச் செயல் அயலாக்கத்தின் இலக்கு நாடுகளாய் உள்ளன.
-
கள அறிவும், தொழில்நுட்ப அறிவும், நிபுணத்துவமும் தேவைப்படுகின்ற வணிகச் செயல்பாடுகள் ’அறிவுச் செயலாக்கம்’ எனத் தரம் பிரிக்கப்படுகின்றன. அத்தகைய செயல்பாடுகளின் அயலாக்கம் ‘அறிவுச் செயல் அயலாக்கம்’ (கேபீஓ) எனப் பாகுபடுத்தப்படுகிறது. சில கேபீஓ சேவைகள்: ஆய்வும் மேம்பாடும், வணிக, தொழில்நுட்பப் பகுப்பாய்வு, கற்றறிதல் தீர்வுகள், அசைவூட்டமும் வடிவாக்கமும், வணிக, சந்தை ஆய்வு, மருந்தியலும் உயிரித் தொழில்நுட்பமும், மருத்துவச் சேவைகள், அறிவுசார் சொத்துரிமை ஆய்வு, பிணைய மேலாண்மை, பயிற்சியும் ஆலோசனையும்.
-
படித்த, அறிவுத் திறன்மிக்க, பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இளைஞர் கூட்டம் கேபீஓ துறையில் இந்தியாவுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
-
வாடிக்கையாளர் சேவையில் குறிப்பிடத்தக்கது அழைப்புதவி மையம். அமெரிக்க, ஐரோப்பிய வணிக நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர் அழைப்புதவி மையங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. அழைப்புதவி மையச் சேவை பெரும்பாலும் தொலைபேசி வழியாகவே நடைபெறுகிறது. வாடிக்கையாளர் அழைப்பு வேற்று நாட்டில் செயல்படும் அழைப்புதவி மையத்துக்குத் திருப்பி விடப்படுகிறது. ஐவிஆர்எஸ் மூலம் வடிகட்டப்பட்டுக் குறிப்பிட்ட பிரிவுப் பணியாளருக்கு வந்து சேரும். பணியாளர் வாடிக்கையாளரின் குறையைக் கேட்டறிந்து அதற்கான பதிலைப் பணிவான குரலில் எடுத்துரைப்பார். அழைப்புதவி மையம் வேறு நாட்டில் இயங்குவதை வாடிக்கையாளர் அறிய இயலாது.
-
அழைப்புதவி மையங்களை தொழில்நுட்பம் சார்ந்தவை-சாராதவை, அழைப்புபெறு-அழைப்புசெய் மையம், உள்நாட்டு-வெளிநாட்டு மையம், அகஆக்க-அயலாக்க மையம் எனப் பலவாறாக வகைப்படுத்தலாம்.
-
மருத்துவமனைகளில் நோயாளிகள் பற்றிய விவரங்கள், நோயின் அறிகுறிகள், நோய் பற்றிய குறிப்புகள், மருத்துவப் பரிசோதனை முடிவுகள், மருத்துவரின் ஆலோசனைகள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், மருந்துகளின் பின்விளைவுகள் போன்ற தகவல்கள் தாள் அறிக்கைகளாகவும், ஏட்டுக் குறிப்புகளாகவும், ஒளிநாடாவாகவும், எக்ஸ்ரே படங்களாகவும் இருக்கும். இவற்றைத் துடிமத் (Digital) தகவலாய் மாற்றிக் கணிப்பொறியில் தரவுத்தளங்களில் சேமிப்பது ‘மருத்துவ ஆவணமாக்கம்’ எனப்படுகிறது.
-
ஐடீஎஸ், ஐடீஇஎஸ் வளர்ச்சிக்காக இந்திய அரசு பல்வேறு ஆதரவு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாஸ்காம் அமைப்பு 2002-ஆம் ஆண்டு முன்வைத்த, அலைக்கற்றைப் பகிர்வு அனுமதி, வருமான வரிவிலக்கு, நேரடி அந்நிய முதல¦டு, வரியின்றி இறக்குமதி போன்ற பரிந்துரைகளை இந்திய அரசு ஏற்று, நடைமுறைப்படுத்தியது. உடனடிப் பயன்பாட்டு நிலையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அகக்கட்டமைப்பு வசதிகள் கொண்ட மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களைப் பெரிய நகரங்கள், இரண்டாம் நிலை நகரங்கள் பலவற்றிலும் அரசு உருவாக்கியுள்ளது.
-
அழைப்புதவி மையம் போன்ற வாடிக்கையளர் சேவை மையங்கள், சம்பளப் பட்டியல் தயாரித்தல், நிதி, கணக்குவைப்பு, ஆயுள் காப்பீட்டுத் துறையில் காப்பீட்டுத் தொகை பட்டுவாடா போன்ற பணிகளிலும், மருத்துவ ஆவணமாக்கம், தரவுச் செயலாக்கம், தரவுச் சுரங்கம் போன்ற பின்புல வணிகச் செயல்பாடுகளிலும் அயலாக்கம் செய்ய விரும்பும் நிறுவனங்களுக்குக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே இந்தியா மிகவும் விருப்பமான இலக்காக இருந்து வருகிறது.
-
ஆங்கிலம் நன்கு பேசத் தெரிந்தோர் இந்தியாவில் அதிகம். கல்வித் தகுதி, செயல்திறன், வேலையின் தரம், பணி தர்மம் ஆகியவற்றில் பிற நாட்டவரைவிட இந்தியர் உயர்ந்திருக்கின்றனர். மேலும் இந்தியாவின் தொலைதொடர்பு அகக்கட்டமைப்பு, அரசின் ஆதரவு நடவடிக்கைகள் காரணமாக இத்துறையில் சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, ஃபிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஹாலந்து போன்ற நாடுகளைவிட இந்தியா முன்னணியில் நிற்கிறது. வன்பொருள் பிரிவில் சீனா இந்தியாவை முந்தி நிற்கிறது. இந்தியாவைவிடச் சீனாவில் குறைந்த சம்பளத்தில் சிறந்த மென்பொருள் நிரலர்கள் கிடைக்கிறார்கள். ஆங்கில அறிவில் பின்தங்கிய நிலையை மாற்ற சீனா சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஐடீஇஎஸ் துறையில் வருங்காலத்தில் சீனா இந்தியாவுக்குச் சவாலாக விளங்கும்
-
கார்ட்னர் ஆய்வு நிறுவன அறிக்கையின்படி ‘ஃபார்ச்சூன் 500’ நிறுவனங்களுள் 300-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே இந்திய தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களுடன் வணிகம் மேற்கொண்டுள்ளன. வருங்காலத்தில் இன்னும் பல நிறுவனங்கள் இந்தியாவின் அயலாக்கச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளும்.
-
ஃபாரெஸ்டர் ஆய்வறிக்கையின்படி 2015-ஆம் ஆண்டில் மொத்தம் 33 லட்சம் அமெரிக்கப் பணிவாய்ப்புகள் இந்தியா, சீனா, ருஷ்யா, ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குக் கிடைக்கும்.
-
அசோச்சம் ஆய்வறிக்கையின்படி, 2012-ஆம் ஆண்டில் கேபீஓ வணிகத்தில் இந்தியாவில் 30% ஆள் பற்றாக்குறை ஏற்படும். கேபீஓ வணிகத்தில் சீனா, ரஷ்யா, போலந்து, ஹங்கேரி, ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவுக்குப் போட்டியாக வளர்ந்து வருகின்றன.
-
இந்தியாவில் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ள தொழில்துறை ஐடீ-ஐடீஇஎஸ் என்றும் இத்துறை 75 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு நல்கியுள்ளதாகவும் 2010-ஆம் ஆண்டில் ஒரு கோடியைத் தாண்டும் எனவும், 2010-ஆம் ஆண்டில் 13 லட்சம் பணியிடங்கள் அயலாக்கம் மூலம் இந்தியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்படும் எனவும் எனவும் நாஸ்காம் கணித்துள்ளது.
-
இந்திய வணிகச் செயல் அயலாக்கத் துறையின் ஏற்றுமதி வருமானம் தற்போது ஆயிரம் கோடி ரூபாய். 2012-ஆம் ஆண்டில் மூவாயிரம் கோடி ரூபாயை எட்டும். இதன் காரணமாய் 2012-இல் 8 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான பட்டதாரி இளைஞர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். சீனா, லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் போட்டியை எதிர்கொள்ளப் பணித்தகுதி கொண்ட இளைஞர்கள் பட்டாளத்தை உருவாக்க வேண்டியது இந்தியாவின் கடமை ஆகும்.
-
அமெரிக்காவின் பொருளாதாரப் பின்னடைவு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியா உட்படப் பல நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஐடீஎஸ், ஐடீஇஎஸ் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தற்காலிகப் பின்னடைவுதான். விரைவில் இந்தத் தேக்கநிலை சரியாகும். இந்தியப் பொருளாதாரம் குறிப்பாக ஐடீஎஸ், ஐடீஇஎஸ் துறைகளில் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது, உள்நாட்டுச் சந்தை வாய்ப்புகளைப் பெருமளவு விரிவுபடுத்த வேண்டும் என்கிற படிப்பினைகளை இன்றைய பொருளாதாரத் தேக்கநிலை கற்பித்துள்ளது வரவேற்கத் தக்கது.
-