Primary tabs
-
1.3 இந்தியாவில் ஐடீஇஎஸ் சேவைகளின் வளர்ச்சி
கணிப்பொறித் துறை முளைவிட்ட காலத்திலிருந்தே இந்தியா கால ஓட்டத்தில் பின்தங்கி விடாமல் அத்துறையில் தன் காலடித் தடங்களைப் பதித்தே வந்திருக்கிறது. இந்தியப் பல்கலைக் கழகங்கள் பொறியியல் கல்லூரிகளில் கணிப்பொறியியல் பாடத்தைப் புகுத்தி ஆண்டுதோறும் ஏராளமான பட்டதாரி இளைஞர்களை உருவாக்கி அனுப்பத் தொடங்கின. இந்தியாவில் குறிப்பாகத் தென்மாநிலங்களில் ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் உண்டு. அதன் காரணமாய் இந்தியப் பொறியியல் பட்டதாரிகள் ஆங்கிலத்திலும் போதுமான அறிவு பெற்றவர்களாய் இருந்தனர். தகவல் தொழில்நுட்பத் துறையின் திட்டப்பணிகளும் வேலைவாய்ப்புகளும் இந்தியாவைத் தேடிவரத் தொடங்கின. இவ்வாறு இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்புகளை மூன்று கட்டங்களாகப் பிரித்துக் காணலாம். முதல்கட்டமாக, கணிப்பொறித் துறையில் கற்றுத் தேர்ந்த இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் மாபெரும் வரவேற்புக் கிடைத்தது. அமெரிக்காவில் இந்தியர் இடம் வகிக்காத மென்பொருள் நிறுவனங்களே இல்லை எனலாம். உலகில் முதலிடம் வகிக்கும் மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்டின் மொத்தப் பணியாளர்களில் நாற்பது சதவீதம் இந்தியர்கள். இரண்டாம் கட்டமாக வெளிநாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை நிறுவி ஏராளமானோர்க்கு வேலைவாய்ப்பு அளித்தன. வெளிநாட்டு நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பத் திட்டப்பணிகள் ஏராளமாய் இந்திய நிறுவனங்களுக்குக் கிடைக்கத் தொடங்கின. அவற்றை முடித்துக் கொடுக்க ஆயிரக் கணக்கில் இந்திய மென்பொருள் நிரலர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். மூன்றாவது கட்டமாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளின் வளர்ச்சி காரணமாக வெளிநாட்டு வேலைகளே ’அயலாக்கம்’ என்ற பெயரில் கடல்கடந்து இந்திய இளைஞர்களைத் தேடிவரத் தொடங்கின.
இவ்வாறு தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறையிலும் இந்திய நாடு முன்னணி இடம் வகிக்க இந்திய அரசு மேற்கொண்ட தன்முனைப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம். இதுபோல இத்துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்குச் சாதகமாய் இருக்கும் சூழ்நிலைகளையும், எதிர்கொள்ளவிருக்கும் சவால்களையும் இப்பாடப் பிரிவில் காண்போம்.
1.3.1 இந்திய அரசின் ஆதரவு
தகவல் தொழில்நுட்பத்தைத் தழுவிக் கொள்ளாத நாடு பின்தங்கிய நாடாகிவிடும் என்பதை இந்தியா நன்றாகவே உணர்ந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக இந்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. உலகமயமாக்கலின் உந்துதலில் கிடைக்கின்ற வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு நாட்டை முன்னேற்றிச் செல்ல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அயலாக்கச் சேவைகளின் வளர்ந்துவரும் முக்கியத்துவம் கருதி, இந்திய அரசு பல்வேறு ஆதரவான கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது. இந்தியாவில் ஐடீஇஎஸ் துறையின் வளர்ச்சியை முடுக்கிவிடும் நோக்கில் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. நாஸ்காம் (NASSCOM - National Association of Software and Service Companies) போன்ற சங்க அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வருங்காலத்தில் தகவல் தொழிநுட்பம் சார்ந்த அயலாக்கத்தில் இந்தியாவை உலகளாவிய குவியம் (Global Hub) ஆக்குவதற்கான திசைவழியில் இந்திய மென்பொருள் மற்றும் சேவைத் துறைகள் நடைபோட்டு வருகின்றன என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் அழைப்புதவி மைய வளர்ச்சிக்கு இடையூறாகப் பல்வேறு சட்ட விதிமுறைகள் இருந்து வந்தன. இந்த இடையூறுகள் களையப்பட வேண்டுமென நாஸ்காம் அமைப்பு அரசுக்குப் பரிந்துரை செய்தது. 2002-ஆம் ஆண்டு அப்பரிந்துரைகளை இந்திய அரசு ஏற்றுப் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அரசு மேற்கண்ட நடவடிக்கைகள் சில:
-
பேரழிவு மீட்பு, உயிர்நாடியான பயன்பாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவன அமைப்புகள் தகவல் அலைக்கற்றையைப் பகிர்ந்து கொள்ள அனுமதித்தல்.
-
ஒரே நிறுவனத்தின் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள கிளைகள் அலைக்கற்றையைப் பகிர்ந்து கொள்ள அனுமதித்தல்.
-
வாடிக்கையாளர் வகை அடிப்படையில் அழைப்புதவி மையங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
-
ஒரே குறும்பரப்புப் பிணையத்தில் இணையம் மற்றும் ஐபீஎல்சி இணைப்புகளை அனுமதித்தல்.
-
ஒரு சர்வதேச அழைப்புதவி மைய லேன் (LAN) அமைப்பை உள்நாட்டு இணையச் சேவை நிறுவனத்துடன் இணைத்துக் கொள்ள அனுமதித்தல்.
-
ஐடீஇஎஸ் நிறுவனங்கள் தமக்கென சொந்த நுழைவிகளை (Gateways) அமைத்துக் கொள்ள அனுமதித்தல்.
-
தகவல் தொழிநுட்ப அடிப்படையிலான அயலாக்கச் சேவைகளின் ஏற்றுமதிக்கு வருமான வரிச்சட்டம் 10அ/10ஆ பிரிவுகளின் கீழ் முழுமையான வருமான வரி விலக்கு அளித்தல்.
-
வணிகச் செயல் அயலாக்க நிறுவனங்களில் நூறு விழுக்காடு ஈக்குவிட்டிக்கு நேரடி அந்நிய முதல¦ட்டை அனுமதித்தல்.
-
வணிகச் செயல் அயலாக்க நிறுவனங்கள் மூலதனப் பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ள அனுமதித்தல்.
உடனடிப் பயன்பாட்டு நிலையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அகக்கட்டமைப்பு வசதிகள் கொண்ட மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் பலவற்றையும் அரசு உருவாக்கியுள்ளது. பெரிய நகரங்கள், இரண்டாம் நிலை நகரங்கள் பலவற்றிலும் இத்தகைய பூங்காக்கள் உருவாக்கப்படுள்ளன. மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களின் ஒழுங்குமுறைச் சிக்கல்கள் அனைத்தையும் ஒற்றைச் சாளர முறையில் தீர்த்துக் கொள்ள வசதியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகளும் தத்தமது மாநில எல்லைக்குள் ஐடீஇஎஸ் முதல¦டுகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஒழுங்குமுறை மற்றும் அகக்கட்டமைப்பு தொடர்பான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா அரசுகள் இவற்றுள் முன்னணி இடம் வகிக்கின்றன.
1.3.2 தற்கால வளர்ச்சிப் போக்கு்
தகவல் தொழில்நுட்பச் சேவைகளில் இன்று இந்தியா முன்னணி இடம் வகிப்பதை எவரும் மறுக்க முடியாது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றிதான் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் பிரிவிலும் இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அயலாக்கச் சந்தை 1990-களின் மத்தியிலேயே தொடங்கிவிட்டது. அப்போதே அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், ஜீஇ கேபிட்டல் போன்ற நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர் சேவை மற்றும் வணிகச் செயலாக்க மையங்களை இந்தியாவில் நிறுவின. வணிகச் செயல் அயலாக்கச் சேவைகளை வழங்குவதற்கென்றே தனிப்பட்ட நிறுவனங்கள் பல பத்தாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தொடங்கப்பட்டன. அதற்கும் முன்பே மருத்துவ நலவாழ்வுத் துறையின் சில வணிகச் செயல் அயலாக்க நிறுவனங்களும், சில வாடிக்கையாளர் உறவு மேலாண்மைச் சேவை நிறுவனங்களும் தொடங்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத் தக்கது.
அழைப்புதவி மையம் போன்ற வாடிக்கையளர் சேவை மையங்கள், சம்பளப் பட்டியல் தயாரித்தல், நிதி, கணக்குவைப்பு, ஆயுள் காப்பீட்டுத் துறையில் காப்பீட்டுத் தொகை பட்டுவாடா போன்ற பணிகளிலும், மருத்துவ ஆவணமாக்கம், தரவுச் செயலாக்கம், தரவுச் சுரங்கம் போன்ற பின்புல வணிகச் செயல்பாடுகளிலும் அயலாக்கம் செய்ய விரும்பும் நிறுவனங்களுக்குக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே இந்தியா மிகவும் விருப்பமான இலக்காக இருந்து வருகிறது. மென்பொருள் மற்றும் மென்பொருள் சேவைச் சந்தைப் பிரிவில் ஐடீஇஎஸ் அடைந்துள்ள மிகப்பெரும் வளர்ச்சி இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. இவ்வளர்ச்சி 2001-02 இல் 71 சதவீதமாகவும், 2002-03 இல் 65 சதவீதமாகவும் இருந்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஏறத்தாழ இதே அளவு வளர்ச்சி நீடித்தது எனலாம்.
1.3.3 இந்தியாவுக்குச் சாதகமான வாய்ப்புகள்
ஒரு நாட்டின் பின்னடைவுக்கு மக்கள் தொகைப் பெருக்கமே காரணம் என்று நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த மால்த்தூசியன் கோட்பாடு இன்று பொய்யாய்ப் போனது. அந்த மக்கள் கூட்டம் கல்வியறிவு பெற்றதாக இருந்துவிட்டால் அந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு அதுவே அடிப்படையாக அமைந்துவிடும் என்பதைக் காலம் உணர்த்திவிட்டது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் நிரலர்கள் இந்தியாவில்தான் உள்ளனர். உலகிலேயே இந்தியாவில்தான் ஆண்டுதோறும் அதிகமான பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் இந்தியாவின் மக்கள் தொகையும் ஒரு காரணமே. இன்று சீனாவின் மக்கள் தொகை அவர்களது முன்னேற்றத்துக்கு இடையூறாக இல்லை. அது ஒரு பலமாகவே உள்ளது. ஐடீஇஎஸ் துறையில் குறிப்பாக அழைப்புதவி மையங்கள் இந்தியாவில் வளர்ச்சி பெற அதிக எண்ணிக்கையிலான கல்வி கற்ற இந்தியர்களே முக்கிய காரணம் எனலாம். இதுபோல ஐடீஇஎஸ் துறையில் இந்தியா முன்னேறி இருப்பதற்குரிய சாதகமான கூறுகள் சிலவற்றை இங்கே பட்டியலிடுவோம்:
-
பன்னாட்டு நிறுவனங்களின் பின்புலச் செயல்பாடுகளுக்குத் தேவையான அறிவுநுட்ப மனித சக்தி இந்தியாவில் ஏராளமாக உள்ளது. குறிப்பாக ஆங்கிலம் நன்கு பேசத் தெரிந்தோர் இந்தியாவில் அதிகம். கல்வித் தகுதி, செயல்திறன், வேலையின் தரம், பணி தர்மம் ஆகியவற்றில் பிற நாட்டவரைவிட இந்தியர் உயர்ந்திருக்கின்றனர். இதன் காரணமாகவே இத்துறையில் சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, ஃபிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஹாலந்து போன்ற நாடுகளைவிட இந்தியா முன்னணியில் நிற்கிறது.
-
இந்தியாவின் தொலைதொடர்பு அகக்கட்டமைப்பு முன்னேறிய நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுள்ளது.
-
சேவைப்பணிகளுக்கான தரக்கட்டுப்பாட்டு இலக்குகளை நிர்ணயித்தல், அளவீடு செய்தல், கண்காணித்தல் போன்றவற்றில் இந்திய நிறுவனங்கள் தனித்த திறன் பெற்றவையாய் விளங்குகின்றன. நாஸ்காம் அமைப்பு சர்வதேச சான்றளிப்பு முகமைகளுடன் கலந்தாலோசித்து தரக்கட்டுப்பாடுகளை நிர்ணயிக்கிறது.
-
குறிப்பிட்ட சில ஐடீஇஎஸ் வகைப்பிரிவுகளில் இந்திய மையங்கள் உயர் உற்பத்தி எல்லைகளை எட்டியுள்ளன. எடுத்துக்காட்டாக, பின்புல அலுவலகச் செயலாக்கத்தில் ஒருமணி நேரத்தில் நடைபெறும் பரிமாற்றங்களின் எண்ணிக்கை வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.
-
இந்தியாவில் 24x7 மணி நேர சேவையை வழங்க முடிகிறது. இதனால் செயலாக்க நேரம் மிச்சமாகிறது. இந்தியாவின் தனித்த பூகோள அமைப்பு இதற்குப் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக அமெரிக்க நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ஏறத்தாழ 12 மணி நேரம் வேறுபாடு. அங்கு இரவாயிருக்கும்போது இங்கு பகல். இந்தியாவின் உதவியுடன் அமெரிக்க நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேரச் சேவையை மிக எளிதாக வழங்க முடியும்.
-
ஐடீஎஸ், ஐடீஇஎஸ் தொடர்பான அரசின் அணுகுமுறை சாதகமாக உள்ளது. ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகள் முற்போக்கான திசைவழியில் உள்ளன. இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கொள்கை ரீதியிலான பரிந்துரைகள் யாவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.
-
ஐடீஇஎஸ் ஏற்றுமதிக்கு 2010-ஆம் ஆண்டுவரை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
அழைப்புதவி மையங்களுக்கு ஒரு தனித்த கொள்கை முடிவை இந்திய அரசு அறிவித்துள்ளது.
-
இந்தியாவில் பெரும்பாலான மாநில அரசுகள் தம்மளவில் ஐடீஇஎஸ் துறைக்கு ஊக்கச் சலுகைகளை வழங்கி வருகின்றன. சிறந்த அகக்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றன.
1.3.4 இந்தியாவை எதிர்கொள்ளும் சவால்கள்
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்குச் சரியான போட்டியாக சீனா உருவெடுத்து வருகிறது. மென்பொருள் பிரிவில் இந்தியாவின் உச்சத்தை எட்டிவிட முயன்று வருகிறது. வன்பொருள் பிரிவில் இந்தியாவை முந்தி நிற்கிறது. ஆனால் சீனாவைவிட இந்தியாவுக்குச் சாதகமாக இருப்பது இந்திய இளைஞர்களின் ஆங்கில அறிவு ஆகும். சீனாவில் இதுநாள்வரை ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. ஆங்கில அறிவில் பின்தங்கிய நிலையை மாற்ற சீனா சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைவிடச் சீனாவில் குறைந்த சம்பளத்தில் சிறந்த மென்பொருள் நிரலர்கள் கிடைக்கிறார்கள் என்ற காரணத்தால் பன்னாட்டுக் கணிப்பொறி நிறுவனங்களின் பார்வை சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது. இந்த நல்வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள சீனா தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. என்றாலும் அதிக அளவிலான தொழில்பரப்பு, குறைவான செலவில் சேவை வழங்கல், தரமான சேவை வழங்கல், கடுமையற்ற விதிமுறைகள், சேவைகளுக்கான பண்பாட்டுப் பாரம்பரியம் போன்ற சாதகமான கூறுகளினால் இந்திய நாடு, சீனா, ருஷ்யா, பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகளைவிட பிபீஓ துறையில் முன்னணி நிலையில் உள்ளது. ஆனாலும் கேபீஓ துறையில் வருங்காலத்தில் இந்தியாவுக்குக் கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்குத் தகுதியான பணியாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் எனச் சில முன்கணிப்புகள் கூறுகின்றன. இச்சவாலை எதிர்கொள்ள இந்தியா பல முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
-