Primary tabs
-
1.4 எதிர்காலத்தில் ஐடீஇஎஸ் சேவைகள்
இந்தியாவில் ஐடீ-பிபீஓ தொழில்துறையின் வளர்ச்சி 2001-02 இல் 71% ஆக இருந்தது. 2002-03 இல் 65% ஆக இருந்தது. 2006-07 வரை சராசரியாக 45% வளர்ச்சி இருந்தது. நாஸ்காம் அமைப்பின் ஆண்டறிக்கையின்படி 2007-08 ஆம் ஆண்டில் இவ்வளர்ச்சி 28% ஆகும். இனி வரும் ஆண்டுகளில் இந்தியாவில் ஐடீஇஎஸ் சேவைகளின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றிப் பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. வருங்காலத்தில் இத்துறையில் இந்தியாவுக்கு இருக்கும் சாதக, பாதகக் கூறுகள் குறித்துப் பல விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் கார்ட்னர், ஃபாரெஸ்டர் நிறுவனங்கள், இந்தியாவின் அசோச்சம் மற்றும் நாஸ்காம் அமைப்புகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகள் குறிப்பிடத்தக்கவை. ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்ட பிறகு உலகப் பொருளாதார நிலைமைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஆய்வறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட சில கணிப்புகள் பிழையாகிப் போகவும் வாய்ப்புள்ளது. ஆய்வறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கணிப்புகள் பற்றியும் உலகப் பொருளாதாரத் தேக்கநிலையின் தாக்கம் பற்றியும் இப்பாடப் பிரிவில் அறிந்து கொள்வோம்.
1.4.1 கார்ட்னர், ஃபாரெஸ்டர் ஆய்வறிக்கைகள்
கார்ட்னர் (Gartner) ஆய்வு நிறுவன அறிக்கை இந்தியாவுக்குத் தெம்பூட்டுவதாக உள்ளது. அந்த அறிக்கையின்படி ‘ஃபார்ச்சூன் 500’ நிறுவனங்களுள் 300-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே இந்திய தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களுடன் வணிகம் மேற்கொண்டுள்ளன. வருங்காலத்தில் இன்னும் பல நிறுவனங்கள் இந்தியாவில் கடல்கடந்த (offshore) சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளும்.
ஃபாரெஸ்டர் (Forrester) ஆய்வறிக்கையும் இக்கருத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் மொத்தம் 33 லட்சம் அமெரிக்கப் பணிவாய்ப்புகள் இந்தியா, சீனா, ருஷ்யா, ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குக் கிடைக்கும். வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கான அடிப்படைக் காரணம் குறைந்த செலவில் பணிகளைச் செய்து முடிக்க முடியும் என்பதுதான். இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் உயர் அகல்கற்றைத் தொலை தகவல் தொடர்பு இணைப்புகள் கிடைக்கின்றன. தரப்படுத்தப்பட்ட வணிகப் பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புகள், இணையம் அடிப்படையிலான ஒருங்கிணைவு மென்பொருள் கருவிகள் கிடைக்கின்றன. எனவே அயலாக்கப் பணிவாய்ப்புகள் இந்தியாவுக்கு மிகுதியாகக் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
1.4.2 அசோச்சம் ஆய்வறிக்கை
இந்தியாவின் வணிகத் தொழில்துறை அமைப்பான அசோச்சம் (ASSOCHAM - Associated Chambers and Industry of India) அண்மையில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிவுச் செயல் அயலாக்கத் (சுருக்கமாக ‘கேபீஓ’) துறையில் வருங்காலத்தில் இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்புகளும் அறிவுத் திறன்மிக்க பணியாட்களின் பற்றாக்குறையினால் இந்தியா இழக்கவிருக்கும் வாய்ப்புகளும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில கணிப்புகள்:
-
2012-ஆம் ஆண்டில் கேபீஓ வணிகத்தில் இந்தியாவில் 30% ஆள் பற்றாக்குறை ஏற்படும். வணிக மதிப்பு 15 பில்லியன் டாலராக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 10.5 பில்லியன் டாலரில் தேக்கமடைந்துவிடும். கேபீஓ அறிவுநுட்பத்துடன் திறைமை வாய்ந்த பணியாட்களை உருவாக்கும் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் போதுமான அளவு இல்லை என்பதே இதற்குக் காரணம்.
-
கேபீஓ துறையில் பொறியியல், மருத்துவம், மேலாண்மை, கணக்குவைப்பியல், நிறுவனச் செயலாண்மை, சட்டம் போன்ற துறைகளில் உயர்கல்வி பெற்ற பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இப்போது 30 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். 2012-இல் ஒரு லட்சம் பேர் தேவைப்படுவர்.
-
கேபீஓ வணிகத்தில் சீனா, ரஷ்யா, போலந்து, ஹங்கேரி, ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவுக்குப் போட்டியாக வளர்ந்து வருகின்றன. குறைந்த செலவு, கள நிபுணத்துவம், புவியியல் இருப்பிடம், விற்பனை மற்றும் சந்தை வாய்ப்புகள் ஆகியவை அந்நாடுகளுக்குச் சாதகமான கூறுகளாக உள்ளன.
-
கேபீஓ துறையில் பணியாட்களின் ஊதியம் பிபீஓ துறையைக் காட்டிலும் 12- 15% அதிகம் என்பதால், நன்கு படித்து வேலை தேடும் இளைஞர்களையும் தொழிலியல் வல்லுநர்களையும் ஈர்க்கும் திறன் கேபீஓ துறைக்கு உள்ளது.
-
நன்கு படித்துத் தேறிய, அறிவுநுட்பம் மிக்க, பகுப்பாய்வுத் திறன்கொண்ட இளைஞர்கள் பிபீஓ துறையைக் காட்டிலும் இத்துறையில் கைநிறையச் சம்பாதிக்க முடியும். மேலும் பிபீஓ துறை பெரும்பாலும் குறுகிய கால வேலை வாய்ப்புக்கே ஏற்றது. ஆனால் நீண்ட காலப் பணிவாய்ப்பை விரும்புவோர் கேபீஓ துறையைத் தேர்ந்தெடுக்கலாம்.
1.4.3 நாஸ்காம் ஆய்வறிக்கைகள்
சில ஆண்டுகளுக்கு முன்பு நாஸ்காம் அமைப்பு ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதிலுள்ள சில முன்கணிப்புகள்: அமெரிக்கவில் 2010-ஆம் ஆண்டில் தேவைப்படும் பணியாளர்கள் எண்ணிக்கை 15 கோடி. இதில் 24 லட்சம் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதில் 13 லட்சம் பணியிடங்கள் அயலாக்கம் மூலம் இந்தியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்படலாம். அதன்பிறகும் 11 லட்சம் இடங்கள் நிரப்பப்படாமலே இருக்கும். தற்காலிகப் பணியாளர்களைத் தேடிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்பணிகள் நிரப்பப்படாவிடில் அமெரிக்காவுக்கு ஒரு ட்ரில்லியன் டாலர் (இன்றைய மதிப்பில் 50 லட்சம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்படும். இந்தப் பற்றாக்குறைப் பணிகளில் பெரும்பகுதியை இந்தியாவில் நிறைவேற்றித் தர முடியும். அதற்கான முயற்சிகளை இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும்.
நாஸ்காம் அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில் இந்தியாவில் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ள தொழில்துறை ஐடீ-ஐடீஇஎஸ் எனக் குறிப்பிட்டுள்ளது. இத்துறை 75 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு நல்கியுள்ளதாகக் கணக்கிட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டில் ஒரு கோடியைத் தாண்டும் எனக் கணித்துள்ளது. வருங்காலத்தில் கேபீஓ துறை பெரும் வளர்ச்சி காணும் எனக் கணித்துள்ளது. வரும் 2010-ஆம் ஆண்டுக்குள் இத்துறையின் வணிகம் 17 பில்லியன் டாலரை எட்டும். அதில் 12 பில்லியன் டாலர் அயலாக்க முறையில் இந்தியாவுக்குக் கிடைக்கும்.
நாஸ்காம் அமைப்பும், எவரெஸ்ட் இந்தியா நிறுவனமும் இணைந்து, இந்தியாவில் வணிகச் செயல் அயலாக்கச் சேவைகளின் தற்போதைய நிலவரம் பற்றியும், 2012 வரையிலான வளர்ச்சிப்போக்கு பற்றியும் ஆய்வு நடத்தி 2008-இல் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள்:
- இந்திய வணிகச் செயல் அயலாக்கத் துறையின் ஏற்றுமதி வருமானம் தற்போது ஆயிரம் கோடி ரூபாய். 2012-ஆம் ஆண்டில் மூவாயிரம் கோடி ரூபாயை எட்டும். எனினும் ஐயாயிரம் கோடி இலக்கு வைத்துக் கொள்ள முடியும். இந்த இலக்கை எட்டினால் அத்தொகை இந்திய ஜிடிபீ (GDP)-யில் ஏற்றுமதி மூலமான வருமானத்தில் 2.5 சதவீதத்தை அதிகரிக்கும். 20 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
- இதன் காரணமாய் 2012-இல் 8 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான பட்டதாரி இளைஞர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். தொலைதொடர்பு, வங்கி, காப்பீடு, சில்லறை வணிகம் மற்றும் உள்-நாட்டு பிபீஓ துறைகளுக்கும் ஆட்கள் தேவைப்படும் என்பதால் இப்பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். கள அனுபவம் (Domain Experiance) தேவைப்படும் இடைநிலை மேலாண்மைப் பணிகளுக்கும் ஆள் பற்றாக்குறை ஏற்படும்.
- கூடுதல் தேவையில் 50% ஆட்களை இரண்டாம்நிலை, மூன்றாம்நிலை நகரங்கள் தர வேண்டியிருக்கும். அதற்காக அந்நகரங்களில் சமூகத் தொழில்நுட்ப அகக்கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.
- இத்துறையில் வருங்காலத்தில் சீனா, லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவுக்குப் போட்டியாக விளங்கும். எனவே பணித்தகைமை (Employability) கொண்ட இளைஞர்கள் பட்டாளத்தை உருவாக்க வேண்டியது இந்தியாவின் கடமை ஆகும்.
- பிபீஓ துறையின் தேவைகளுக்கேற்ப தற்போதுள்ள கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். பிபீஓ துறைக்கான தனிச்சிறப்பான பாடத் திட்டங்களை உருவாக்க வேண்டும். தொழில்துறையோடு கல்வி நிலையங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்.
1.4.4 பொருளாதாரத் தேக்கநிலை
அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 2008-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய சரிவுநிலை தொடர்கிறது. பல வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் திவாலாகி உள்ளன. கார், வீடு வாங்கக் கடன் பெற்ற பல்லாயிரக் கணக்கானோர் கடன் தவணைகளைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் மூடப்பட்டன, ஏராளமானோர் வேலை இழந்தனர். சரியான மாற்று வேலை கிடைக்கவில்லை. அவர்களின் வாங்கும் திறன் வெகுவாகக் குறைந்தது. குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், ஆடை, வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், வாகனங்கள் உட்பட நுகர் பொருட்களின் விற்பனை வெகுவாகக் குறைந்தது. இதன் காரணமாய் அமெரிக்க ஏற்றுமதியையே நம்பி இருந்த பல்வேறு நாடுகளில் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரப் பின்னடைவு நேரடியாகவும் மறைமுகமாகவும் பிற நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஆடை ஏற்றுமதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருப்பூரில் ஆடை உற்பத்தித் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். சீனாவில் நூற்றுக் கணக்கான பொம்மை தயாரிக்கும் தொழிலகங்கள் மூடப்பட்டன. ஜப்பானில் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்தியாவில் கார் உற்பத்தி நிறுவனங்கள் பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ளன. அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஐடீ-ஐடீஇஎஸ் சேவை நிறுவனங்களுக்கு வழங்கியிருந்த பல திட்டப்பணிகள் ரத்து செய்யப்பட்டன. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பராமரிப்பு ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவில்லை. அமெரிக்கத் தகவல் தொழிநுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்த இந்தியர்கள் வேலை இழந்தனர். இந்திய ஐடீ-ஐடீஇஎஸ் நிறுவனங்கள் வளாக நேர்காணல்களில் தேர்ந்தெடுத்து வைத்திருந்தவர்களைப் பணிக்கு அழைக்க முடியவில்லை. ஏற்கெனவே பணியில் இருப்பவரின் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் வழங்கப்படவில்லை.
அமெரிக்கப் பொருளாதாரம் அரசின் தலையீடு கிஞ்சித்தும் இல்லாத கட்டற்ற பொருளாதாரம் (Free Economy) ஆகும். அமெரிக்காவில் இராணுவம் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இராணுவத் தளவாட உற்பத்தி உட்பட அனைத்து உற்பத்தியும் தனியார் துறைக்கே விடப்பட்டுள்ளன. இத்தகைய சுதந்திரமான பொருளாதார உற்பத்தி முறையே வளம் சேர்க்கும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் கட்டுப்பாடற்ற முதலாளித்துவப் பொருளாதாரம் பத்தாண்டுக்கு ஒருமுறை இக்கட்டில் சிக்கிக் கொள்ளும் என்பதை, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ உற்பத்திமுறை வளரத் தொடங்கிய 1850-களிலேயே அன்றைய பொருளாதார வல்லுநர்கள் முன்கணித்து எழுதி வைத்துள்ளனர். முன்கணிப்புகள் சரியே என்பதை வரலாறு காட்டி வருகிறது. 1930-இல் பெரும் சரிவிலிருந்து மீண்ட அமெரிக்கப் பொருளாதாரம் அவ்வப்போது தேக்கநிலையைச் சந்தித்து வந்திருக்கிறது. இப்போது மீண்டும் ஒரு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டமைக்கத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். திவாலாகிப் போன வங்கி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. அவற்றின் மேலாண்மையில் இனி அரசின் தலையீடு இருக்கும். நிதியுதவி பெற்ற நிறுவனங்கள் பணிகளை அயலாக்கப் படுத்தக் கூடாது, அவற்றின் பணிகளில் அயல் நாட்டினரை நியமிக்கக் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஹெச்-1 விசாவுக்கு வரம்பு விதித்துள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகளினால் இந்தியருக்குக் கிடைக்கவிருந்த பல பணியிடங்கள் கைநழுவிப் போயுள்ளன. எனினும் இது தற்காலிகப் பின்னடைவு தான். விரைவில் இந்தத் தேக்கநிலை சரியாகும். ஐடீஎஸ்-ஐடீஇஎஸ் வணிகம் மீண்டும் முன்னேற்றத் திசைவழியில் பயணிக்கத் தொடங்கும்.
அமெரிக்க பாணியைப் பின்பற்றிய பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டன. உலகப் பொருளாதாரத் தேக்கநிலை, வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ள இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவு பாதிக்கவில்லை என்றாலும் அமெரிக்கப் பொருளாதாரம் மீட்டமைக்கப்படும் வரை இந்தியாவுக்குச் சில சங்கடங்கள் ஏற்படவே செய்யும். எனினும் இந்தியப் பொருளாதாரம் ஐடீஎஸ், ஐடீஇஎஸ் துறைகளில் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது, உள்நாட்டுச் சந்தை வாய்ப்புகளைப் பெருமளவு விரிவுபடுத்த வேண்டும் என்கிற படிப்பினைகளை இன்றைய பொருளாதாரத் தேக்கநிலை இந்தியாவுக்குக் கற்பித்துள்ளது வரவேற்கத் தக்கது.
-