தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • வெண்சங்கு - Conch (Turbinella pyrum)

  முனைவர் ச.பரிமளா
  பேராசிரியர் மற்றும் தலைவர்
  தொல்லறிவியல் துறை

  தமிழகத்தில் “சங்குக் குளித்தல்” என்ற வளமானதொரு பண்டைய தொழிலுக்குச் சிறப்பைச் சேர்த்தது “வெண் சங்கு” எனப்படும் இம்மெல்லுடலி (Mollusca) இனமேயாகும். இவை வயிற்றுக் காலிகள் (Gastropada) என்ற வரிசையைச் சார்ந்தவையாகும். கடலடித் தரையில் இவ்வகைச் சங்கினங்கள் குவியல் குவியலாகக் காணப்படுகின்றன. இப்பகுதிகள் சங்குப் படுகைகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆலயங்களில் இச்சங்கு வழிபாட்டுப் பொருள்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. சங்கின் இறைச்சி பெருமளவில் உணவாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும் இவற்றின் வெண்மையான கனத்த ஓடுகளும் (shell) வாய்மூடி ஓடுகளும் (operculam) சிறந்த மருந்துப் பொருள்களாக மரபுசார் மருத்துவத்தில் இன்றளவும் பயன்பட்டு வருகின்றன. தூத்துக்குடி பகுதியிலிருந்து கிடைத்திடும் உயர்ரக சங்கு இனம் சங்கு வளையல்கள் செய்வதற்கேற்றவையாகும். இவை ஏற்றுமதி நோக்கில் வணிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இடம்புரி சங்குகளை விட வலம்புரி சங்குகள் அதிக விலைமதிப்பு மிக்கவையாகும். மரபுசார் இசைக் கருவிகளுள் துளையிடப்பட்ட வெண் சங்கு, “ஊது சங்கு” என்ற காற்றுக் கருவியாகப் பயன்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக் கடலோரப் பகுதிகள் வரை பரவலாகக் காணப்படும் வெண் சங்குகள் பெருமளவில் ஏற்றுமதி செய்வதற்கென்றே பிடிக்கப்படுகின்றன. சங்கினது முட்டைகள் ஒரு நீண்ட அடுக்குப்பை போன்ற அமைப்பில் வரிசையாக இடப்படுவதால் இம்முட்டைக் கூடுகள் ‘சங்குப் பூக்கள்” என்றழைக்கப்படுகின்றன.

  வெண்சங்கு
புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:16:04(இந்திய நேரம்)