தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • யானை

  முனைவர் ச.பரிமளா
  பேராசிரியர் மற்றும் தலைவர்
  தொல்லறிவியல் துறை

  அடர்ந்த காடுகளிலும், சமவெளிகளிலும் ஆற்றல் பள்ளத்தாக்குகளிலும் வாழும் இயல்பு கொண்ட யானைகள் தாவர உண்ணிகளாகும். சிறு சிறு குழுக்களாக காணப்படும். யானைக் கூட்டத்தை ஒரு வயதான பெண் யானையே வழி நடத்தி செல்லும். பெரும்பாலும் ஆண் யானைகள் தனித்தே காணப்படும். நுண்ணறிவு மிக்க யானைக்கூட்டம் தமக்கென்று கட்டுப்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் வைத்துத்துள்ளன. பெரும்பாலும் யானைகள் நின்று கொண்டே தூங்குகின்றன. 70 - 80 ஆண்டுகள் வரை வாழும் யானைகள் மூர்க்கக்குணம் கொண்டவைகள் போல் தோன்றினாலும் இவற்றை பழக்குவது எளிது.

  யானை
   

  நிலப்பகுதியில் வாழும் பாலூட்டிகளில், புரொபோஸீடியா (Proboscideia) குடும்பத்தைச் சார்ந்த யானைகள் மிகப்பெரிய உருவம் உடையவை. பெரிய தலையும், கனத்த உடம்பும், தூண் போன்ற கால்களும், நீண்ட துதிக்கையும், இரு பெரிய தந்தங்களும் யானைகளின் சிறப்பியல்புகளாகும். எலிப்பாஸ் ஆப்ரிகானஸ் (Elephas africanas) என்னும் ஆப்பிரிக்க யானையும்; எலிப்பாஸ் இன்டிகள் (Elephas indicus) என்னும் இந்திய யானை அதாவது ஆசிய யானை இனங்கள் மட்டுமே தற்போது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மேலும், மாமூத் (Mammoth) யானை இனம் அடியோடு அழிந்து விட்டதென்றும் ஸ்டீகோடான் (Stegodon) யானையும் அழிந்து விட்டதென்றும் கூறப்படுகின்றது. ஸ்டிகோடான் கணேசா (Stegodon ganesa) என்னும் யானை இனம் விநாயகக் கடவுளின் பெயரால் அழைக்கப்பட்ட யானை வகையாகும். தற்போது பிரிட்டிஷ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் 10 அடி நீளமுடைய தந்தங்களோடு இவ்வகை யானையின் எலும்புக்கூடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
  இன்று காணப்படும் ஆசிய யானைகள் உயரம் குறைந்தவை. சிறிய முகத்தையும் முக்கோண வடிவிலான காதுகளையும், ஒரே ஒரு உதடு கொண்ட துதிக்கையும் உடையவை ஆப்பிரிக்க யானைகள் விசிறி போன்ற பெரிய காதுகளையும், நீண்ட தந்தங்களையும், இரு உதடுகளைக் கொண்ட நீண்ட துதிக்கையும் உடையவை.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:16:35(இந்திய நேரம்)