வினை | தமிழ் இணையக் கல்விக்கழகம் 
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வினை

 • 4.1 வினை

  உணவு என்பது கடினமான பொருள்களையும் மென்மையான பொருள்களையும் நீர்ப் பொருள்களையும் தொட்டுச் சுவைப்பதற்கு உரிய பொருள்களையும் உள்ளடக்கியது.

  காய், கனி, முறுக்கு முதலியன கடினமான பொருள்கள். கடினமான பொருள்களைத் தின்னல் என்பது மரபு.

  சோறு என்பது கடித்துத் தின்பதற்கு உரிய பொருள் அன்று. மென்மையான பொருள். இதனை உண்ணல் என்பது மரபு.

  பால், மோர், பழச்சாறு முதலியவை நீர்ப்பொருள். இவற்றைப் பருகுதல் என்பது மரபு.

  ஊறுகாய், பச்சடி முதலியவற்றை தின்னவோ, உண்ணவோ, பருகவோ இயலாது. இவற்றைத் தொட்டு நக்குதல் மரபு.

  இப்பொருள்கள் அனைத்தையும் குறிக்கும் பொதுச் சொல் உணவு. உணவின் இவ்வகைகளைக் குறிப்பன சோறு முதலிய சிறப்புச் சொற்கள். உணவின் வகைகளைத் தனித் தனியே சாப்பிட்டதாகக் குறிப்பிடும் போது அவற்றிற்கு உரிய சிறப்பு வினைகளான தின்னல், உண்ணல் முதலியவற்றைப் பயன்படுத்த வேண்டும். உணவு வகை அனைத்தையும் சாப்பிட்டதாகக் குறிக்கும் போது அவற்றிற்கு உரிய பொதுவான வினையான சாப்பிட்டல் என்பதைப் பயன்படுத்த வேண்டும் என்பது மரபு. இதன்படி உணவு தின்றான், உணவு குடித்தான், உணவு நக்கினான் எனச் சிறப்புப் பொருள்களுக்கு உரிய வினையால் குறிப்பிடுவது மரபு அன்று. உணவு அயின்றான், மிசைந்தான் என்று சொல்வது மரபு. இக்காலத்தில் சாப்பிட்டான் எனச் சொல்வதை மரபு எனக் கொள்ளலாம்.

  இவ்வாறு வெவ்வேறு வினைகளுக்கு உரிய பல பொருள்களையும் தொகுதியாகக் குறிப்பிடும்போது, அவற்றின் பொதுச் சொல்லையும், அப்பொதுச் சொல்லிற்கு உரிய பொது வினையையும் பயன்படுத்துதல் மரபு. சிறப்புப் பொருள்களுக்கு உரிய வினையைக் கொண்டு முடிதல் கூடாது.

  மக்களை அழகுபடுத்தும் அணிகள் பல. அவை அனைத்தையும் குறிக்கும் பொதுச் சொல் அணி.

  திலகம்
  இடுதல்
  மாலை, பூ
  சூடுதல்
  மணப்பொருள்கள்
  பூசுதல்
  சேலை, சட்டை
  உடுத்தல்
  தாலி
  கட்டுதல்

  இவைகளை எல்லாம் குறிக்கும் பொதுச் சொல்லான அணி / நகை என்பதை அணிதல் என்னும் பொது வினையால் குறிப்பிட வேண்டும்.

  இசைக் கருவிகள் பல. கொட்டுதல், ஊதுதல், முழங்குதல் முதலியன அவற்றின் சிறப்பு வினைகள். இவை அனைத்தையும் இயம்புதல் அல்லது இசைத்தல் என்னும் பொதுவினையால் குறித்தல் மரபு.

  படைக் கருவிகள் பல. வெட்டுதல், எய்தல், எறிதல், சுடுதல், வெடித்தல், குத்துதல் என்பன சிறப்பு வினைகள். அக்காலத்தில் படை வழங்கினார், படை தொட்டார் என்பது மரபு. இக்காலத்தில் படைக் கருவிகளைப் பயன்படுத்தினார் எனல் தகும்.

  வேறுவினைப் பல்பொருள் தழுவிய பொதுச்சொலும்
  வேறவற்று எண்ணுமோர் பொதுவினை வேண்டும்

  (நன்னூல் - 389)

Tags         :