தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொதுவிளக்கம்

 • CO114 பாரதிதாசன் கவிதை உலகம் - 2

  பொது விளக்கம்

  இத்தொகுப்பில் பாரதிதாசனின் தமிழ் உணர்வு, பாரதிதாசன் கண்ட
  இயற்கை, பாரதிதாசனின்     காப்பியங்கள், பாரதிதாசனின்
  இசைப்பாடல்கள், பாரதிதாசனின் நாடகங்கள், பாரதிதாசன்
  வாழ்கிறார் என்னும் ஆறு பாடங்கள் உள்ளன.

  பார்க்கும் பொருள்களில் எல்லாம் தமிழின் அழகைக் கண்டவர்
  பாரதிதாசன். தமிழ் மொழியை உயிராகக் கருதி அதில் உணர்வைக்
  கலந்துள்ளார் அவர். தமிழர் வீட்டு நிகழ்வுகளில் எல்லாம் தமிழே
  முழங்க வேண்டும் என்னும் பாரதிதாசனின் எண்ணங்களைப்
  ‘பாரதிதாசனின் தமிழ் உணர்வு’ என்னும் பாடம் விளக்குகிறது.

  இயற்கைப் பொருள்களில் பாரதிதாசன் ஈடுபாடு கொண்டவர்.
  கண்ணில் காணும் காட்சிகளைக் கவிதையாக வடித்த அவர்
  இயற்கையின் படைப்பை எழிலாகக் காட்டியுள்ளார். இவற்றை
  எல்லாம் ‘பாரதிதாசன் கண்ட இயற்கை’ என்னும் பாடம்
  தெரிவிக்கிறது.

  பாரதிதாசன் பல சிறு காப்பியங்களைப் படைத்துள்ளார்.
  அக்காப்பியங்கள் வழியாக மக்கள் ஆட்சியை அவர் வலியுறுத்தி
  உள்ளார். உவமை, உருவக நயம் விளங்கும்படியாக அவர்
  தெரிவித்துள்ள கருத்துகளைப் ‘பாரதிதாசனின் காப்பியங்கள்’
  என்னும் பாடம் எடுத்துக் கூறுகிறது.

  தமிழில் இசைபாட முடியாது என்று கூறுவோரின் கருத்துகளை
  ஒழிப்பதற்காகத் தமிழ் இசைப்பாடல்கள் பலவற்றைப் பாரதிதாசன்
  பாடியுள்ளார். இசைப்பாடல்கள் வழியாக அவர் தெரிவித்துள்ள
  கருத்துகளைப் ‘பாரதிதாசனின் இசைப்பாடல்கள்’ என்னும் பாடம்
  உணர்த்துகிறது.

  பாரதிதாசன் தமது நாடகங்களைச் சிறந்த வடிவத்துடன்
  புரட்சிகரமாகப் படைத்துள்ளார். காட்சிகளின் நீளத்தையும்
  உரையாடல்களின் நீளத்தையும் அளவாக அமைத்துள்ளார்.
  பாரதிதாசனின் நாடகங்கள் வெளிப்படுத்தும் சிந்தனைகளைப்
  ‘பாரதிதாசனின் நாடகங்கள்’ என்னும் பாடம் தெரிவிக்கிறது.

  சாதி ஒழிய வேண்டும்; சமயச் சண்டைகள் மறைய வேண்டும்;
  பகுத்தறிவு பெருக வேண்டும்; சமத்துவச் சமுதாயம் மலர வேண்டும்
  என்னும் கருத்துகளைப் பாரதிதாசன் தமது படைப்புகள் வழியாக
  வெளிப்படுத்தியுள்ளார். அவரது படைப்புகள் இருக்கும் காலம்
  வரைக்கும் அவர் நிலைத்திருப்பார் என்பதைப் ‘பாரதிதாசன்
  வாழ்கிறார்’ என்னும் பாடம் உணர்த்துகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:58:27(இந்திய நேரம்)