தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இரணியன்

  • 5.2 இரணியன்
     

    E

    பாரதிதாசனின் நாடகங்களில் பலமுறை மேடைகளில் நடிக்கப்பட்ட நாடகம் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்பது ஆகும். அவ்வாறு நடிக்கப்பட்ட பிறகே இந்த நாடகம் நூலாக அச்சிடப்பட்டுள்ளது. இரணியன் என்னும் புராணகால வீரனைப் பற்றிய புதிய நாடகம் இது. இரணியன் என்னும் வீரன் எவ்வாறு வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டான் என்பதை இந்த நாடகம் தெரிவிக்கிறது. பாரதிதாசன் தமது பகுத்தறிவுப் பார்வைக்கு ஏற்ப இந்த நாடகத்தைப் படைத்துள்ளார்.
     

    5.2.1 இரணியன் பழைய கதை
     

    இரணியன் பழைய புராண மரபுப்படி அசுரர்களின் தலைவன். அவன் ஆணவம் மிகுந்தவன், தெய்வத்தை மதியாதவன். தனக்கும் மேலே ஆற்றல் நிரம்பிய தெய்வம் ஒன்று உண்டு என்ற கருத்தையும் அத்தெய்வம் நாராயணன் என்னும் பெயர் கொண்டது என்பதையும் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. இரணியன் ஆட்சியில் கல்வி பயிலும் பிள்ளைகள் எல்லாரும் தெய்வத்தின் பெயரைச் சொல்வதற்குப் பதிலாக இரணியனின் பெயரையே சொல்லி வணங்கினார்கள்.

    இரணியனுக்கு மகன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் பிரகலாதன். அவன் தெய்வத்தை மதித்தான்; நாராயணனை வணங்கினான். பிரகலாதனிடம் ஆசிரியர், இரணியனின் பெயரைக் கூறி வணங்குமாறு கூறினார். அதைக் கேட்காமல் நாராயணனின் பெயரைச் சொல்லி வணங்கினான் பிரகலாதன். ஆசிரியர், நிகழ்ந்ததை இரணியனிடம் கூறினார். இரணியன் கோபம் கொண்டான். பிரகலாதனைப் பலவாறு தண்டித்தும் பயனில்லை. இறுதியில், “சொல்லடா! ஹரி என்ற உன் நாராயணன் எங்கே இருக்கிறான். காட்டு” என்று கேட்டான்.
     

    “நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்று பிரகலாதன் கூறினான், அதைக் கேட்ட இராவணன் மிகுந்த கோபம் கொண்டான். அருகிலிருந்த தூணைச் சுட்டிக்காட்டி, “இந்தத் தூணிலும் உன் நாராயணன் இருக்கிறானா?” என்றான். “ஆமாம்” என்று கூறினான் பிரகலாதன்.

    தூணை எட்டி உதைத்தான் இரணியன். தூணிலிருந்து சிங்கமுகத்துடன் நாராயணன் தோன்றி இரணியனின் குடலைக் கிழித்துக் கொன்றதாகப் பழைய கதை கூறுகிறது. இந்தக் கதை விஷ்ணு புராணத்திலும் இராமாயணத்திலும் இடம் பெற்றுள்ளது.
     

    5.2.2 இரணியன் நாடகக் கதை
     

    இரணியன் தன் மகன் பிரகலாதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்ட விரும்புகிறான். இளவரசன் ஆவதற்கு முன் உலக நாடுகள் பற்றிய அறிவை அவன் பெற வேண்டும் என்று இரணியன் கருதினான். எனவே, பிரகலாதனை உலகச் சுற்றுப் பயணத்திற்கு அனுப்புகிறான்.
     

    பிரகலாதன் தன் பள்ளி நண்பன் காங்கேயனுடனும் மெய்க் காப்பாளர்களுடனும் உலகச் சுற்றுப் பயணத்திற்குச் சென்றான். அவ்வாறு சென்றவன் அயல் நாடுகளுக்குச் செல்லவில்லை; அங்கே அருகே உள்ள காட்டில் தங்கினான்.

    பிரகலாதனுடன் சென்ற காங்கேயன் தீய எண்ணம் கொண்டவன். அவன், கஜகேது என்பவனின் மகன். எப்படியாவது பிரகலாதனைத் தீய எண்ணங்களுக்கு அடிமையாக்கி விட வேண்டும் என்று திட்டமிட்ட கஜகேது அதற்கு ஏற்பத் தனது மகள் சித்ரபானுவுடன் பிரகலாதனைப் பழகச் செய்கிறான்.

    காங்கேயனின் தங்கைதான் சித்ரபானு. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சித்ரபானுவுக்கும் பிரகலாதனுக்கும் திருமணம் செய்து வைக்கிறான் கஜகேது. மேலும் அவர்களின் திருமணம் தற்போது இரணியனுக்குத் தெரியக்கூடாது என்றும் திட்டமிட்டான். சித்ரபானுவின் அழகில் மயங்கிய பிரகலாதன் உலகச் சுற்றுப் பயணத்திற்குச் செல்லவில்லை.
     

    5.2.3 நாராயண மந்திரம்
     

    பிரகலாதன்     தனது     சுற்றுப்பயணத்தை     முடித்துவிட்டுத் திரும்பியதாகக் கூறித் திரும்பினான். அவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லா நாட்டு மன்னர்களும் வந்து அமர்ந்திருந்தனர். பட்டம் சூட்டுவதற்குரிய கிரீடம் வந்தது. ‘இரணிய நாமத்தை வாழ்த்துகிறேன்’ என்று சொல்லிவிட்டு இளவரசருக்கு உரிய இருக்கையில் அமரச் சொன்னார்கள்.

    பார்வையாளர்கள் நடுவே, பொதுமக்களோடு சித்ரபானுவும் அமர்ந்து இருந்தாள். பிரகலாதன் பார்க்கும் படியாக அவள் எழுந்து நின்று தன்னை நினைவுபடுத்தினாள்.

    உடனே பிரகலாதன் ‘சர்வலோக சரண்யனாகிய ஸ்ரீமந் நாராயணன் நாமம் வாழ்க’ என்று கூறினான். அனைவரது முகமும் சுருங்கின. இரணியன் உடனே எழுந்து பின்வருமாறு கோபமாகக் கூறினான்.

    “சீ! என்ன சொன்னாய்? அடக்கு உன் இறுமாப்பை மூடனே! உனது தமிழ்த் தன்மை எங்கே? என் பெயரைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! தமிழ்ப் பெருமக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட களங்கமே! உன் நெஞ்சைப் பிளப்பேன். என் மகன் என்பதால் உன்னை விடவில்லை பொது மக்களின் இளவரசன் என்பதால் விடுகிறேன்!

    “நாராயணன் என்ற பதத்தால் நீ குறிக்கும் மனிதன் யார்? அல்லது ஒரு சக்தி உள்ள பொருளானால் அப்பொருள் எது?” என்று கேட்டான்.

    (இணியன், காட்சி : 11)
     

    அமைச்சர், தாய் லீலாவதி, ஏனையோர் எல்லாரும் எடுத்துச் சொன்ன பிறகும் நாராயணனின் பெயரையே பிரகலாதன் சொன்னான்.
     

    வாளை உருவியபடி அவனை வெட்டுவதற்குப் போனான் இரணியன்.

    லீலாவதி தடுத்து, ‘நான் எப்படியாவது பிரகலாதனை மாற்றுகிறேன்; நாளைக்குப் பட்டம் சூட்டலாம்’ என்றாள்.
     

    5.2.4 இரணியனின் இறப்பு
     

    அரண்மனையில் ஒரு தனிப் பகுதியில் சித்ரபானுவும் பிரகலாதனும் உரையாடுகிறார்கள். அப்போது அங்கே சேனாதிபதி வந்தான். உடனே சித்ரபானு மறைந்து கொண்டாள்.

    அப்போது, பிரகலாதனை அழைத்துச் செல்வதற்குக் காவலர்கள் வந்தார்கள். அவர்களிடம் “என்னிடம் எந்த மாற்றமும் இல்லை. இராஜவிசுவாசப் பிரமாணம் செய்ய இயலாது என்று சொல்” என்று கூறி அனுப்பினான்.

    காவலர்கள் மீண்டும் வந்தார்கள்

    ‘இளவரசரை இந்தச் சங்கிலியால் கட்டி இழுத்துவரச் சொன்னார் சக்கரவர்த்தி’ என்று சொன்னார்கள்.
     

    அவர்களிடம் சேனாதிபதி “சங்கிலியால் இளவரசரைக் கட்டினோம் சங்கிலி பொடிப் பொடியாக உதிர்ந்து விட்டது. பிறகு நெருங்கமுடியவில்லை; அக்கினிச் சுவாலை வீசுகிறது. நாங்கள் பயந்து ஓடி வந்து விட்டோம் என்று சொல்லுங்கள். சங்கிலியை இங்கேயே போட்டுவிட்டுப் போய் விடுங்கள்” என்றான்.

    மன்னனிடம் சென்ற காவலர்கள் சங்கிலி பொடியான செய்தியைத் தெரிவித்தார்கள். இரணியன் ஆத்திரத்துடன் பிரகலாதனிடம் வந்தான். லீலாவதியும் உடன் வந்தாள்.

    “மன்னனின் மகனான நீ இப்படி நாராயணன் பெயரைச் சொல்லலாமா? யார் போட்ட மருந்தினால் இப்படி மயங்கினாய்” என்று தாய் லீலாவதி கேட்டாள்.

    அதற்குப் பிரகலாதன், “மனிதரிட்ட மருந்தல்ல! ஸ்ரீமந் நாராயணனிட்ட மருந்துதான் அம்மா!” என்றான்.

    “அட வஞ்சகனே! நீ சொல்லும் நாராயணன் எங்கே இருக்கிறான், காட்டுவாயா?” என்றான் இரணியன்.

    “அவன் எங்கும் இருப்பான், இதோ இருக்கும் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்” என்றான் பிரகலாதன்.

    “இந்தத் தூணிலுமா?” என்று தூணை உதைத்தான் இரணியன். அப்போது தூணுக்குப் பின்னால் இருந்த காங்கேயன் சிங்க முகமூடியுடன் வெளியே வந்தான்.
     

    உடனே இரணியன், “அடே! நான் தூணை உதைத்தேன். நாராயணனாகிய நீ வந்தாய். உன்னை உதைத்தால் உன்னிடமிருந்து தூண் வெளிவருமா?” என்று கூறி, அவனை உதைத்தான். உதைபட்ட காங்கேயன் விழுந்து இறந்தான். அப்போது மறைந்திருந்த கஜகேதுவின் வீரர்கள் வெளியே வந்து இரணியனின் முதுகில் குத்தினார்கள். இரணியன் இறந்தான். இரணியனின் கையிலிருந்த வாளால் லீலாவதி தற்கொலை செய்து கொண்டாள்.

    சித்ரபானு கூறியதன்படி சேனாதிபதியைப் பிரகலாதன் கொல்லவந்தான். அதற்கு முன் பிரகலாதனைச் சேனாதிபதி கொன்றான். தன்னை ஏமாற்றிய சித்ரபானுவையும் அவன் கொன்றான். இரணியனின் இறப்புக்குத் தானும் ஒரு காரணம் ஆகி விட்டோமே என்று கலங்கிய சேனாதிபதி தானே கட்டாரியால் குத்திக் கொண்டு இறந்தான்.
     

    5.2.5 கதையை மாற்றியது ஏன்?
     

    புராணக் கருத்துகளைப் பாரதிதாசன் ஏற்கவில்லை. அவை தமிழர்களின் பண்பை வெளிப்படுத்தவில்லை என்று அவர் உணர்ந்தார். இரணியனின் கதையும் புராணத்தில் இடம் பெறுகிறது. தமிழர்களின் பண்பை வெளிப்படுத்தவில்லை என்று தான் கருதிய புராணக் கதையின் வாயிலாகவே தமிழர்களின் பண்பை வெளிப்படுத்த பாரதிதாசன் விரும்பினார். எனவே, தமது எண்ணத்திற்கு ஏற்ப, இரணியனின் கதையை மாற்றி அமைத்து நாடகமாகப் படைத்துள்ளார்.

    புராணக் கதையில் பிரகலாதன் சிறுவனாகக் காட்டப் பட்டுள்ளான். பாரதிதாசன் தமது நாடகத்தில் பிரகலாதனை இளைஞனாகக் காட்டியுள்ளார். அவனே இரணியனின் எதிரிகளுக்குத் துணை செய்வதாகவும் உருவாக்கியுள்ளார்.

    நாடக முடிவில் இரணியன் வஞ்கமாகக் கொல்லப்பட்டதாகக் காட்டியுள்ளார். மேலும், நாடக உரையாடல்கள் வாயிலாக இரணியனின் இணையிலா வீரம் வெளிப்படும்படியாகவும் செய்துள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:03:53(இந்திய நேரம்)