கலம்பக இலக்கியம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் 
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கலம்பக இலக்கியம்

 • 4.1 கலம்பக இலக்கியம்

  இறைவனையோ, அரசனையோ, தலைவனாகக் கொண்டு, பலவகைச் செய்யுள்களால் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை கலம்பகம்.

  4.1.1 பெயர்க் காரணம்

  நண்பர்களே! கலம்பகம் என்ற சிற்றிலக்கிய வகைக்கு இப்பெயர் வரக் காரணம் என்ன என்று பார்ப்போமா?

  கலம்பகம் என்பதற்குக் கலவை என்று ஒரு பொருள் உண்டு. சங்க இலக்கியங்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை என்ற நூலில்,

  பல் பூ மிடைந்த படலைக்கண்ணி

  (பெரும்பாணாற்றுப்படை - 174)

  என்ற அடி இடம் பெற்றுள்ளது.

  இந்த அடியின் பொருள் யாது? இந்த அடிக்கு உரை ஆசிரியராகிய நச்சினார்க்கினியர் பல வகையாகிய பூக்கள் கலந்து நெருங்கிய கலம்பக மாலை என்று பொருள் கூறுகிறார்.

  கதம்பம் என்று ஒரு வகையான பூ மாலையை நாம் இப்பொழுதும் காண முடிகிறது. பல வகையான பூக்களைச் சேர்த்துத் தொடுத்த மாலையே கதம்பம் எனப்படுகிறது. கலம்பகம் என்பதே பேச்சு வழக்கில் கதம்பம் என்று மாறி வழங்கப்படுகிறது எனலாம்.

  வைணவ பக்தி இலக்கியத்தை வழங்கியவர்கள் பன்னிரண்டு ஆழ்வார்கள். அவர்களுள் ஒருவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார். அவர், ''கலம்பகம் புனைந்த அலங்கல் அம் தொடையல்" (திருப்பள்ளியெழுச்சி.5) என்று குறிப்பிடுகின்றார். பல மலர்கள் கலந்து தொடுக்கப்பட்ட மாலை என்பது இதன் பொருள் ஆகும்.

  நண்பர்களே! பல்வேறு மலர்கள் கலந்து தொடுக்கப்பட்ட மாலை கலம்பகம் என்று குறிப்பிடப்படுகிறது அல்லவா? அது போலப் பல்வேறு உறுப்புகளால் ஆன இலக்கிய வகை கலம்பகம் என்று கூறப்படுகிறது எனலாம்.

  • பல்வேறு உறுப்புகளின் கலப்பு

  கலம்பகம் என்பதைக் கலம்பு + அகம் என்று பிரித்தும் விளக்கம் கூறலாம். கலப்பு என்பது கலம்பு என்று ஆகி உள்ளது. நூலின் உள்ளே பல்வேறு உறுப்புகள் கலந்து வருவதால் கலம்பகம் என்று பெயர் பெற்றது எனக் கருதலாம்.

  கலம்பகம் என்பதைக் கலம் + பகம் என்று பிரித்தும் பொருள் கூறலாம். கலம் என்றால் பன்னிரண்டு என்று பொருள். பகம் என்றால் ஆறு என்று பொருள். கலம்பகம் என்றால் பதினெட்டு என்று பொருள். இந்த இலக்கிய வகையில் புயம், அம்மானை, ஊசல், களி, மறம், சித்து, காலம், மதங்கியார், வண்டு, மேகம், சம்பிரதம், தவம், பரணி, தழை, இரங்கல், தூது, குறம், தென்றல் போன்ற பதினெட்டு உறுப்புகள் கலந்து வருகின்றன. எனவே கலம்பகம் என்று பெயர் பெற்றது என்றும் கருதப்படுகிறது.

  என்றாலும், இக்கருத்துப் பொருந்தாது எனலாம். ஏனெனில்

  1) எல்லாக் கலம்பக நூல்களிலும் 18 உறுப்புகள் காணப்படவில்லை.

  2) சில நூல்களில் பதினெட்டுக்கும் குறைவான உறுப்புகளே உள்ளன.

  3) வேறு சில நூல்களில் பதினெட்டுக்கும் அதிகமான உறுப்புகள் காணப்படுகிறன.

  எனவே, கலம் + பகம் = கலம்பகம் என்று விளக்கம் கூறுவது, அவ்வளவு பொருத்தமாக இல்லை என்று கூறலாம்.

  4.1.2 கலம்பகத்தின் தோற்றம்

  கலம்பக இலக்கிய வகையின் பல உறுப்புகளின் கருக்கள் தமிழின் தொன்மையான இலக்கண நூல் ஆகிய தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் பல கலம்பக உறுப்புகள் அகத்துறைகளாகவும் புறத்துறைகளாகவும் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு காட்டப்பட்டுள்ளதைப் பின்வரும் வரைபடம் மூலம் விளக்கலாம்.

  c01234d1.gif (4930 bytes)

  இவ்வாறு தொல்காப்பியர் கூறும் அகத்துறை, புறத்துறை சார்ந்த உறுப்புகளின் கலவையாகக் கலம்பகம் என்ற இலக்கிய வகை தோன்றியது எனலாம்.