நந்திக் கலம்பகத்தின் உறுப்புகள் | தமிழ் இணையக் கல்விக்கழகம் 
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நந்திக் கலம்பகத்தின் உறுப்புகள்

 • 4.3 நந்திக் கலம்பகத்தின் உறுப்புகள்

  நண்பர்களே! நந்திக் கலம்பகம் என்ற நூலின் துணையுடன் கலம்பக இலக்கியத்தின் உறுப்புகள் சிலவற்றைக் காண்போமா?

  4.3.1 புயம்

  கலம்பக இலக்கியத்துள் இடம் பெறும் உறுப்புகளில் ஒன்று புயம் என்பது ஆகும். புயம் என்றால் தோள் என்று பொருள். நூலினுள் இடம் பெறும் தலைவனின் புயத்தின் அழகையும் ஆற்றலையும் புகழ்ந்து கூறுவதாக இந்த உறுப்பு அமைகின்றது. முத்துவீரியம் என்னும் பாட்டியல் நூல் புயம் என்ற உறுப்பை வாகு, வகுப்பு என்கின்றது. இன்னொரு பாட்டியல் நூல் ஆகிய பிரபந்த தீபிகை இந்த உறுப்பைப் புய வகுப்பு என்கின்றது.

  நந்திக் கலம்பகத்தில் புயம் என்ற உறுப்பு தோள் வகுப்பு என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. இந்த உறுப்பு அமையும் பாடல் இதோ தரப்படுகிறது. தோள் வகுப்பு என்பதற்குத் தோளின் பல சிறப்புகளை வகைப்படுத்திக் கூறுதல் என்று பொருள் கொள்ளலாம்.

  மறமதம் கரிதிசை நிறுவின
       மணிநகை யவர்மனம் நகுவன
  விறலர சர்கள்மனம் நெகிழ்வன
       விரைமலர் களிமுலை பொருவன
  திறலுடை யனதொடை புகழ்வன
       திகழொளி யனபுகழ் ததைவன
  நறுமல ரணியணி முடியன
       நயவர நினதிரு புயமதே

  (நந்.கலம்பகம் - 11)

  (மறம் = வலிமை; கரி = யானை; நிறுவன = நிற்கச் செய்தன; நகையவர் = பற்களை உடைய பெண்கள்; நெகிழ்வன = மலர்ச் செய்வன; விறல் = வெற்றி; விரை = மணம்; பொருவன = போர் செய்வன; தொடை = பாட்டு; ததைவன = நெருங்கும் தன்மை உடையன; நயவர = நன்மை பொருந்தியவனே!)

  இனி, இந்தப் பாடலில் நந்திவர்மனின் தோளின் அழகும் வலிமையும் எவ்வாறு புகழப் படுகின்றன என்று பார்ப்போம்.


   

  நந்திவர்மனின் தோள்கள் வலிமையும் மதமும் உடைய யானைகளை அந்த அந்தத் திசைகளில் நிற்கச் செய்யும் வல்லமை உடையன. முத்துகளைப் போன்ற பற்களை உடைய பெண்களின் மனத்தை மலரச் செய்வன. வெற்றியை உடைய அரசர்களின் மனத்தை அச்சம் கொள்ளச் செய்வன. மணம் நிறைந்த மாலையை அணிந்த பெண்களின் மார்புகளுடன் போராடுவன. பளபளப்பு உடையன. புலவர்களால் பாராட்டப் பெறுவன. ஒளி நிறைந்தன. அணிகள் அணிந்து உயர்ச்சி பெற்ற மேலிடம் உள்ளன என்று புகழப்படுகின்றன.

  இந்தப் பாடலில் வரும் அடிகளைப் பாருங்கள். சிறு சிறு சொற்றொடர்களாக அமைந்து இன்பம் தருகின்றன. பெண்களின் பற்களுக்கு முத்துகள் உவமை ஆகக் கூறப்படுகின்றன.

  இந்தப் பாடலில் நந்திவர்மனின் தோள்களின் ஆற்றல், வெற்றிச் சிறப்பு, அழகு, ஒளி, புகழ் என்பன கூறப்படுகின்றன. பெண்களுக்கு இன்பம் கொடுக்கும் தோள்கள். பகைவர்களுக்கு அச்சம் செய்யும் தோள்கள் என்று தோள்களின் மென்மையும் வலிமையும் புகழப்படுகின்றன. இவ்வாறு தோள்களின் பெருமைகளைக் கூறும் உறுப்பாகத் தோள் வகுப்பு என்ற உறுப்பு அமைகின்றது.

  4.3.2 ஊசல்

  நந்திக் கலம்பகத்தில் இடம் பெறும் மற்றும் ஓர் உறுப்பு ஊசல் என்பது ஆகும். ஊசல் ஆடுதல் அல்லது ஊஞ்சல் ஆடுதல் என்பது பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று ஆகும். நாட்டுப்புறப் பெண்கள் விளையாடும் ஊசல் என்பதைப் புலவர்கள் இலக்கியங்களில் அமைத்துப் பாடுவது மரபு. சிலப்பதிகாரத்திலும் ஊசல் வரி என்ற பகுதி உள்ளது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் திருப்பொன் ஊசல் என்ற பகுதியை அமைத்துள்ளார்.

  ஊசல் என்பது கலம்பக உறுப்புகளில் ஒன்றாகவும் அமைகின்றது. நந்திக்கலம்பகத்தில் இந்த உறுப்பு இடம் பெறுகிறது. நந்திவர்ம மன்னனிடம் பெண்கள் காதல் கொள்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். அப்பெண்களுள் ஒருத்தி நந்திவர்மனின் புகழை ஊசல் ஆடிக்கொண்டு பாடுவோம் என்று தோழிகளைப் பார்த்துக் கூறுவதாக இந்தப் பகுதி அமைகின்றது. நந்திக்கலம்பகத்தில் இடம் பெறும் ஊசல் பாடலை இப்போது பார்ப்போமா?

  ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்
      உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்
  ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்
      அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்
  கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
      கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்
  காடவர்க்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்
      காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்

                           (பாடல் - 33)

  (ஓடு = ஓடிய ; அரி = செவ்வரி (சிவந்த வரி); மட = இளமை; நல்லீர் = பெண்களே; ஆடாமோ = ஆடுவோமாக; உத்தரியம் = மேல் ஆடை; ஆடகம் = பொன்; பூண் = அணிகலன்; அம் = அழகிய; மென் = மென்மையான; குழல் = கூந்தல்; சரிய = அவிழ்ந்து தொங்குமாறு; கூடலர் = பகைவர்; விண் = வான் உலகம்; கோமுற்றப்படை = திசைகளில் எல்லாம் சுற்றித் திரியும் படை; குவலயம் = மண் உலகம்; முன் தோன்றல் = முன்னால் பிறந்தவன் (தமையன்)

  நண்பர்களே! இந்தப் பாடலின் பொருளையும் நயத்தையும் காண்போமா?

  ஒரு பெண் மற்ற தோழிகளை அழைக்கின்றாள். எப்படி அழைக்கின்றாள்? சிவந்த வரி பரந்த கண்களை உடைய தோழிகளே! என்று. அழகிய பெண்களின் கண்களில் சிவந்த வரிகள் காணப்படுவது சிறப்பு என்று பொதுவாகக் கருதப்படும் உலக வழக்கு உள்ளது. எனவே இவ்வாறு அழைப்பதாகப் புலவர் காட்டுகிறார். தோழிமார்களை ஊஞ்சல் ஆட அழைக்கின்றாள். ஊஞ்சல் ஆடும் போது என்னென்ன நிகழும் என்று கூறி அந்தப் பெண் ஊஞ்சல் ஆட அழைக்கின்றாள். பட்டால் ஆன மேல் ஆடை அசையும் படி ஊஞ்சல் ஆடுவோம். ஒளி மிக்க பொன்னால் ஆன அணிகள் அசைய ஊஞ்சல் ஆடுவோம். அழகிய மலர் சூடிய கூந்தல் அவிழ்ந்து அசைய ஊஞ்சல் ஆடுவோம் என்கிறாள். ஊஞ்சல் ஆடும் வேகத்தில் ஆடை, அணிகலன் ஆகியன அசைதல் இயல்பு. கூந்தல் அவிழ்தலும் இயல்பு. எனவே இவ்வாறு அந்தப் பெண் கூறுகின்றாள். ஊஞ்சல் ஆடும் போது தலைவனின் புகழைப் பாடி ஆடுதல் இயற்கை. எனவே இங்கும் தலைவன் புகழ் பாடி ஆடத் தலைவி தோழியை அழைக்கிறாள்.

  • தெள்ளாறு வென்றவன்

  தெள்ளாறு என்ற இடத்தில் போர் நடந்தது. அந்தப் போரில் நந்திவர்மன் பகைவர்களைக் கொன்று வெற்றி பெற்றான். அத்தகைய நந்தி வர்மன் திசைகள் எல்லாம் சுற்றிச் செல்கின்ற படைகளை உடையவன். அவன் காடவன் என்பவனுடைய தமையன். இத்தகைய சிறப்புகளை உடைய நந்திவர்மனின் கையில் உள்ள வேலையும் அவனது காஞ்சிபுர நகரையும் புகழ்ந்து பாடி நாம் ஊசல் ஆடுவோம் என்று தலைவி தோழியை அழைக்கிறாள்.

  நந்திவர்மன் பகைவர்களைக் கொன்று வெற்றி பெற்றான் என்பதைப் புலவர் பகைவர்களுக்கு வான் உலக வாழ்க்கையைக் கொடுத்தான் என்று நயம்படக் கூறுகிறார்.

  நந்திவர்மன் தெள்ளாறு என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றிபெற்றான் என்ற வரலாற்றுச் செய்தியும் இப்பாடல் மூலம் தெரிய வருகிறது.

  4.3.3 மறம்

  மறம் என்றால் வீரம் என்று பொருள். புறத்துறைகளில் ஒன்று மகள் மறுத்து மொழிதல் என்ற துறை ஆகும். மறவர் குலத்தில் பிறந்தவள் ஒரு பெண். அவளைத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு மன்னன் விரும்புகின்றான். எனவே, மறவர்களிடம் ஒரு தூதுவனை அனுப்புகிறான். தூதுவன் மறவர்களிடம் சென்று மன்னன் கூறிய செய்தியைக் கூறுகின்றான். அதனைக் கேட்ட மறவர்கள் அந்தத் தூதுவனிடம் தங்கள் வீரத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றனர். தூது அனுப்பிய மன்னனின் வீரத்தை இகழ்ந்து கூறுகின்றனர். இறுதியில் மன்னனுக்குத் தம் குலத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க மறுக்கின்றனர். இதுவே மகள் மறுத்து மொழிதல் என்ற துறையின் பொருள். மறவர்கள் தம் மறப் பண்பை அதாவது வீரத்தைப் புகழ்ந்து கூறுவதே மறம் என்ற கலம்பக உறுப்பு ஆகும்.

  நந்திக் கலம்பகத்தில் இடம் பெறும் மறம் என்ற உறுப்பில் இடம் பெறும் பாடலைப் பார்ப்போம்.

  அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல்
      நான்கிழவன் அசைந்தேன் என்றோ
  வம்பு ஒன்று குழலாளை மணம் பேசி
      வரவிடுத்தார் மன்னர் தூதர்
  செம் பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றில்
      நந்திபதம் சேரார் ஆனைக்
  கொம்பு அன்றோ நம் குடிலில் குறுங்காலும்
      நெடுவளையும் குனிந்து பாரே

                     (நந்.கலம்பகம் - 82)

  (ஒன்று = கொள்ளும்; நாண் = அம்பின் பூட்டுக்கயிறு: அசைந்தேன் = தளர்ந்தேன்; வம்பு = நறுமணம்; குழலாள் = கூந்தலை உடைய பெண்; மணம் = திருமணம்; பதம் = அடிகள் (பாதங்கள்); குறுங்கால் = சிறிய தூண்; நெடுவளை = நீண்ட வளைச்சட்டங்கள்)


   

  தூதுவனைப் பார்த்துப் பெண்ணின் தந்தை ஆகிய மறவன் கூறுகின்றான். மன்னன் அனுப்பிய தூதனே! என் வில் ஒடிந்துள்ளது. அதன் பூட்டுக் கயிறு அறுந்து உள்ளது. நான் மூப்பு அடைந்து விட்டேன் என்று எண்ணியா உன் மன்னன் உன்னை இங்கு அனுப்பினான்? நறுமணம் மிக்க கூந்தலை உடையவள் என் மகள். இவளைத் திருமணம் செய்ய வேண்டி உன்னை அனுப்பி உள்ளான் உன் மன்னன். என்னுடைய இந்தச் சிறிய குடிசையைப் பார், இந்தச் குடிசையில் சிறிய தூண்களும் நீண்ட வளைச் சட்டங்களும் உள்ளன. அவை எவற்றால் ஆக்கப்பட்டுள்ளன என்று தெரியுமா? நந்திவர்மன் ஆகிய என் மன்னன் தெள்ளாறு என்ற இடத்தில் போர் செய்தான். பகை மன்னர்களுடைய யானைகள் அப்போரில் இறந்தன. அந்த யானைகளின் கொம்புகளே இந்தத் தூண்களும் நெடிய வளைச் சட்டங்களும் ஆகும். நான் கூறுவதில் உனக்குச் சந்தேகம் இருக்கலாம். எனவே, இந்தக் குடிசையில் நீ குனிந்து பார் என்று பெண்ணின் தந்தை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலில் நந்திவர்மனின் வீரமும் அவன் படைவீரர்களின் வீரமும் தெரியவருகின்றன. குடிசைகளில் தூண்களாகவும் வளைச் சட்டங்களாகவும் பயன்படுத்தும் அளவுக்குப் பல யானைகள் இறந்துள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.

  4.3.4 காலம்

  நண்பர்களே! காலம் என்ற கலம்பக உறுப்பைக் காண்போமா? தலைவன் தலைவியிடம் காதல் கொள்கிறான். இந்த நிலையில் தலைவன் பொருள் ஈட்டி வருவதற்காக வேறு நாட்டுக்குச் செல்கின்றான். இதனால் தலைவி தலைவனைப் பிரிய வேண்டி வருமே என்று வருந்துகின்றாள். இதனை உணர்ந்த தலைவன் ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தைக் கூறுகின்றான். இந்தக் காலம் வந்ததும் நான் திரும்பி வந்து விடுவேன் என்கிறான். நாட்கள் பல சென்றன. தலைவன் குறிப்பிட்டுச் சென்ற காலம் வந்து விட்டது. ஆனால் தலைவன் வரவில்லை. இதனால் தலைவி வருந்துகின்றாள். தலைவி தன் துன்பங்களைக் கூறி வருந்துவதாக அமையும் உறுப்பே காலம் என்பது ஆகும். நந்திக் கலம்பகத்தில் காலம் என்ற உறுப்பில் அமையும் பாடல் இதோ தரப்படுகிறது. வேனிற் காலத்தின் வருணனை அது.

  • வேனிற்கால அழகு

   

  இப்பாடலின் பொருளைப் பார்ப்போம். தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லும் போது வேனில் காலத்தில் வந்து விடுவதாகக் கூறுகிறான். வேனில் காலம் வந்து விட்டது. எப்படிப்பட்ட வேனில் காலம்! பருவ காலங்களில் மிகுந்த இன்பம் தருவது வேனில் காலம். இந்தக் காலத்தில் மரங்களில் உள்ள முதிர்ந்த இலைகள் உதிர்ந்து விடும். தளிர்கள் தோன்றும். செடி கொடிகளும் தளிர்க்கும் காலம். மலர்கள் மலர்ந்து மணம் வீசும் காலம். கணவனுடன் சேர்ந்து வாழும் பெண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் காலம். வண்டுகள் மலர்களில் போய் அமர்ந்து பாடல் பாடும் காலம். குயில்கள் மாமரத்தின் இளங்தளிர்களைக் கௌவும் காலம்.
   

  கணவனுடன் சேர்ந்து வாழும் பெண்களுக்குத் தென்றல் காற்று இன்பத்தை அளிக்கும் காலம். கணவனைப் பிரிந்து வாடும் பெண்களுக்குத் தென்றல் தீயைப் போன்று துன்பம் செய்யும் காலம், இளம் பெண்கள் முத்துகளைப் பொறுக்கி எடுத்து விளையாடும் காலம் கணவனைப் பிரிந்து வாடும் பெண்கள் மன்மதனைப் பழி கூறும் காலம். இத்தகைய வேனில் காலம் வந்து விட்டது. ஆனால், வேனில் காலத்தில் வந்து விடுவேன் என்று கூறிச் சென்ற தலைவர் வரவில்லை. நான் என்ன செய்வேன் என்று தலைவி வருந்துவதாகக் காட்டப்படுகிறது. வேனில் காலத்தைப் புலவர் நன்றாக வருணிப்பதை நாம் அறியமுடிகிறது.

  மலர்ச்சூழல் அமர்ந்தினிய வண்டார்க்கும் காலம்
      வரிக்குயில்கள் மாவிலிளம் தளிர்கோதும் காலம்
  சிலர்க்கெல்லாம் செழும்தென்றல் அமுதுஅளிக்கும் காலம்
      தீவினையேற்கு அத்தென்றல் தீவீசும் காலம்
  பலர்க்கெல்லாம் கோன்நந்தி பன்மாடக் கச்சிப்
      பனிக்கண்ணார் ப
  ருமுத்தம் பார்த்தாடும் காலம்
  அலர்க்கெல்லாம் ஐங்கணைவேள் அலர்தூற்றும் காலம்
      அகன்றுபோ னவர்நம்மை அயர்ந்துவிட்ட காலம்

  (நந்.கலம்பகம் - 60)

  (ஆர்க்கும் = ஆரவாரிக்கும்; மாவில் = மாமரத்தில்; கோதும் = கௌவும்; கோன் = மன்னன்; கச்சி = காஞ்சி நகரம்; பனி = குளிர்ந்த; கண்ணார் = கண்களை உடைய பெண்கள், முத்தம் = முத்துகள்; ஆடும் = விளையாடும்; அலர் = மலர்; வேள் = மன்மதன்; அலர் = பழிச்சொல்; அயர்ந்து = மறந்து)

  4.3.5 மதங்கியார்

  கலம்பக உறுப்புகளில் ஒன்றாகிய மதங்கியார் என்றால் என்ன என்று பார்ப்போமா?


   

  மதங்கியார் என்போர் இசையுடன் பாடுவதில் சிறந்தவர்கள். கூத்து ஆடுவதிலும் வல்லவர்கள். இத்தகைய மதங்கியார் பிரிவைச் சார்ந்த ஒரு பெண் தன் இரண்டு கைகளிலும் வாளை ஏந்திக் கொண்டு சுழன்று ஆடுகின்றாள். அவ்வாறு ஆடும் மதங்கியார்ப் பெண்ணின் அழகை ஒருவன் புகழ்ந்து பாடுகிறான். இந்தப் பொருளுடன் அமைந்த கலம்பக உறுப்பு மதங்கியார் எனப்படுகிறது.

  • மதங்கி

  ஒரு தலைவனை அல்லது ஒரு மன்னனைப் புகழ்ந்து ஆடுவது வழக்கம். இவர்கள் இரு கைகளிலும் வாளைப் பிடித்துக் கொண்டு ஆடும் வழக்கமும் உண்டு என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

  நந்திக் கலம்பகத்தில் இவ்வுறுப்பு இடம் பெற்றுள்ளதைக் காணலாமா?

  பகைஇன்றிப் பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலின்
  நகையும்ஆண் மையும்பாடி நன்றுஆடும் மதங்கிக்குத்
  தகையும்நுண் இடைஅதிரத் தனபாரம் அவற்றோடு
  மிகைஒடுங்கா முன்இக்கூத் தினைவிலக்க வேண்டாவோ

  (நந்.கலம்பகம் - 74)

  (பார் = உலகம்; நகை = புகழ்; ஆண்மை = வாள் ஆற்றல்; தகையும் = மெலியும்; தனம் = மார்பு; மிகை = சுமை; ஒடுங்காமுன் = முறிந்து போகும் முன்பு)

  இந்தப்பாடல் மதங்கியார் என்ற பெண்ணின் அழகைக் காட்டுகின்றது. நந்திவர்மன் பகை இல்லாமல் ஆட்சி, செய்யும் சிறப்பையும் இந்தப் பாடல் விளக்கக் காணலாம்.

  4.3.6 தூது

  நந்திவர்மன் என்ற மன்னனிடம் ஒரு பெண் காதல் கொண்டாள். காதல் துன்பம் தாங்கமுடியாது அவள் வருந்துகின்றாள். எனவே, நந்திவர்மனிடம் தூது அனுப்பி அவன் அன்பைப் பெற வேண்டும் என்று எண்ணுகிறாள். இதனால் தூது அனுப்புகின்றாள் என்று தூது அனுப்பும் செய்தியைக் கூறுவதாக அமைவதே தூது என்ற கலம்பக உறுப்பு ஆகும்.

  இந்தத் தூதுச் செய்தி இடம் பெறும் நந்திக்கலம்பகம் பாடலைக் கீழே காண்போம்.

  பொழுதுகண்டு ஆய்அதிர் கின்றது
       போகநம்பொய் யற்குஎன்றும்
  தொழுதுகொண் டேன் என்று சொல்லுகண்
       டாய்தொல்லை நூல்வரம்பு
  முழுதும்கண் டான்நந்தி மல்லைஅம்
       கானல் முதல்வனுக்குப்
  பழுதுகண் டாய்இதைப் போய்ப் பகர்
       வாய்சிறைப் பைங்குருகே

  (நந்.கலம்பகம் - 7)

  (பொழுது = சூரியன்; போ = மறைய; ஆய் = தாய்; பொய்யற்கு = பொய் பேசுகின்றவனுக்கு; தொல்லை = பழைய; வரம்பு = எல்லை; மல்லை = மாமல்லபுரம்; கானல் = கடல் துறை; பழுது = குற்றம்; குருகு = கிளி)

  இந்தப் பாடலின் பொருளைப் பார்ப்போமா? நந்திவர்மனிடம் காதல் கொள்கிறாள் ஒரு பெண். காதல் துன்பம் அவளை வருத்துகிறது. அப்போது அவள் ஒரு கிளியைக் காண்கிறாள். அதை அழைக்கிறாள். எப்படி அழைக்கிறாள். சிறகுகளை உடைய பச்சை நிறம் கொண்ட கிளியே! என்று அழைக்கிறாள். பின் தன் செய்திகளை அப்பெண் அந்தக் கிளியிடம் கூறுகிறாள்.

  கிளியே! சூரியன் மறைந்து விட்டது. மாலைப்பொழுது வந்து விட்டது. நான் நந்திவர்மனிடம் காதல் கொண்டதைத் தாய் அறிந்து விட்டாள். எனவே, மாலைப் பொழுதில் என்னை என் தாய் திட்டி வீட்டிலே இருக்கச் செய்து விடுகிறாள்.

  நந்திவர்மன் பழைமையான இலக்கிய நூல்களை நன்கு கற்றுத் தெளிந்தவன். மாமல்லபுரம் என்ற இடத்தைச் சார்ந்த அழகிய கடல் துறைக்குத் தலைவன். அவன் பொய் பேசுகின்றவன். ஏன் எனில் அவன் வருவேன் என்று என்னிடம் கூறினான். ஆனால் வரவில்லை. இவ்வாறு பொய் பேசும் நந்திவர்மனிடம் கிளியே நீ செல். சென்று எப்போதும் நான் அவனையே எண்ணி ஏங்கிக் கொண்டிருப்பதாகக் கூறு. இவ்வாறு பொய் கூறுவது அவன் தகுதிக்கு ஏற்றது அல்ல என்றும் கூறுவாய் என்று அந்தப் பெண் கிளியிடம் தூது வேண்டுகிறாள்.

  4.3.7 மேகம்

  கலம்பக இலக்கிய உறுப்புகளில் ஒன்று மேகம் என்பதும் ஆகும். இந்த உறுப்பும் தூதுப் பொருளைக் கொண்டதாக உள்ளது. தலைவனிடம் தலைவி காதல் கொள்கிறாள்.


   

  தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்கின்றான். தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி மேகத்தைத் தூது விடுவதாக அமையும் உறுப்பு மேகம் என்று அழைக்கப்படுகிறது. மேகம் என்ற இந்த உறுப்பு கார், குளிர் என்ற பெயர்களாலும் அழைக்கப்படும். நந்திக் கலம்பகத்தில் தலைவன் தலைவியிடம் மேகத்தைத் தூது அனுப்புவதாக இந்த மேகம் என்ற உறுப்பு அமைகிறது. அந்த நந்திக் கலம்பகப் பாடல் இதோ.

  ஓடுகிற மேகங்காள்! ஓடாத தேரில்வெறும்
      கூடு வருகுதுஎன்று கூறுங்கோள் - நாடியே
  நந்திச்சீ ராமன்உடை நல்நகரில் நல்நுதலைச்
      சந்திச்சீர் ஆம்ஆகில் தான்

  (நந்.கலம்பகம் - 110)

  (ஓடாத = விரைந்து செல்லாத; கூடு = வெறும் உடல்; நுதல் = நெற்றி; இராமன் = இராம பிரான்; சந்திச்சீர் = சந்தித்தீர்)

  தலைவன் தலைவியுடன் மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். இல்லற வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியுடன் அமையப் பொருள் வேண்டும் அல்லவா? எனவே பொருள் தேட வெளி ஊருக்குச் செல்கின்றான். செல்லும் போது தலைவன் தலைவியிடம் ஒரு குறிப்பிட்ட காலம் வந்ததும் வந்து விடுவேன் என்கிறான். தலைவன் குறிப்பிட்ட காலம் வந்து விட்டது. எனவே, தேரில் ஏறித் தலைவியை நோக்கி வருகின்றான். அப்போது மேகத்தைப் பார்க்கின்றான். அதைத் தலைவியிடம் தூது செல்லுமாறு வேண்டுகிறான்.

  நில்லாமல் வேகமாக ஓடும் மேகங்களே! என்று தலைவன் மேகத்தை அழைக்கின்றான். மேகங்களே! இராம பிரான் போன்றவன் என் மன்னனாகிய நந்திவர்மன். அவனுடைய நகரம் காஞ்சிபுரம். அந்த நகரில் என் தலைவி வாழ்கிறாள். அவள் அழகிய நெற்றியை உடையவள். என் தலைவியை நீங்கள் கண்டீர்கள் ஆனால் அவளிடம் நான் கூறுகின்ற இந்தச் செய்தியைக் கூறுங்கள். விரைந்து ஓடாத தேரில் உன்னைக் காணும் விருப்பத்துடன் வெறும் உடம்பு ஒன்று வந்து கொண்டிருக்கிறது என்று கூறுங்கள் என்று தலைவன் மேகத்திடம் வேண்டுகிறான்.

  இந்தப் பாடலின் இலக்கியச் சிறப்பைப் பார்ப்போமா? மேகங்கள் விரைந்து ஓடுகின்றன. அந்த வேகத்துடன் ஒப்பிடும் போது தலைவன் வரும் தேரின் வேகம் குறைவே. எனவே ஓடாத தேர் என்று கூறுகிறான். எனவே, தன் தேரைவிட விரைந்து செல்லும் மேகங்களைத் தலைவியிடம் தூது அனுப்புகிறான். இந்தப் பாடலில் ஓடுகிற, ஓடாத என்ற எதிர் எதிர்ச் சொற்கள் இடம் பெறுகின்றன.

  அடுத்து, தலைவன் தன்னை வெறும் கூடு என்கிறான். ஏன் இவ்வாறு கூறுகிறான். தலைவனுடைய உயிர் தலைவியிடம் உள்ளது. எனவே, தேரில் உள்ளது உயிர் இல்லாத வெறும் உடம்பே. இவ்வாறு கூறித் தலைவன் தலைவியிடம் தான் கொண்ட காதலை வெளிப்படுத்துகிறான்.

  பெண்களின் அழகு அவர்களின் முகத்தில் தெரியும், அதிலும் குறிப்பாக நெற்றியில் தெரியும்; எனவே தலைவன் அழகிய நெற்றியை உடைய தலைவி என்கிறான்.

  4.3.8 சம்பிரதம்

  சம்பிரதம் என்றால் மாயம் என்று பொருள். இதை இந்திர சால வித்தை என்பர். இது உலக வழக்கில் கண் கட்டு வித்தை என்று கூறப்படுகிறது. சான்றாக ஒன்றைக் கூறலாம். கையில் சிறிது மண்ணை எடுத்துக் கொண்டு அதைச் சர்க்கரையாக மாற்றிக் காட்டுவது, இதை மாய வித்தை என்பர். இதையே சம்பிரதம் என்ற சொல் குறிக்கிறது. இவ்வாறு மாய வித்தைகள் செய்வதில் வல்லவர்கள் தங்கள் மாய வித்தையைப் புகழ்ந்து கூறுவதாக வரும் கலம்பக உறுப்பே சம்பிரதம் எனப்படும்.

  நந்திக்கலம்பகத்திலும் இந்த உறுப்பு உள்ளது. அந்தப் பாடலைப் பார்ப்போமா?

  வட்டன்றே நீர்இதனை மிகவும் காண்மின்
       மற்றைக்கை கொட்டினேன் மாவின் வித்துஒன்று
  இட்டுஅன்றே பழம்பழுப்பித்து உண்ணக் காண்மின்
       இவைஅல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று
  அட்டுஅன்றே பொன்றும்வகை முனிந்த நந்தி
       அவனிநா ராயணன் பாராளும் கோமான்
  குட்டன்றே மழை நீரைக் குடங்கை கொண்டு
       குரைகடலைக் குடிக்கின்றேன் குடிக்கின் றேனே

  (நந்.கலம்பகம் - 68)

  (வட்டு = மண் உருண்டை; கை கொட்டினேன் = கையில் போட்டு உள்ளேன்; வித்து = விதை; இகல் = போர்; அட்டு = போரிட்டு; பொன்றும் வகை = அழியும் படி; முனிந்த = சினம் கொண்ட; அவனி = உலகம்; நாராயணன் = திருமால்; கோமான் = மன்னர்க்கு மன்னன்; குட்டு = ஊருணி; குடங்கை = உள்ளங்கை; குரை = ஒலிக்கும்)

  மாயவித்தை காட்டுபவன் கூறுகின்றான். ஐயாமார்களே! இதை நன்றாக உற்றுப் பாருங்கள். என் கையில் உள்ள இது என்ன? இது ஒரு மண் உருண்டை அல்லவா? இதை ஒரு கையில் இருந்து மற்றொரு கையில் போடுகிறேன். இந்த மண் உருண்டையில் ஒரு மாங்கொட்டையை வைக்கிறேன். அதை உடனே செடியாக முளைக்க வைப்பேன். பின்பு அதில் மாம்பழங்கள் பழுக்கச் செய்வேன். அதை உங்களுக்கு உண்ணவும் தருவேன். இது கூடப் பெரிய வித்தை அல்ல. இன்னொன்றையும் செய்வேன். அது என்ன?

  நந்திவர்மன் மன்னன், அவன் தெள்ளாறு என்ற இடத்தில் பகைவர்களுடன் போர் செய்தான். அந்தப் போரில் பகைவர்களை அழித்தான். அவன் மண் உலகத் திருமால் போன்றவன். உலகை ஆளும் மன்னர்களுக்கு எல்லாம் மன்னன். அவன் நாட்டில் ஊருணிகள் உள்ளன. ஊருணி என்றால் என்ன? ஊர் + உணி = ஊருணி. ஊரில் உள்ள மக்கள் உண்ணும் நீர் நிறைந்த குளங்கள். அந்த ஊருணியிலுள்ள நீரை மட்டும் அல்லாது மேகம் பொழியும் மழை நீரையும் என் உள்ளங்கையில் அடக்கி விடுவேன். அது மட்டும் அல்ல. கடல் நீர் முழுவதையும் குடித்து விடுவேன். இதுவும் எனக்கு ஒரு பெரிய செயல் அல்ல என்று மாய வித்தை செய்பவன் தன் திறமையைக் கூறுகின்றான்.

  இப்பாடல் மூலம் நந்திவர்மன் என்ற மன்னனின் வீரமும் அவன் நாட்டின் நீர் வளமும் காட்டப்படுகின்றன.

  4.3.9 பாண்

  கலம்பக இலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று பாண் என்பதும் ஆகும். பாண் என்றால் பண்களை இசைக்கும் தன்மை என்று பொருள். பண் என்பது இசை ஆகும். பண் என்பது பாண் என்று ஆனது. இது பண்ணைப் பாடுவோனைக் குறிக்கும். இந்த உறுப்பு பாணன் என்ற பெயராலும் குறிக்கப்படும் பாண் என்ற உறுப்பாக அமைந்த நந்திக் கலம்பகம் பாடல்  இதோ தரப்படுகிறது.

  உரை வரம்பு இகந்த உயர்புகழ்ப் பல்லவன்
  அரசர் கோமான் அடுபோர் நந்தி
  மாவெள் ளாற்று மேவலர்க் கடந்த
  செருவேல் உயர்வு பாடினன் கொல்லோ
  நெருநல் துணியரைச் சுற்றிப்
  பரடு திறப்ப தன்னால் பல்கடைத்
  திரிந்த பாணன் நறும்தார் பெற்றுக்
  காஅர் தளிர்த்த கானக் கொன்றையின்
  புதுப்பூப் பொலன்கலன் அணிந்து
  விளங்கு ஒளி ஆனனன் இப்போது
  இளம்களி யானை எருத்தம்மிசை அன்னே

  (நந்.கலம்பகம் - 27)

  (உரை = புகழ்; வரம்பு = எல்லை; இகந்த = கடந்த: அடு = கொல்லும்; மா = பெரிய; மேவலர் = பகைவர்; கடந்த = வென்ற, செரு = போர்; உயர்வு = பெருமை; பாடினன் கொல்லோ = பாடினான் போலும்; நெருநல் = நேற்று; அரை = இடை; பாடு = குதிகால்; திறப்ப = தோன்றும்படி; கடை = வீட்டு வாசல்; கார் = மழை; பொலன் கலன் = பொன்னால் ஆகிய அணிகலன்; களி = களிப்பு; எருத்தம் = பிடரி; மிசை = மேல்)

  இப்பாடல் பாணனைக் கண்டவர்கள் கூறுவதாக அமைகின்றது.

  மக்கள் பலர் செல்கின்ற ஒரு பெரிய தெரு. அந்தத் தெருவில் ஒருவன் யானையின் மீது ஏறி வருகின்றான். அவன் மணம் மிகுந்த மாலை அணிந்துள்ளான். பொன்னால் ஆன அணிகலன்களை அணிந்துள்ளான். மகிழ்ச்சி நிறைந்த முகத்தை உடையவனாய் உள்ளான். இவன் யாராக இருக்கும் என்று மக்கள் எண்ணினர். அவன் அருகில் சென்று பார்க்கின்றனர். அவ்வாறு பார்த்த போது அவன் அந்த மக்களுக்கு அறிமுகம் ஆனவன்தான். அவன் யார்? நேற்று வரையிலும் இடையில் கந்தல் ஆடை உடுத்தி இருந்தான். குதிகால் தோன்றும்படி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று இரந்து அலைந்தவன். அந்தப் பாணனே இவன் என்று அறிந்து கொண்டனர். அந்தப் பாணனுக்கு இத்தனை சிறப்புகள் எவ்வாறு வந்திருக்கும் என்று எண்ணுகின்றனர். இறுதியில் அவர்கள் ஒரு முடிவுக்கு வருகின்றனர்.

  புகழ் மொழிகளின் எல்லையைக் கடந்தவன்; பரந்த புகழ்க்கு உரியவன். மன்னர்களுக்கு எல்லாம் மன்னவன்; கொல்லும் போரினைச் செய்தவன். வெள்ளாறு என்ற இடத்தில் போர் செய்து பகைவர்களைக் கொன்றவன். அவனே நந்திவர்மன் என்ற மன்னன். அந்த நந்திவர்மனது வேலின் பெருமைகளைப் புகழ்ந்து இவன் பாடியிருப்பான்.அதனால் இவனுக்கு இவ்வளவு சிறப்புகள் கிடைத்துள்ளன என்ற முடிவுக்கு வருகின்றனர்.