Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் : II
9. கடை திறப்பு மகளிரின் செயல்களுள் இரண்டினை விவரிக்க.
கலிங்கப் போர் முடிந்து வீரர்கள் சோழ நாடு திரும்புகின்றனர். ஆனால் தாம் வருவதாகக் கூறிய காலம் கடந்து பணி முடித்து வருகின்றனர். காலம் கடந்து வருவதால் மகளிர் ஊடல் கொள்கின்றனர். தம் கணவனை எதிர்கொண்டு வரவேற்காமல் கதவைத் தாழிட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் புலவர் மகளிரைக் கதவு திறக்க வேண்டுகிறார். இது கடை திறப்பு எனும் பகுதியாக அமைகின்றது. மகளிரின் பல்வேறு காதல் செயல்களையும் நிகழ்ச்சிகளையும் நினைவூட்டுகிறார் புலவர். பெண்கள் கூந்தலில் செங்கழுநீர் மலர்களைச் செருகுகின்றார்கள். செங்கழுநீர் மலர்களை மட்டுமா செருகுகின்றார்கள்? இல்லை! இவ்வுலகத்தில் வாழும் இளைஞர்களின் உயிர்களையும் பறித்துச் செருகுகின்றார்கள். கணவன்மார் குறித்துச் சென்ற காலம் வந்தது. அவர் வருகையை எதிர்பார்த்து மனைவியர் கதவைத் திறந்து வழிமேல் விழி வைத்துப் பார்த்து நின்றனர். கணவன்மார் வரவில்லை. துயரத்தால் வெறுப்பு உற்றுக் கதவைப் படார் எனச் சாத்தினர். இவ்வாறாக இரவு முழுவதும் திறப்பதும் சாத்துவதுமாக இருந்தனர். இதனால் கதவில் உள்ள சுழலும் குடுமி தேய்ந்தது. இதனைப் புலவர் நயம்படப் புனைந்துள்ளார்.