தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உயர்ந்த பண்புகள்

  • 5.4 உயர்ந்த பண்புகள்

    மனிதர்க்கு உரிய உயர்ந்த குணங்கள் சிலவற்றைத் தண்டலையார் சதகம் கூறியுள்ளது. இந்தப் பண்புகள் சிலவற்றை இனி அறியலாமா?

    5.4.1 இனிமை

    மனிதர்கள் முகம் மலர்ந்து இன்சொல் பேசுவதே சிறந்த பண்பாகும் என்கிறார் புலவர். கல்லும் உருகும் சொற்களை உடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்ட தண்டலையார் வளநாட்டில் கரும்பினால் மூடிய சர்க்கரைப் பந்தலிலே தேன்மழை பொழிந்து விடுவது இயல்பு தானே. பொற்குடையும் பொன்னாலாகிய அணிகலனும் கொடுப்பதை விட இனிமையாகப் பேசுவதே நன்மையாகும். அதுவும் தாமரை மலர் போன்று முகம் மலர்ந்து மரியாதையோடு இனிமையான சொல்லைச் சொல்லிப் பேசுதல் வேண்டும் (ண்.சத. 10).

    இன்சொல்லைப் போன்றே நன்றி மறவாமையும் சிறந்த பண்பாகக் கூறப்பட்டுள்ளது. ஆலம் விதை சிறியதாக இருந்தாலும் உருவம் பெரியதாகும். தினை அளவு ஒருவருக்குச் செய்த உதவியானது பனை அளவாய்ப் பெரியதாகித் தோன்றும். தண்டலையார் வளநாட்டில் உப்பிட்டவர்களை உயிர் உள்ளவரையும் மக்கள் நினைப்பர். இதனைத்

    துப்பிட்ட ஆலம்விதை சிறிது எனினும்
         பெரியதாகும் தோற்றம் போலச்
    செப்பிட்ட தினைஅளவு செய்தநன்றி
        பனைஅளவாய்ச் சிறந்து தோன்றும்
    கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார்
        வளநாட்டில் கொஞ்ச மேனும்
    உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்
         நினைக்கும் இந்த உலகம் தானே

    (தண்.சத. 12)

    (துப்பிட்ட (துப்பு + இட்ட) = பவளநிறம் உடைய, ஆலம் = ஆலமரம், கொப்பு = ஒருவகைக் காது அணி)

    என்று புலவர் விவரித்து உள்ளார்.

    5.4.2 பொறுமை

    மனிதர்க்கு இருக்க வேண்டிய உயர்ந்த குணங்களில் பொறுமை மிக முதன்மையான இடத்தை வகிக்கின்றது. பொறுமைக்குப் பாண்டவர் வரலாற்றைப் புலவர் எடுத்துக் காட்டி விவரித்துள்ளார். கொடிய துரியோதனன் முதலானவர்கள் திரௌபதியின் அரையில் கட்டப்பட்டிருந்த சேலையை உரித்தனர். அப்பொழுதும் பஞ்ச பாண்டவராகிய ஐவரும் மனம் அழியவில்லை. தமக்குரிய பொருளை அபகரித்து முழுதும் அழித்தாலும், உதைத்தாலும், பழியுண்டாகும்படி செய்தாலும் பொறுத்தவரே உலகை ஆள்வர். பொறாது பொங்கி எழுபவர் காடாளப் போவர் (தண்.சத. 17) என்று பொறுமையைப் பற்றிப் புலவர் கூறியுள்ளார். இதனைக்

    கறுத்தவிடம் உண்டுஅருளும் தண்டலையார்
        வளநாட்டில் கடிய தீயோர்
    குறித்து மனையாள் அரையில் துகில்உரிந்தும்
        ஐவர்மனம் கோபித்தாரோ
    பறித்து உரியபொருள் முழுதும் கவர்ந்தாலும்
        அடித்தாலும் பழிசெய் தாலும்
    பொறுத்தவரே உலகாள்வர் பொங்கினவர்
        காடுஆளப் போவர் தாமே

    (தண்.சத. 17)

    (கறுத்தவிடம் = பாற்கடலைக் கடையும்போது தோன்றிய நஞ்சு, ஐவர் = பாண்டவர்)

    என்ற பாடல் விளக்கும். இவ்வாறாகப் புலவர் மானுட குல மேன்மைக்கு வேண்டிய பண்புகள் பலவற்றையும் எடுத்து விளக்கி உள்ளதை அறிய முடிகின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 13:13:38(இந்திய நேரம்)