தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அரசர் நீதி

  • 5.6 அரசர் நீதி

    தண்டலையார் சதகம் உலக நீதியைக் கூறுவது போலவே அரச நீதி சிலவற்றையும் கூறி உள்ளது.

    5.6.1 கொடுங்கோல் கொடுமை

    திறமை இல்லாத அமைச்சர் அவையினில் நியாயம் இருப்பது இல்லை. அரசர்க்கு எல்லா அறிவுரையும் கூறவும் நியாய வழிகளைச் சொல்லவும் அமைச்சர் வேண்டுமே அன்றி வேறொருவர் சொல்லுதல் ஆகாது. (ண்.சத. 63) சிவபெருமான் திருத்தொண்டிற்குக் குறை செய்பவர்கள், நீண்ட கோலை உடையராய்ப் பயனற்ற வீணனைப் போல நியாயம் செய்வர். இவர்கள் நாட்டில் மழைதான் பெய்யுமோ? விளைச்சல்தான் உண்டோ? கொடுங்கோல் அரசன் வாழுகின்ற நாட்டை விடக் கடும்புலி வாழுகின்ற காடு நன்மை உடையது ஆகும். (ண்.சத. 55) என்று கொடுங்கோல் மன்னன் நாட்டைப் பற்றிப் புலவர் கூறியிருப்பதை அறிய முடிகிறது. நல்ல அமைச்சர் துணையும் இல்லாமல் நீதி கெட்டு ஆரவாரமாக ஆட்சி செய்யும் மன்னனது நாட்டை விடக் காடே சிறந்தது என்கிறார் புலவர்.

    5.6.2 செங்கோல் சிறப்பு

    செங்கோல் செலுத்தும் மன்னனையே உலகம் போற்றி வணங்கும். மன்னன் அறநெறி வழுவாமல் ஆட்சி நடத்த வேண்டும். செங்கோல் வளையாமல் உலகை ஆளுதல் வேண்டும். நாடு பல்வேறு வளங்களைப் பெறுவதாய் மன்னன் ஆட்சி அமைதல் வேண்டும். இவ்வாறு ஆட்சி செய்யும் மன்னனையே மக்கள் தெய்வம் என்பார்கள். இதற்கு மாறாகக் கொடுங்கோல் செலுத்தி ஆட்சி செய்யும் அறியாமை உடைய அரசனும் அவன் அமைச்சனும் மீளா நரகத்தில் அழுந்துவார்கள். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்:

    நாற்கவியும் புகழவரும் தண்டலையார்
        வளநாட்டில் நல்ல நீதி
    மார்க்கமுடன் நடந்து செங்கோல் வழுவாமல்
         புவிஆளும்வண்மை செய்த
    தீர்க்கமுள அரசனையே தெய்வம் என்பார்
        கொடுங்கோன்மை செலுத்தி நின்ற
    மூர்க்கமுள்ள அரசனும் தன்மந்திரியும்
        ஆழ்நரகில் மூழ்கு வாரே

    (தண்.சத. 38)

    (புவி = உலகம், வண்மை = வளமை, மூர்க்கம் = மூர்க்கத்தனம்/ கொடுமை)

    இவ்வாறு அரச நீதி பற்றிப் புலவர் பாடியுள்ளதை அறிய முடிகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 13:26:14(இந்திய நேரம்)