தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலக்கியச் சிறப்புகள்

  • 6.3 இலக்கியச் சிறப்புகள்

    திருக்கடவூர் அன்னை அபிராமி பற்றிய போற்றிப் பாடல்களாக இந்த அந்தாதி அமைந்துள்ளது. இந்த அந்தாதி சுட்டும் இரண்டு பொருள்கள் குறிப்பிடத்தக்கன.

    1) அன்னை அபிராமியின் திரு உருவ வருணனைகள்.
    2) அன்னை அபிராமியின் திரு அருள் செயல்கள்.

    6.3.1 அன்னையின் திருஉருவ வருணனை

    உதிக்கின்ற இளம் ஞாயிறும், உச்சித் திலகமும், மாணிக்கமும், மாதுளம் பூவும், குங்கும நீரும், கமலமும் போன்ற அம்பிகையின் திருமேனி சில சமயங்களில் அழகிய தோற்றமுடைய மின்னல் கொடிகள் ஆயிரம் ஒன்றாக வந்தாற் போன்று திகழ்கின்றது. அத்தகையாளே அபிராமியே என்னுடைய உயிர்த்துணையாகும் என்று பட்டர் பாடுகின்றார். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.

    உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
    மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
    துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
    விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே

    (அபி.அந். 1)

    (போது = மலர், கடி = குமணம், தோயம் = குழம்பு)

    • மணியின் ஒளியானவள்

    அபிராமியின் திருக்கைகளில் குளிர்ச்சி பொருந்திய மலர்க்கணைகள் உள்ளன. கரும்பு வில் உள்ளது. பாச அங்குசம் எனும் கருவி உள்ளது. (அபி.அந். 2) அபிராமி மாணிக்க மணி போன்றவள்; அம்மணியின் ஒளி போன்று சுடர்விடக் கூடியவள்; மாணிக்க மணிகள் இழைக்கப் பெற்ற ஆபரணம் போன்றவள்; அணிந்த அந்த ஆபரணங்களுக்கு அழகு தரக்கூடியவள்; அபிராமியை அணுகாதவர்க்குப் பிணியைத் தரவல்லவள்; பிணிக்கு மருந்தானவள் என்று புலவர் பாடியுள்ளார். இதனை,

    மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
    அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
    பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
    பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே

    (அபி.அந். 24)

    (பத்மம் = தாமரை)

    என்ற பாடல் விவரிக்கும். அபிராமியின் திருக்கைகளில் தங்குவது கரும்பு வில்லும் மலர்க்கணைகளுமே ஆகும். தாமரை போன்ற சிவந்த மேனியில் அணிவது வெண்முத்து மாலையாகும். மேலும் மணிகள் இழைத்த மேகலையும் பட்டுடையையும் அன்னை அணிந்து உள்ளாள் (அபி.அந். 37).

    • சிவந்த வாயினள்

    பவளக் கொடிபோல இனிமை கனிந்த சிவந்த வாயை உடையவள் அபிராமி. குளிர்ச்சி பொருந்திய புன்முறுவலை உடையவள்; கூடவே வெண்மையான பற்களை உடையவள்; துடி இடையைத் துவளச் செய்யும் தனங்களை உடையவள் என்று பட்டர்பிரான் அன்னையை வருணித்து உள்ளார்.

    பவளக் கொடியிற் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
    தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
    துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையாள்
    அவளைப் பணிமின் கண்டீரமராவதி யாளுகைக்கே.

    (அபி.அந். 38)

    (பனி = குளிர்ச்சி, அமராவதி = தேவர்களின் இருப்பிடம்)

    என்ற பாடல் மேலே கூறிய கருத்தை விவரிக்கும்.

    சின்னம் சிறிய இடையில் செம்பட்டுச் சாத்தப்பெற்றுள்ளது. தனங்களில் (மார்பில்) முத்து ஆரம் அணியப்பட்டுள்ளது. கரிய கூந்தலில் பிச்சிப்பூ மாலை சூட்டப் பெற்றுள்ளது. (அபி.அந்.53) ஆயிரம் மின்னல்கள் ஒன்றாய்த் திரண்டு பெண்ணாக மாறிக் கை கால் முதலிய உறுப்புகளோடு உருவமாக உருப்பெற்று ஒரு வடிவமாக விளங்குகின்றவள் அபிராமி (அபி.அந். 55). நீண்ட வில்லும், கரும்பு, தாமரை முதலிய கணைகளுமாக முத்தொழிலும் செய்து நிற்பவள் அபிராமி (அபி.அந். 59).

    இவ்வாறாக அபிராம பட்டர் அன்னை அபிராமியைப் பல்வேறு நிலைகளில் வருணித்துப் பக்தி செலுத்தியதை அறிய முடிகின்றது.

    6.3.2 அன்னையின் அருள் செயல்கள்

    அன்னை அபிராமியின் அருள் செயல்கள் பலவற்றைப் புலவர் புகழ்ந்துரைத்துள்ளார். அபிராமியின் கடைக்கண்கள் என்னென்ன அருளை எல்லாம் வழங்கும்? பட்டியல் இடுகிறார் பட்டர். அபிராமியின் கடைக்கண்கள் தம் மெய்யன்பர்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் அடியார்களுக்குப் பொருளைக் கொடுக்கும்; கல்வியைத் தரும்; ஒருநாளும் சோர்வு அறியாத மனத்தைக் கொடுக்கும்; தெய்வத்தன்மை பொருந்திய பேரழகைக் கொடுக்கும்; வஞ்சம் இல்லாத சுற்றத்தைத் தரும்; நல்லன எல்லாவற்றையும் தரும் என்று பட்டர் விவரிக்கிறார். இதனைப் பின்வரும் பாடல் விளக்கும்.

    தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வுஅறியா
    மனம்தரும் தெய்வவடிவும்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
    இனம்தரும் நல்லனஎல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே
    கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

    (அபி.அந். 69)

    (தனம் = பொருள், வடிவு = அழகு, கனம் - மேகம்)

    • முத்தொழில் புரிபவள்

    படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்பவள் அன்னை அபிராமி என்கிறார் புலவர். பதினான்கு உலகங்களைப் பெறாமல் பெற்றவள் அன்னை அபிராமி; அவற்றைக் காப்பவளும் அவளே; பின்பு அவற்றை ஒடுக்குபவளும் அவளே ஆவாள். சிவபெருமானுக்கும் மூத்தவள் அபிராமி; திருமாலுக்கு இளையவளாகவும் இருப்பவள். அவள் பெரிய தவத்தை உடையவள். இச்செய்தியைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.


    பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
    காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
    மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
    மாத்தவளே உன்னை யன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

    (அபி.அ. 13)


    (புவனம் = உலகம், கரந்தவள் = மறைத்தவள், கறைக் கண்டன் - சிவன்)

    அபிராமி அன்னையும் ஐயனும் உமையொருபாகன் வடிவில் வந்து திருவடித் தீக்கை அருளிய நிகழ்ச்சியை அபிராம பட்டர் உள்ளம் உருக விவரிக்கிறார்.

    • சிவனோடு உருவம் கொண்டவள்

    அன்று பூத்த குவளை மலர் போலும் கண்களை உடைய அபிராமி தேவியும் சிவந்த நிறத்தை உடைய சிவபெருமானும் நம் பொருட்டு ஆண்பாதி பெண்பாதியாக உருவெடுத்து வந்து தம் மெய்யடியார்கள் நடுவில் இருக்கச் செய்து நமது சென்னியின் மீது திருவடிகளைப் பதித்து மலநீக்கம் செய்வதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ என்று புலவர் பாடுகிறார். இதனைப் பின்வரும் பாடல் விளக்கும்.

    புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்
    கண்ணியும் செய்ய கணவரும்கூடி நம்காரணத்தால்
    நண்ணி இங்கே வந்து தம்அடியார்கள் நடுஇருக்கப்
    பண்ணி நம்சென்னியின்மேற் பத்மபாதம் பதித்திடவே

    (அபி.அந். 41)


    (கண்ணி = கண்களை உடையவள், சென்னி = தலை, பத்மம் = தாமரை)

    ஒரே உருவமாகத் தோன்றுபவள் அபிராமி; எல்லா இடத்திலும் பரவி நிற்கக் கூடியவள் (நீக்கமற நிறைந்திருப்பவள்); பாசக்கயிற்றையும் தோட்டி என்னும் கருவியையும் உடையவள்; ஐந்து கணைகளை உடையவள்; வஞ்சகர்களது உயிரை உண்ணும் சினமிக்கவள்; கரு நிறமுடைய காளி; வீரத்தை உடைய பைரவி; சூலத்தை உடையவள் என்று புலவர் அபிராமியை வாழ்த்துகிறார் (அபி.அந். 77).

    • அடியாரைக் காப்பவள்

    பாலும் தேனும் பாகும் போலும் இனிய சொற்களை உடையவள் அபிராமி. இவள் கொடிய யமன் சூலத்தை அடியார் மேல் செலுத்தும்போது காப்பவள். அவ்வாறு சூலாயுதத்தை யமன் செலுத்தும் போது, திருமாலும் நான்முகனும் தேடவும் தேவர்கள் தேடவும் மறைகள் தேடவும் அப்பாற்பட்டு நிற்கும் அபிராமி தோன்றுவாள். திருவடிகளையும் வளையணிந்த திருக்கைகளையும் உடன்கொண்டு அடியார்முன் தோன்றிக் காப்பாள். திருவடிகளால் யமனை உதைக்கவும் கைகளால் புடைக்கவும் செய்வாள். இதனைப் பட்டர்.

    மாலயன்தேட மறைதேட வானவர்தேட நின்ற
    காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்தகப்பு
    வேலைவெங் காலன்என்மேல் விடும்போது வெளிநில்
                                                  கண்டாய்
    பாலையும் தேனையும் பாகையும்போலும் பணிமொழியே

    (அபி.அந். 86)

    (மால் - திருமால், அயன் - பிரம்மன், சூடகம் - வளையல், கதித்த - வேகம், கப்பு - சூலாயுதம், காலன் - யமன்)

    என்று போற்றிப் பாடுகின்றார்.

    • அன்பர்க்கு அருள்பவள்

    உண்மையான அன்பு பொருந்திய உள்ளத்தில் மட்டுமே அபிராமி எழுந்து அருளுவாள் வஞ்சகர்களின் பொய் அன்பு பொருந்திய உள்ளத்தில் ஒருகாலத்தும் தோன்றாள். அபிராமியின் தாமரைத் திருவடியைத் தலையில் சூடி ஊடல் தீர்த்தார் சிவபெருமான். அவ்வாறு சூடியபோது சிவன் கையில் உள்ள வேள்வித் தீயும் தலையில் உள்ள கங்கையாறும் எங்கே ஒளிந்தன என்று புலவர் வினவுகிறார். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.

    தைவந்து நின்னடித் தாமரைசூடிய சங்கரற்குக்
    கைவந்த தீயும் தலைவந்தவாறும் கரந்ததுஎங்கே
    மெய்வந்த நெஞ்சின்அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
    பொய்வந்த நெஞ்சில் புகவறியா மடப்பூங்குயிலே

    (அபி.அந். 98)

    (விரகர் = தீயவர்)

    இவ்வாறாக அபிராம பட்டர் அன்னை அபிராமியின் அருள் செயல்கள் பலவற்றைப் பாடிப் போற்றியுள்ளதை அறிய முடிகிறது.

     

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 17:29:27(இந்திய நேரம்)