தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - C02124-தமிழ் எழுத்துகள் சொற்களாவதன் தனித்தன்மை

  • 4.5 தமிழ் எழுத்துகள் சொற்களாவதன் தனித்தன்மை

    தமிழில் எழுத்துகள் இணைந்து பொருள் தரும் நிலையில் மொழியாக (சொல்லாக) உருவாகின்றன. அவ்வாறு சொற்களாக மாறுகின்றபோது எழுத்துகளில் மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்னும் ஒரு வினா நம்முன் தோன்றக் கூடும்.

    தமிழில் எழுத்துகள் தனித்து ஒலிக்கும்போது எந்த ஒலியைப் பெற்று இருக்கின்றனவோ அதே ஒலியைத் தான் அவை சொற்களில் வந்து அமையும்போதும் பெறுகின்றன. ஓர் எழுத்து சொல்லாக வரும் போதும், அல்லது பல எழுத்துகள் சேர்ந்து ஒரு சொல்லாக உருவாகும்போதும் எழுத்தின் ஒலிகளில் மாற்றம் நிகழ்வதில்லை என்பதே தமிழ் எழுத்துகளின் தனித்தன்மை ஆகும்.

    இக்கருத்தை அரிய உவமை ஒன்றின் மூலம் நன்னூல் உரையாசிரியர் விளக்குகின்றார். “எழுத்துகள் இணைந்து சொற்கள் உருவாகும்போது அது மணம் தரும் நறுமணப் பொடிகள் (மஞ்சள், சுண்ணம் போன்றவை) கலந்த கலவையாக இருத்தல் கூடாது. அது வண்ணமலர்களால் தொடுக்கப்பட்ட மாலையாகத் திகழவேண்டும்” என்பதே அந்த உவமை ஆகும். இந்த உவமை உணர்த்தும் பொருள் என்னவெனில், சுண்ணப் பொடியில் கலந்துள்ள நறுமணப் பொடிகளைத் தனித்தனியே பிரித்து எடுக்க முடியாது. அதைப்போல அல்லாமல், சொற்களில் அமைந்திருக்கும் எழுத்துகள் தங்கள் ஒலி அடையாளங்களை இழந்து விடுதல் கூடாது.

    மாறாக, மலர் மாலையில் காணப்படும் பூக்கள் இணைந்து நின்றாலும், அவை மாலையில் இருப்பது தனித்தனியாகத் தென்படுகின்றது. இதைப் போலவே தமிழ் எழுத்துகள் சொற்களில் அமையும் போது அவை ஒவ்வொன்றும் தத்தம் ஒலிஅமைப்பை இழக்காமல் இருக்கின்றன என்பதை இந்த உவமை உணர்த்துகிறது.

    இக்கருத்தை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். தமிழில் எ - ண் - ண - ம் என்று நான்கு எழுத்துகள் சேர்ந்து ‘எண்ணம்’ என்ற சொல் உருவாகிறது. இந்த நான்கு எழுத்துகள் தனித்தனியே ஒலிக்கும்போது எழும் ஒலி ‘எண்ணம்’ என்ற சொல்லாகும் போதும் மாறிவிடுவதில்லை.

    எனவே தமிழ் எழுத்துகள் தனித்து ஒலிக்கும் போதும், இணைந்து நின்று சொல்லில் அமையும் போதும் தங்கள் ஒலியின் தன்மையைப் பெரும்பாலும் இழப்பதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:51:42(இந்திய நேரம்)