தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இடைநிலைகள்

  • 6.2. இடைநிலைகள்

    பகுபத உறுப்புகளில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் இருக்கும் உறுப்பு இடைநிலை எனப்படும். இதன் பெயரே இது பகுபதத்தில் நிற்கும் இடத்தைக் குறித்தலைக் காணலாம்.

    • வகைகள்

    பகுதி, விகுதிகளைப் போலவே இடைநிலைகளையும் இரு பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம்.

    (1)
    பெயர் இடைநிலை
    (2)
    வினை இடைநிலை

    6.2.1 பெயர் இடைநிலைகள்

    வினையாலணையும் பெயர் அல்லாத பிற பெயர்களுக்கு இடையில் நிற்கும் இடைநிலைகள் பெயர் இடைநிலைகள் எனப்படும்.

    பெயர் இடைநிலைகளாக ஞ், ச், ந், த் என்னும் எழுத்துகள் அமைகின்றன.

    அறின், இளைன், கவின்
    - ‘ஞ்’ இடைநிலை
    வலைச்சி, இடைச்சி, புலைச்சி
    - ‘ச்’ இடைநிலை

    செய்குன், பொருன்
    - ‘ந்’ இடைநிலை
    வண்ணாத்தி, பாணத்தி
    - ‘த்’ இடைநிலை

    6.2.2 வினை இடைநிலைகள்

    வினைப் பகுபதத்தில் காலம் காட்டும் இடைநிலைகளை வினை இடைநிலைகள் என்பர். இந்த இடைநிலைகள் உணர்த்தும் காலத்தைக் கருத்தில் கொண்டு அவற்றை மூன்றாகப் பிரிக்கலாம் அவை,

    (1)
    இறந்தகால இடைநிலைகள்
    (2)
    நிகழ்கால இடைநிலைகள்
    (3)
    எதிர்கால இடைநிலைகள்

    என்பன.

    • இறந்தகால இடைநிலைகள்

    த், ட், ற் என்னும் மெய்களும், இன் என்பதும் ஐம்பால் மூவிடங்களிலும் இறந்த காலத்தைத் தருகின்ற வினைப் பகுபதங்களுடைய இடைநிலைகளாகும். இதனை, நன்னூல்,

    தடற ஒற்று, இன்னே ஐம்பால் மூவிடத்து
    இறந்த காலம் தரும் தொழில் இடைநிலை
          (142)

    என்று விளக்குகின்றது.

    இதற்கான எடுத்துக்காட்டைப் பின்வருமாறு காண்போம்.

    நடந்தான், பார்த்தான்
    - ‘த்’ இடைநிலை
    கொண்டான், விண்து
    - ‘ட்’ இடைநிலை
    நின்றான், தின்றான்
    - ‘ற்’ இடைநிலை
    ஒழுகினான், வழங்கினான்
    - ‘இன்’ இடைநிலை

    ‘இன்’ என்னும் இடைநிலை மட்டும் சில இடங்களில் இறுதி மெய் ‘ன்‘ கெட்டு ‘இ’ மட்டும் தனித்து வரும். சில இடங்களில் ‘இ’ கெட்டு ன் மட்டும் வரும்.

    எடுத்துக்காட்டு:

    எஞ்சியது
    - எஞ்சு+இ(ன்)ய்+அ+து இதில் ‘ன்’ கெட்டு ‘இ’ வந்தது.
    போது
    - போ(இ)ன்+அ+து. இதில் ‘இ’ கெட்டு ‘ன்’ மட்டும் உள்ளது.
    • நிகழ்கால இடைநிலைகள்

    வினைப் பகுபதத்தில் நிகழ்காலத்தைக் காட்டும் இடைநிலைகளாக ஆநின்று, கின்று கிறு என்ற மூன்றினை நன்னூல் விளக்குகின்றது.

    ‘ஆநின்று கின்று, கிறு மூவிடத்தின்
    ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைநிலை,      
    (143)

     

    செல்லாநின்றான், நடவாநின்றான்
    - ஆநின்று
    செல்கின்றான், நடக்கின்றான்
    - கின்று
    செல்கிறான், நடக்கிறான்
    - கிறு

    இதைப்போலவே இவ்வினை இடைநிலைகளை மற்ற பால், இடம் ஆகியவற்றிலும் இணைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    • எதிர்கால இடைநிலைகள்

    எதிர்காலத்தைக் காட்டும் இடைநிலைகள் எதிர்கால இடைநிலைகள் எனப்படும். இவை, ப், வ், என இரண்டு மெய்களாகும். இரண்டிற்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

    நடப்பான், துறப்பான்
    - ப்
    வருவான், வருவாள்
    - வ்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 17:50:41(இந்திய நேரம்)